தனிமை என்பது வரமா? சாபமா?!
தனிமை என்பது வரமென்றால்
தனிமையில் போடும் சிறையென்பது
தண்டனைகளின் உச்சமாக உள்ளதே..
தனிமை என்பது சாபமென்றால்
தனிமையில் தோன்றும் ஞானமென்பது
தனித்துவத்தின் அம்சமாக உள்ளதே..
ஆனால்; இங்கே எது தனிமை?!
தன் மெய் தனித்திருக்க
தான் எங்கோ இணைந்திருத்தல்
தனிமை என்றாகுமா? இல்லை;
தான் இங்கே கூட்டத்தோடிருக்க
தான் எங்கோ இணைத்திருத்தல்
தனிமை இல்லை என்றாகிடுமா?
எனில்;
தனித்திருத்தல் ஒன்றும் தனிமையல்ல
தனித்தும் இணையாதிருத்தலே தனிமை!
பாலின் தனிமைக்குள்
நெய்யென்ற ஞானம்போல்;இங்கே
ஒவ்வொரு தனிமைக்குள்ளும்
ஓவ்வோர் அர்த்தமுண்டு...
சில தனிமைகள்
மலரின் தன்மைபோல் மணக்கும்!
ஆனால்...
சில தனிமைகள்
சாக்கடை நீரைப்போல் குமட்டும்!
"தனிமையிலே இனிமை காண முடியுமா?!"
என்ற கவியரசரின் கேள்விக்கு
'இனிது இனிது ஏகாந்தம் இனிதென்ற'
ஔவையின் கூற்று பதிலென்றால்
ஏகாந்தத் தனிமையும்
எதார்த்த தனிமையும்
ஒன்றல்லதானே?!
உண்மையைச் சொல்லுங்கள்
இங்கே யார்தான் தனிமையில் உள்ளார்கள்?!
நீங்கள்...
புவியின் எந்த மூளைக்குச் சென்றாலும்
புவிகூட தனிமையில் இல்லையே...
வேற்றுக்கிரகம் சென்றாலும்
அதுவும் பிரபஞ்சத்தின் அங்கம்தானே...
ஆக...
தனிமை என்பது
தனித்த மெய்யில் அல்ல..
தனித்துவமான மெய்யென்றே
தனிமையை உணர்ந்தால்
தனிமை இனிமையே...
தனிமை முழுமையே
இல்லையேல்...
தனிமை வெறுமையே
தனிமை வெறும் மெய்யே....
செ.இராசா
08/04/2021
தனிமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment