#அஸ்ஸாம்_மேகாலயா
#அனுபவப்_பதிவு_2
#முதல்_பயணம்
 
சென்னை
 சென்ட்ரல் வந்துபார்த்தால் அஸ்ஸாம்போக பயணச்சீட்டு வேறு கிடைக்கவில்லை. 
அப்புறம் என்ன செய்யலாமென்று நின்று கொண்டிருந்தபோது கொஞ்சம் கூடுதலாகப் 
பணம் கொடுத்தால் வாங்கித்தருவதாக அங்கேயே நிறைய தரகர்கள் அனுகினார்கள். 
நான் இல்லை அப்பா நாம் அன்ரிசர்வுடு கோச்சிலாவது முதலில் கல்கத்தா வரை 
போய்விடலாம் என்று கூறி பயணச்சீட்டு வாங்கி ஏறிவிட்டோம். பின்னர்தான் 
தெரிந்தது அது எவ்வளவு பெரிய தவறென்று. ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு 
விதமான மொழி மற்றும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக ஏறி நசுக்கு நசுக்கென்று 
நசுக்கிவிட்டார்கள். வண்டி  ஆந்திரா ஒரிசா வழியாக மேற்கு வங்காள மாநிலம் 
ஹவுரா நிலையத்திற்குச் சென்றடைந்தது.
அங்கே இறங்கியவுடன்  
கவுகாத்திக்கு பயணச்சீட்டு எடுப்பதே பெரும் சவாலாக இருந்தது. காரணம் மொழி. 
அங்கே உள்ளவர்களுக்கு நாம் பேசும் ஆங்கிலம் புரியவில்லை. அவர்கள் பேசும் 
வங்காளம் நமக்குப் புரியவில்லை. அவர்கள் ஹிந்தியில் பேசினாலும் நமக்கு 
ஹிந்தி தெரியாது. முதலில் நமக்கு எது ஹிந்தி எது வங்காளம் என்றே 
தெரியவில்லை. இதில் அப்பா வேறு கடிந்து கொள்கிறார். என்ன ஒரு டிக்கெட் 
கூடவா பேசி எடுக்கத் தெரியவில்லை என்று. அவரே போய் தனக்குத் தெரிந்த 
உலகமொழியில் பேசி, அதாங்க செய்கை மொழி அதில்பேசி ஏசி கோச்சில் 
எடுத்துவந்தார். பிறகுதான் தெரிந்தது இரண்டு பயணச்சீட்டில் ஒன்றுதான் ஏசி 
என்று. அவரைவிட்டுப் பிரிய எனக்கும் பயம்.
இறுதியாக அங்கே தேனியைச் 
சேர்ந்த  தமிழ் இராணவ வீரர் ஒருவரின் உதவியால் நானும் அப்பாவும் ஒரு 
பெட்டியில் பயணித்தோம். எப்படி என்றால் நான் அவர்களின் மெத்தையைத் தரையில் 
விரித்துப் படுத்துக்கொள்ள அப்பா எனக்கான அதே இருக்கையில் பயணித்தார்
இப்படியாக
 கல்கத்தாவில் இருந்து தொடங்கிய பயணத்தில் அந்தத் தேனி காரர் 
சொல்லிக்கொடுத்த முதல் ஹிந்தி வார்த்தை என்ன தெரியுமா?  "சாவல்" என்ற 
வார்த்தை தான். ஆமாம், சோறு என்ற பொருள்தரும் அந்த வார்த்தையைத்தான் 
முதலில் கற்றுக்கொண்டேன். அதானே மனிதனின் முதல் தேவை. அந்த வார்த்தையும் 
அன்றைய சோறும் அவரால் அன்று கிடைத்தது. அப்படியே பயணித்து கவுகாத்தி 
வந்தடைந்தோம். அடேங்கப்பா...என்ன குளிர்?!  
சென்னையிலிருந்து 
கவுகாத்தி வந்த மொத்த மூன்றரை நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் கூடிக்கொண்டே 
போன குளிர் கவுகாத்தியில் வெடவெடவென்று ஆட்டியது. வெளியே வந்தால் 
சென்னையைச் சேர்ந்த சந்திரன் என்ற பொறியாளர் வந்திருந்தார். 
