அவனும்
அவனின் ஏழு வயது மகனும் அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அவன் மகன் கேட்கும்
அத்தனை விடயங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கின்ற தந்தையாகவே அவன்
இருந்தான். ஆயினும் அவன் மகன் விரும்பிக் கேட்ட ஒரு நாய்க்குட்டியை மட்டும்
அவனால் வாங்கித்தர முடியவில்லை. அதுதான் அவன் மகனுக்கு ஒரே ஏக்கமாக
இருந்தது.
அவனும் விடுவதாக இல்லை. தன் மகனின் ஏக்கத்தைப்போக்கத்
தெருத்தெருவாய் அலைந்தான். தெருமுக்கில் எதேச்சையாக ஒரு நாய்க்குட்டி
வந்ததைக் கவனித்து அதைத்தூக்கிவந்தான். ஆனால் அவனின் தாயார் அதைப்
பெட்டைநாயென்று சொல்லி நிராகரித்துவிட்டார்கள். எந்த நாயாய் இருந்தாலென்ன
என்று எவ்வளவோ சொல்லியும் பெண்நாயை ஏற்கத் தயாராக இல்லை. மிகுந்த
மனவருத்ததில் நாட்கள் நகர்ந்தது.
கார்த்திகை 1 ஆம்தேதி அவன் தன்
மகனுக்கு மாலை போட்டுவிட்டு தானும் ஐயப்பனுக்காக விரதமிருந்தார்.
அப்போதும்கூட அவனும் அவன் மகனும் தெருவெங்கும் நாய்க்குட்டி தேடினார்கள்.
விரதமிருந்து ஐயப்பன் கோவில் சென்று மலையிறங்கி வரும்போது அவர்கள்கூட வந்த
ஒருவர் அவனிடம் யார் யார் என்னென்ன வேண்டீனீர்கள் என்று விளையாட்டாகக்
கேட்டார். அப்போது அவன் தான் தன் மைந்தனை ஐயப்பனிடம் ஒப்படைத்துவிட்டதாகக்
கூறினார். ஆனால் அவன் மகனோ தனக்கோர் நாய்க்குட்டி வேண்டுமென்று இறைவனிடம்
வேண்டியதாகக் கூறினான். இதைக்கேட்ட அவனின் மனது மிகவும் வாடியது
மலையிறங்கி
வந்ததுமே எங்கெங்கோ தேடினான். முடிவில் ஒரு நாய்க்குட்டி கிடைத்தே
விட்டது. அதைக்கண்ட உடனேயே அவனும் அவன் மைந்தனும் மகிழ்ச்சியின் உச்சிக்கே
சென்றுவிட்டார்கள். என்ன பெயர் வைக்கலாமென்று அப்பா கேட்டார். மகனோ தன்
செல்ல நாய்க்குட்டிக்கு "பெவி" என்று சொன்னான். அவனுக்கு ஒன்றும்
புரியவில்லை. பெயர்க்காரணம் கேட்டான். அது ஆங்கிலப் பெயராமாம்
அர்த்தமெல்லாம் இல்லையாமாம். ஏற்கெனவே தன் அன்பு மகனுக்கு வேற்றுமொழி வைத்த
குற்றவுணர்வோடு இருந்த அப்பா இம்முறை தன் மகன் வைத்த பெயரை மறுதலித்து
"ஆதி" என்று தமிழ்ப் பெயர்சூட்டினார். அதை மறுக்காமல் அனைவரும்
ஏற்றுக்கொண்டனர். இப்போதுமுதல் அவர்களின் குடும்பத்தில் ஆதியும் ஒருவனாய்
வலம்வருகிறான்...
செ. இராசா
29/12/2021
ஆதி வந்தான்
கரையின் காதல் ----------கடலோரக் கவிதை
உன் விரல்கள் மீட்டுகின்ற வாத்தியம் நான்!
உன் சுவாசம் மோதுகின்ற நாசியும் நான்!
உன் நகவரிகள் வாசிக்கும் வாசகன் நான்!
உன் கழிவுகளை ஏற்கின்ற யாசகனும் நான்!
உன் இரசிகர்கள் அமர்கின்ற இருக்கை நான்!
உனைத் தழுவ விரிந்துள்ள இரு-கை நான்!
உன்னிலே ஏற்றிவிடும் ஏணிப்படி நான்!
உன்னிடம் கேட்டதில்லை ஏனிப்படி நான்?
