#அஸ்ஸாம்_மேகாலயா
சரியாக
 ஒருமாதம் ஆனபின்னர் அஸ்ஸாமில் இருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது. 
அங்கே போவதற்கு டிக்கெட் போடகூட பணமில்லை. நண்பன் சிவாவின் உதவியால் அழுத 
முகத்தோடு மீண்டும் அஸ்ஸாம் கிளம்பினேன். இம்முறை என்னைக் கோல்பாரா 
மாவட்டம் துத்னை என்ற இடம் வரச் சொன்னார்கள். மீண்டும் கவுகாத்தி சென்று 
அங்கிருந்து பேருந்தில் 110 கி.மீ. சென்று முதலாளி வீட்டுக்கு ரிக்க்ஷாவில்
 ஏறி ஜாடு கம்பெனி செல்லுங்கள் என்றேன். முதலாளிக்கு 14க்கு மேற்பட்ட 
நிறுவனங்கள் இருந்தாலும் இந்த ஜாடு கம்பெனிதான் முதல் கம்பெனியாம். ஜாடு 
என்றால் விளக்கமாறு. ஆமாங்க... விளக்கமாறு ஏற்றி டில்லி மற்றும் மும்பைக்கு
 ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு அந்நாளில் அனுப்பி வைப்பார்களாம். இப்போது 
அத்தொழிலில் இலாபம் இல்லையென்றாலும் அத்தொழிலை இன்னும் செய்கிறார்கள். இது 
அவர்களின் தாத்தா கால கம்பெனி. அதுதான் சிமெண்ட், ஸ்டீல்....என்று பல 
கம்பெனிகளாக உருவாகியுள்ளது. 
இம்முறை நான் பழைய இடமான பர்னிகாட் 
போகவில்லை. அங்கே PM முகர்ஜியின்மேல் நிறைய இலஞ்சப் புகார்கள் வந்ததால் 
அவரை நீக்கிவிட்டார்களாம். மேலும் வேறு ஒருவரை நியமித்து வேலைகள் 
முடியும்நிலையில் உள்ளதென்றார்கள். எனக்கு வேறு ஒரு சிமெண்ட் உருவாக்கும் 
தொழிற்சாலையில் முழுக்க முழுக்க என் மேற்பார்வையில் முடிக்க வேண்டும் 
என்றார்கள். உண்மையில் என்னைவிட என்னை அதிகம் நம்பியவர் இந்த இரபிஜெயின் 
மட்டுமே. அதனால்தான் தொடர்ந்து நான்கு வருடங்கள் அவர் நிறுவனத்தில் நிறைய 
ஆலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைத்துக் கொடுத்தேன். ஆனால் அங்கே வேலை 
பார்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. 
இம்முறையும் அஸ்ஸாம் மேகாலயா 
பார்டரில்தான் வேலை. நான் தங்கி இருந்த அஸ்ஸாம் துத்னையில் மின்சாரம் 
தொடர்ந்து இருக்காது. ஒரு பாழடைந்த வீடுமாதிரி இருந்த அபார்ட்மெண்டில் அறை 
ஒதுக்கினார்கள். கும்மிருட்டாக எப்போதும் மழைவேறு பெய்யும். 
