26/02/2021

அனுபவப் பதிவு-3----------------நான்காம் மாதம்----கட்டுரை

  

 


#அஸ்ஸாம்_மேகாலயா
#நான்காம்_மாதம்

அஸ்ஸாமைவிட்டுப் போய்விடலாம் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் நான் டைரியில் எழுதிய அந்த மூன்று குறிப்புகளைப் பார்த்துக்கொள்வேன். ஆமாம்... அது என்ன அந்த குறிப்புகள்?!

1. இந்த இடத்தில் சூழ்நிலைகளைச் சமாளித்து எப்படியும் சாதித்தே ஆக வேண்டும்.
2. ஹிந்தி மொழி பேசுவோரிடம் ஹிந்தியில் மட்டுமே பேசும் அளவிற்கு அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
3. நாளும் தியானம் செய்து தன்னம்பிக்கையைப் பெருக்க வேண்டும்.

ஆம்.. இந்தக் குறிப்புகளே எனக்கு அவ்வப்போது ஊக்கம் தந்தது. கவுகாத்தி இரயில் நிலையத்தில் என்னைச் சந்திக்க வந்த அந்தப் பொறியாளர் சந்திரன் என்பவரைத் தவிற வேறு யாருமே தமிழர் இல்லை. அவரும் வந்த அன்றே  போய்விட்டார். எங்க அப்பாவும் திரும்பிவிட்டார்.

வேலைபற்றி விளக்க மேகலாயாவின் தலைநகரமான சில்லாங்கில் இருந்து முதலாளி ரபிஜெயின் மிகவும் விலை உயர்ந்த காரில் அந்த மோசமான சாலை வழியாக பர்னிகாட்‌ வந்தார்‌. மேகாலயா என்றால் மேகங்கள் சூழ்ந்த என்றே பொருள்படும். எனில் அதன் தலைநகரம் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்?; உலகிலேயே அதிக மழைபொழியும் சிரபுஞ்சியும் அதன் அருகில்தான் உள்ளது. அந்த ஊரில் இருந்து முதலாளி வருவதாகச் சொன்னார்கள். என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு அழகான ஆங்கிலத்தில் பேசினார். நானும் ஓரளவிற்குப் பேசினேன். அவர் முதலில் சொன்னது. "நான் ஏதோ பெரிய ஆளாக இருப்பீர்கள் என்றே நினைத்தேன். சிறு ஆளாக உள்ளீர்களே.. பரவாயில்லை. இளைஞர்தான் எனக்குத் தேவை. ஹிந்தி தெரியுமா என்றார்?! தெரியாது என்றேன். பரவாயில்லை Broken English பேசி வேலை வாங்குங்கள் என்றார். நானே அப்படித்தான் பேசுவேன் என்றேன். அவர் சிரித்தேவிட்டார். பிறகுதான் தெரிந்தது அங்கே உள்ளவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது என்று? அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிப் புரிவதற்குள் கண்ணில் தண்ணீர் வந்துவிடும். போய்விடலாமா என்ற எண்ணம் எப்போதெல்லாம் மேலோங்குகிறதோ. அப்போதெல்லாம் அந்த டைரியின் குறிப்புக்களைத்தான் பார்த்துக்கொள்வேன்.