செ. இராசா
27/12/2021
மதுரை காந்தி அருங்காட்சியகம்
தன்குற்றம் நீக்கியபின் ---------- வள்ளுவர் திங்கள் 191
நாற்றமாய் உள்ளதென நாக்கூசத் திட்டுகையில்
நாற்றமாய் ஆவதெது?; நாக்கு
(1)
மதுக்குளத்தில் நீந்தி மதிக்கரையில் ஏறான்
மதுவிலக்குப் பேசல் மடம்
(2)
இதையதைச் செய்யென எப்போதும் பேசி
எதையுமே செய்யாதோர் இங்கு
(3)
தூரத்தில் உள்ளதைத் துப்புறவு செய்தபின்
ஓரத்தில் வைக்கா(து) ஒழுகு
(4)
ஊரைக் குறைசொல்லி ஒப்பாரி வைப்போர்கள்
யாரைச் சரியென்பார் இங்கு
(5)
ஊழலோ ஊழலென ஓங்கி உரைப்பவரே
ஆழமாய் வைக்கின்றார் ஆப்பு
(6)
தன்குற்றம் நீங்காமல் சாற்றுகின்ற குற்றங்கள்
மன்றத்தில் போகும் மறைந்து
(7)
குறையில்லாச் சொந்தங்கள் கூடிட வேண்டின்
நிறையுள்ளம் வேண்டும் நினை
(8.)
பிறர்குறையைப் பேசுகிற பேச்சுக்கள் எல்லாம்
அறச்செயல் இல்லை அறி
(9)
தன்னை அறிவோரே தன்குற்றம் காண்கின்றார்
உண்மையை உள்ளாய்ந்(து) உணர்
(10)
செ. இராசா
23/12/2021
ஐவர் அதிகாரம்
ஈன்ற பிள்ளைகள் எத்தனையோ?
ஈன்ற பிள்ளைகள் எத்தனையோ?
இருக்கும் பிள்ளைகள் இத்தனையே...
என்ன தவறிழைத்தேன் ஆண்டவா?!
ஒவ்வொரு முறையும்...
ஒவ்வொரு தடவையும்..
ஒவ்வொரு பிள்ளையாய்..
ஓ...
உனக்கும் ஆண் பிள்ளைதான் பிடிக்குமோ?!
#தாய்_நாயின்_குரல்
22/12/2021
அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில்
21/12/2021
நீ எனக்குப் புத்தகம் வாங்கித்தந்தாய்
நீ எனக்குப் புத்தகம் வாங்கித்தந்தாய்
நான் உனக்குப் பூ வாங்கித் தந்தேன்..
பதிலுக்குப் பதிலா என்றாய்??
இல்லை இரண்டுமே ஒன்றென்றேன்
என்ன புதிரென்றாய்?
மனம் கொஞ்சும் மணமென்றேன்..
மீண்டும் புன்னகைத்தாய்..
நானும்.......
20/12/2021
கலங்காதிரு மனமே --------- வள்ளுவர் திங்கள் 190
#கலங்காதிரு_மனமே
#வள்ளுவர்_திங்கள்_190
நன்மை வரும்போது நான்தான் எனச்சொல்வார்
இன்னலில் சொல்வதில்லை ஏன்
(1)
கலங்கிப்போய் உட்கார்ந்தால் காட்சியா மாறும்
தளர்வுதரும் சிந்தனையைத் தள்ளு
(2)
சீரும் சிறப்புமாய்ச் செய்வதைச் செய்தாலும்
நேரும் வினைதான் விதி
(3)
கவலை எழுகின்ற காரணத்தை ஆய்ந்து
கவலை வலையைக் களை
(4)
நினைக்கின்ற ஒன்று நடக்காமல் போனால்
நினைவெழும் புள்ளியைத் தோண்டு
(5)
சிறிதாய் இருக்கையில் தீர்க்காமல் விட்டால்
குறியீடாய் மாறும் விடு
(6)
புலம்பி அழுகின்ற பொல்லாத செய்கை
கலங்கிய நெஞ்சத்தால் தான்
(7)
எண்ணம் எதுபோலோ எல்லாமும் அப்படியே
வண்ணமாய் மாறிடும் வாழ்வு
(8.)
கவலை மிகையானால் காட்சியுரு மாறும்
அவசியம் கவலை அறு
(9)
நிலையாமை பற்றி நினைப்போரின் வாழ்வின்
நிலைமாறும் நெஞ்சில் நிறுத்து
(10)
செ. இராசா
15/12/2021
சபரிமலை ஐயப்ப தரிசனம் 2021
14/12/2021
இப்போதே செய் --------------- வள்ளுவர் திங்கள் 189
நாளை இருக்குதென நாளைக் கடத்தாமல்
நாளையை இன்றாக்க நன்று
(1)
இருக்கின்ற போதெல்லாம் இம்சையென சொல்லிப்
பிரிந்தபின் சொல்வார் பெரிது
(2)
இதையதை என்றெல்லாம் ஏதேதோப் பேசி
எதையுமே செய்யாரே இங்கு
(3)
நல்ல மனதையும் நஞ்சாக்கிப் பார்க்கின்ற
பொல்லாப் பணமென்றும் பொய்
(4)
அறமில்லாப் பக்தி அரிசியில்லா நெல்போல்
பறந்துவிடும் வெற்றுப் பதர்
(5)
நிலையில்லா வாழ்வை நிலையாக எண்ணும்
நிலைதானே மாயை நிலை
(6)
தன்முனைப்பின் உச்சத்தில் தானென்று சொல்வோர்கள்
தன்னால்தான் வீழ்வர் தனித்து
(7)
செய்கின்ற நேரத்தில் செய்வதைச் செய்யாமல்
செய்தாலும் இல்லை சிறப்பு
(8.)
இப்போதிங் கில்லையெனில் எப்போதும் இல்லையென்பர்
தப்பாமல் இப்போதே தாக்கு
(9)
சொல்லும்முன் யோசிப்பாய் சொல்லாமல் செய்திடுவாய்
நல்லோரின் சான்றாய் நட
(10)
செ. இராசா
12/12/2021
10/12/2021
பார்க்க வருகிறோம் ஐயப்பா
பார்க்க வருகிறோம் ஐயப்பா
பார்க்க வருகிறோம்
பாதம் பணிகிறோம் ஐயப்பா
பாவம் தொலைக்கிறோம்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
சாமி சரணம் ஐயப்ப சரணம் சொல்லுங்க
சாமிவேதம் சரண கோஷம் நம்புங்க
சாமி சரணம் ஐயப்ப சரணம் என்னங்க?
சாமிபாதம் சரண மாகும் சொல்லுங்க...
(பார்க்க வருகிறோம்)
சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ
சாமியேய் சரணம் ஐயப்பா
மலையாளும் எங்க சாமி ஐயப்பா
மனசார நோன்பிருந்து வாராம்போ
நிலையான உன்ன விட்டால் யாரப்பா?
நிசமாக வந்திடுவார் கூறப்பா...
அலைமோதும் இந்த வாழ்க்கை ஏனப்பா?
அகம்மாற ஆழத்திலே வையப்பா..
பிழையான பிள்ளை இங்கே நானப்பா
பிழைமாற......தாயாய் அருள் செய்யப்பா
செ. இராசா
08/12/2021
நீயே உனக்கு ஒளியாவாய்....
#நீயே_உனக்கு_ஒளியாவாய்....
நீயே உனக்கு ஒளியாவாய்....
புத்தம் சரணம் சங்கம் சரணம் தர்மம் சரணம் சரணமே...(2)
உந்தனுள்ளே உந்தனுள்ளே
..........ஒன்றியொன்றித் தேடுவாய்!
சிந்தையுள்ளே சென்றுவுள்ளே
..........சீவனொன்றித் தேறுவாய்!
அந்தமாதி சொந்தசோதி
..........அர்த்தமாகி மின்னுவாய்!
விந்தையாகி உந்தனாவி
..........மீண்டதெங்கே எண்ணுவாய்!?
பெண்ணிலோடி போதையேறி
.........பேதைபோல பாவியாய்
மண்ணிலோடி மாயையேறி
.........வாழ்ந்திடாதே கோழையாய்!
கண்ணைமூடி தன்னிலோடி
.........கண்ணிலுன்னைக் காணுவாய்!
அண்டமோடி அங்குமோதி
.........ஐயமின்றி ஓருவாய்!
துன்பமெங்கே இன்பமெங்கே
.....தோண்டியுன்னைத் தேடுவாய்
இன்னலென்று கண்டபின்னே
.... எண்ணியுன்னைத் தேற்றுவாய்
மன்னனென்ன மக்களென்ன
....மாண்டபின்னே சொல்லுவாய்?
வந்தபின்னே நொந்தபின்னே
...மண்ணையள்ளித் தள்ளுவாய்!
செ. இராசா
07/12/2021
NUMBERED LOCK
ஊருக்குப்போயிவந்து இரண்டரை வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதால் பயணப் பெட்டிகள் எல்லாம் சும்மாவே உறங்கிக் கொண்டுதான் இருந்தது. இப்போது அதற்கு வேலை கொடுக்கலாம் என்று நினைத்தால் அவைகள் அனைத்திலும் இருந்த பூட்டுக்களின் இரகசிய எண்கள் (NUMBERED LOCK) எல்லாம் மறந்தேவிட்டது. சரி என்ன செய்யலாம் என்று நினைந்து நானும் என் பையனும் முயற்சி செய்துபார்த்தால் ஒன்றுமே எடுபடவில்லை. சரி வேறு வழியின்றி 001, 002, 003.....என்று 700 வரை போயிவிட்டோம்....என்னடா இது முடியவே இல்லை கைகளும் வலிக்கிறது. சரி வலைத்தள உதவியை நாடலாம் என்று பையனிடம் சொன்னேன். உடனே YOU TUBE சென்று 5 நிமிடங்களில் தீர்வு கண்டான்.
அதாவது
அந்த எண்கள் இருக்கும் இடத்தில் வெளிச்சம் அடித்தான். ஊசிமுனை அளவே உள்ளத்
துளைகள் வரும்வரை மூன்றையும் சுற்றினான். பின்னர் மேலும் இரண்டு எண்கள்
சுழற்றினால் பூட்டு திறந்துவிட்டது. அப்படியே அனைத்து பூட்டுக்களையும்
திறந்து விட்டான். அட..... இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இங்கே
எல்லாவற்றிற்குமே தீர்வுண்டு. மேலும் பெரியவர் சிறியவர்களிடம் சேர்ந்து
பிரச்சினைகளைக் கையாண்டால் சுலபமாக அந்தத் தீர்வைக் கண்டுகொள்ளலாம் என்பதே.
சரிதானே உறவுகளே!
அப்பசரி..
செ. இராசா
06/12/2021
ஆத்தீ----------வள்ளுவர் திங்கள் 188
#ஆத்தீ
#வள்ளுவர்_திங்கள்_188
காமத்தீக் குச்சியைக் கண்களினால் பற்றவைக்க
ஓமத்தீ வார்க்கும் உடல்
(1)
ஆத்தீ அடியாத்தீ... ஆசைத்தீ பொல்லாத்தீ
வார்த்தால் வருமய்யா வம்பு
(2)
நினைத்தவுடன் பற்றுகின்ற நெஞ்சத்துத் தீயை
அணைக்கின்ற நீர்தானே அன்பு
(3)
பிரிவே சுடுமென்று பேசிய சீதை
பிரிந்தே சுடுபட்டால் பின்பு
(4)
சேர்ந்தோர் பிரிகையில் தீயாய்ச் சுடுவதால்
நேர்வது நெஞ்சில் வடு
(5)
அயலகம் சென்றோர் அகத்தின் வலியை
அயலார் அறிவ(து) அரிது
(6)
ஒன்றுக்குள் ஒன்றாய் உறவாடி பின்னாலே
ஒன்றோடும் வாழாதார் உண்டு
(7)
காதல் உணர்வின்றி காமத்தில் செல்வோர்க்குக்
காதல் பிரிவெல்லாம் பொய்
(8.)
வேறு வழியின்றி வேறிடம் சென்றபின்
மாறிடுமோ நல்லோரின் மாண்பு
(9)
பிரிந்தவர் சேர்கையில் பெற்றிடும் இன்பம்
எரிந்தவர் நெஞ்சிற்(கு) இதம்
(10)
செ. இராசா
அப்பாவின் கோபம்
உச்ச டெசிபலில்
உறுமுகின்ற அரிமா...
கொதிக்கும் எரிமலையில்
குமுறிவரும் லாவா....
பொங்கும் விழிகளில்
பொசுக்கிவிடும் சூரியன்...
சாட்டை அடிகளில்
சாத்துகின்ற கவிஞன்...
ஆனால்...
ஒற்றை வார்த்தையில்
ஒடுங்கிவிடும் கணவன்..
......
.......என்னங்க அங்க சப்தம்?!
டைம்லூப்