மெழுகுவர்த்தியில் தனி ஆளாக யாருடைய துணையுமின்றி வேறு வழியுமின்றி ஒருவித 
பயத்தோடு அறையில் தங்கி இருந்தேன். முதல் 15 நாட்கள் முதலாளி வீட்டில் 
இருந்தே மார்வாடிகளின் சைவச் சாப்பாடு வந்தது. பிறகு நானே சமைக்கக் கற்றுக்
 கொண்டேன். முதல்நாள் அதிகாலை அங்கிருந்து வேலை செய்யுமிடமான மேகாலயாவில் 
உள்ள காரோ மலைத்தொடரில் டமாஸ் என்ற இடம் போனோம். நான் போனமுறை வந்தது காசி 
மலைத்தொடர் இது காரோ மலைத்தொடர். வெவ்வேறு மழைவாழ் மக்கள் வேறுவேறு மொழி 
பேசுவோர்கள். இதுதவிர போரோ,ரபா, அஸ்ஸாமீஸ், பெங்காலி, நேபாளி என அனைத்து 
மொழியும் பேசுவோர்கள் வாழும் இடம். இங்கேதான் உல்பா, மெகாட் போன்ற நிறைய 
தீவிரவாத குழுக்கள் இருக்கும் இடம். அனைவருமே நன்றாகவே பழகினாலும் யார் 
தீவிரவாதிகள் என்று யாருக்குமே தெரியாது. தனித்தனியாக அனைவருமே 
நல்லவர்கள்தான். குழுவானால்தான் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கேத் 
தெரியாது. அவர்கள் கேட்கும் பணத்தை அவ்வப்போது கொடுத்தால் பிரச்சினை 
வராது. இல்லையேல் ஆள் கடத்தல் செய்து மிரட்டுவார்கள். தரவில்லையென்றால் 
மரணம்தான். (பிறகு சொல்கிறேன்)
இங்கு குளிர் அல்லது மழைதான் 
இருக்கும். வெயிலே கிடையாது. சிறிய வெயில் வந்தாலும் ப்பா.... பூ என்று 
பதறுவார்கள். நான் சிரித்துக்கொண்டே நம் ஊரையும் கத்தார் வெயிலையும் 
நினைப்பேன். என்னதான் வெளியே குளிரென்றாலும் என் மனமெல்லாம் விரக்தியிலும் 
வேதனையிலும் தீயாய் எரிந்ததால் எனக்குக் குளிர் ஒன்றும் தெரியவில்லை.  
நான்
 வேலை செய்யும் இடமென்பது முதலாளியின் ஏற்கனவே இயங்கும் ஒரு விர்கோ 
சிமெண்ட்ஸ் என்ற சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அருகிலேதான். அதற்கான
 பழைய வரைபடத்தை அப்படியே கொடுத்து அதேபோல் வேறு ஒரு சிமெண்ட் பேக்டரி 
அமைக்க வேண்டும் என்றார்கள். அதன் பெயர் பில்லிணியம் சிமெண்ட் லிமிடெட். 
அது ஏன் ஒரு ஒப்பந்ததார நிறுவனம் அமைக்காமல் நான் செய்ய வேண்டும் என்று 
நீங்கள் நினைக்கலாம், அங்கேதான் இரபிஜெயின் நிற்கிறார். இராஜஸ்தானின் 
ஜெயின் சமுதாயம் நம்ம ஊர் செட்டியார் சமுதாயம்போல் பெரிய பணக்காரர்கள் 
நிறைந்த சமூகம். ஆனால் பயங்கரமான சிக்கனவாதிகள். நிறுவனத்திற்குக் 
கொடுத்தால் கொள்ளை அடிக்கிறார்கள் என்றும், மேலும் இப்படி ஒரு பொறியாளரைக் 
கையில் வைத்துக்கொண்டு அதே பழைய வரைபடத்தில் செய்தால் பணத்தை சேமிக்கலாம் 
என்றும், மேலும் வருபவர்களை அங்கே உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கச் சொன்னால் 
தயங்குகிறார்கள் என்பதாலும் என்னை எடுத்துள்ளார்கள். நான் வருவது வரட்டும்,
 சாகவே துணிந்துவிட்டோம் இதையும் என்னவென்று பார்த்துவிடுவோம் என்று 
இறங்கினால் அங்கு ஊரே கூடிஇருந்தது. அனைவருக்கும் வேலை வேண்டும் என்று 
போராட்டம். இது கட்டுமான வேலைதானே. இதற்கேன் இத்தனை போராட்டம். அதுவும் 
எப்படி அனைவருக்கும் வேலை கொடுக்க முடியும்?! ஒன்றும் புரியவில்லை. எப்படி 
சமாளிப்பதென்றே தெரியவில்லை.
..தொடரும்
செ.இராசா