என்னை 
மேலும் கீழும் பார்த்த அவர் என் உடையையும் காலணியையும் பார்த்து சின்னதாய் 
நகைத்துவிட்டு முதலில் ஷூ மற்றும் ஸ்வெட்டர் வாங்கிக்கொடுத்து அங்கே உள்ள 
கேரளபவன் கூட்டிச்சென்றார். 
அங்கேயுமா கேரளபவன் என்று 
நினைக்கின்றீர்களா?! அங்கே மட்டுமல்ல கல்கத்தா கவுகாத்தி எனப் பெரும்பாலும்
 எல்லா இரயில் நிலையங்களிலும் அவர்கள் தான் கேன்டீன் நடத்துகிறார்கள்.
பிறகு சாப்பிட்டுவிட்டு அங்கே ஒரு அறையில் தங்க வைத்தார்கள்.
அடுத்தநாள்
  ஒரு வயதான மிகவும் குள்ளமான பெங்காலிப் பொறியாளர் ஹோர்சார் வந்து 
மேகலயாவில் உள்ள ஜொராபாட் என்ற இடத்திற்குக் கூட்டிச்சென்று ஒரு நிரந்தர 
அறை கொடுத்தார்கள். அந்த அறை இருப்பது அஸ்ஸாமில் அதற்கு எதிர்த்தமாதிரி 
உணவகம் இருப்பது மேகலாயவில். இரண்டையும் பிரிப்பது ஒரு சாலை மட்டுமே. அங்கே
 உள்ள உணவகம் பெயர் ஹோட்டல் ராஜஸ்தான். என்ன குழப்புகிறதா?!.. அதான் 
இந்தியா...அன்று ஜனவரி 26,2003. குடியரசு தினம். அங்கே சுதந்திர தினம் 
மற்றுப் குடியரசு தினம்  எல்லாம் கொண்டாட விடமாட்டார்கள் அங்கே தனி நாடு 
அல்லது தனி உரிமை வேண்டிப் போராடும் தீவிரவாத குழுக்கள். மிறிக் 
கொண்டாடினால் மேலே போக வேண்டியதுதான். அங்கே பந்த் என்ற வார்த்தை சர்வ 
சாதாரணம். நானும் அப்பாவும் அந்த அறையில்தான் அன்று தங்கி இருந்தோம். 
குளிர் தூக்கித்தூக்கிப் போட்டது. ஐரோப்பிய கழிவறையில் இந்தியப் பாணியில் 
அமர்ந்தேன். காரணம் குளிர்தான். எப்படியோ அந்நாளை ஓட்டிவிட்டு அடுத்த நாள் 
ஜொராபாட்டில் இருந்து பர்னிகாட் என்ற தொழிற்சாலை கட்டுமிடம் 
கூட்டிச்சென்றார்கள். ஒரே மலைத்தொடராய் ஏறி இறங்கி ஏறி இறங்கி....தலையே 
சுற்றியது. அங்கே போனால் வித்தியாசமாக இருந்தது. அனைத்துப்பக்கமும் மலை, 
கீழே ஆறு, மேலே மேகம். இருட்டிக்கொண்டு கம்மென்று இருந்தது. ஆனால் மணி பகல்
 10:00அல்லது 12:00 இருக்கும். அப்படித்தான் எப்போதும் இருக்கும் என்பதை 
உணர்ந்தேன். அங்கேவுள்ள அஸ்ஸாமி, பெங்காலி, காசி, காரோவ், ஹிந்தி, 
பஞ்சாபி.....என அனைவரும் பல மொழியில் பேசுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. 
 பேசாமல் அப்பாவோடு திரும்பிப் போய்விடலாமா என்றே நினைத்தேன். ஆனால், அங்கே
 ஒரு குரல் ஆழ்மனதில் ஒலித்தது. இல்லை என்னவானாலும் சரி. மூன்று விடயங்களை 
முடிக்காமல் இந்த இடத்தை விட்டுப் போவதில்லை என்று தீர்மானித்தேன்.
அவற்றை டைரியிலும் குறித்து வைத்துக் கொண்டேன். எப்போதெல்லாம் போகலாம் என்று நினைக்கிறேனோ அதைப் பார்த்துக்கொள்வேன்.
ஆமாம்...அந்த மூன்று விடயங்கள் என்ன?
.....தொடரும்.
செ.இராசா
No comments:
Post a Comment