எனக்குமேலே ஒரு வங்காளத்தைச் சேர்ந்த முகர்ஜி என்ற பெயரில் ஒரு PM இருந்தார். எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்னவென்றால்,ஒரு தொழிற்சாலை அமைக்க அனைத்து கட்டிடப் பணிகளையும் செய்ய வேண்டும். ஏற்கனவே அங்கு முறுக்குக் கம்பி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இது முறுக்குக்கம்பிக்கு செய்யத் தேவையான மூலப்பொருளான இரும்பு கட்டிகள் செய்யும் ஆலை. மிகப்பெரிய ஆலை.... அதில் ஒரு 33kV மின்நிலையம், எடை தாங்கும் நிலையம், மேல்நிலை தண்ணீர் தொட்டி.....என்று அனைத்தையும் அங்கே உள்ள குட்டி குட்டி ஒப்பந்ததாரர்களை வைத்து வேலை செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர் என்றவுடன் பெரிய அளவில் நினைக்க வேண்டாம். இவர்களெல்லாம் வேலையாட்களை அழைத்து வரும் குழுத் தலைவர்கள்போல்தான். கட்டுமானப்பணி என்றால் மூங்கிலில் கூரைவீடு கட்ட மட்டுமே தெரியும். தூக்குண்டு பார்ப்பது, மூலைமட்டம் பார்ப்பது....என எதுவும் தெரியாது. எனக்கு அவர்களின் மொழி தெரியாது. நான் வேலை வாங்க வேண்டும். இருந்தாலும் அவர்களோடு இணக்கமாகப் பழகியதில் நான்கே மாதங்களில் நானும் மொழி கற்றுக்கொண்டேன். அவர்களும் வேலையில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டனர். அதில் அன்வர் அய்னுல் என்ற இருவர் நல்ல நண்பர்களாக மாறியும்விட்டனர். அவர்களோடு சேர்ந்து ஆட்டோவிலேயே சில்லாங் போய்வந்த அனுபவம் இன்னும் புதுமையானது. போகும் வழியில் படாபானி என்ற ஒரு ஏரியில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

நம்ம ஊர் சாப்பாடும் நம்ம தமிழ் மொழி பேசுவோரும் இல்லாமல் ஏதோ எதுவுமே இல்லாத உணர்வும் இருந்து கொண்டே இருந்தது. அவர்களுடைய எல்லா உணவிலும் கடுகெண்ணைய் வந்து மூக்கைத்துளைத்தது. பின்னர் அதுவும் பழகிவிட்டது. நான் தங்கி இருந்த அறையில் கந்த சஷ்டி கவசம், விவேகானந்தர் பாடல், உதயா என்ற படப்பாடல் இது மட்டுமே எப்போதும் ஒலிக்கும். காரணம் அவை மட்டுமே என்னிடம் இருந்தன. அவை மட்டுமே என்னோடு தமிழ் பேசின. நான் வெளியே உள்ள எஸ்டிடி பூத்தில் ஊருக்குப் பேசும்போது கிடைக்கும் சந்தோசம் மட்டுமே...அதுவும் சில நிமிடங்களே.... எப்போதாவது அந்த பூத்தில் தமிழ்நாட்டு இராணவத்தினர் வருவார்கள் அப்போது அவர்களோடு சில நிமிடங்கள் பேசுவது என்பது மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுக்கும்.

இப்படிப்போன வாழ்வில் திடீரென்று அப்பாவிடம் இருந்து போன் வந்தது. துபாயில் வேலை உள்ளதாகவும், அம்மன் பட்டியில் உள்ள பெரியகருப்பன் பெரியப்பா ஏற்பாடு செய்துள்ளதாகவும். கிராமங்களில் வேறு வேறு சமுதாயமாக இருந்தாலும் பெரியப்பா சித்தப்பா என்றுதான் உண்மையில் பழகுவோம்.... இல்லை இல்லை வாழ்வோம்.

பாதியில் இந்த வேலையை உதறிவிட்டுப் போவதா? இல்லை என்னை நம்பிய இந்த நிறுவனத்தில் இருந்து வேலை பார்ப்பதா என்று ஒரே குழப்பம். இதற்கிடையில் என்னையும் என் வேலையையும் பிடித்துப்போன PM முகர்ஜி, நான் போகமுடியாத அளவிற்கு தன் வேலையை ஆரம்பித்தார். அங்கே கூலிப்படை தாதாகிரி மிரட்டல் எல்லாம் சர்வசாதாரணம். அப்படி சிலரை வைத்து நீ எப்படிப் போகிறாய் பார்க்கலாம் என்று மிரட்டல் வந்தது. முதலாளியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்படிப் போவதென்றே தெரியவில்லை....?!!

....தொடரும்

✍️செ.இராசா

No comments: