27/12/2021

மதுரை காந்தி அருங்காட்சியகம்

 







இன்று காலை சென்னையில் இருந்து காரைக்குடி வந்தவுடன், மனைவிக்கு மாத்திரை வாங்க மதுரை வரவேண்டிய வேலை இருந்தது. பெரும்பாலும் மருத்துவமனை சென்றால் பிள்ளைகளை அழைத்துச்செல்வதில்லை என்பதால் நண்பர் சிவாவை அழைத்துக்கொண்டு பயணமானோம். மதுரை மீனாட்சி மிஷனில் மனைவியை இறக்கிவிட்டு காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உடனே நம்ம காந்தி மியூசியம் போகலாம் என்கின்ற யோசனை வந்தது. ஏற்கனவே சிறுவயதில் போயிருந்தாலும் இப்போது போனபோதுதான் தெரிந்தது பல விடயங்கள். அங்கேநான் கவனித்த முக்கியமானவற்றை மட்டும் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறேன்.
 
1. மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற போது அவர் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த ஆடை வேறு எங்குமே இல்லாமல் மதுரை மியூசியத்தில் இருப்பது இக்காட்சியகத்தின் கூடுதல் சிறப்பு. அதைக் கண்டவுடனேயே கட்டாயம் உங்களுக்கு(ம்) மெய்சிலிர்க்கும் என்பதை அடித்துச் சொல்வேன்.
 
2. அவர் குண்டடிப்பட்டு மரணிப்பதற்கு முதல் நாள் பேசிய வாசகமும் அதே அறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி என்பதை அந்த வாசகம் உணர்த்துகிறது.
"சுடப்பட்டு நான் மரணமடைய நேர்ந்தால் முணுமுணுக்காமல் குண்டடியை ஏற்று இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே உயிர்நீக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய குறிக்கோளுக்கேற்ப வாழ்ந்தவனாவேன்."
அவர் முதல் நாள் கூறியதுபோலவே குண்டடிபட்டதும் "ஹே ராம்" என்று கூறியே மரணித்தார் என்பதும் நாம் அறிந்ததே.
 
3. கட்டபொம்மன் கதையை எப்படி மாற்றிப் படம் எடுத்துள்ளார்கள் என்பது இங்கே உள்ளக் கல்வெட்டில் புலனாகிறது. அதாவது கட்டபொம்மனை 23 நாட்கள் அலையவிட்டபின்பே காலின் ஜாக்சன் இராமநாதபுரத்தில் சந்தித்துள்ளார். படத்தில் உள்ள வீராவேசம் எல்லாம் சும்மா டுபாக்கூர் என்பதை அறியலாம். மேலும், புதுக்கோட்டை மன்னரின் சூழ்ச்சியால்தான் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று கல்வெட்டு கூறுகிறது. அப்ப எட்டப்பன் யார்?. (கட்டபொம்முலு என்பவரே தெலுங்கர் என்பதை அறியாதத் தமிழர்களும் இங்கே உண்டுதானே?!) இதுபோல் நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன.
 
4. தமிழ்நாட்டுப் பொருட்கள் வைத்த ஒரு இடத்தில் ஐயனார் சிலைகள் இருந்தன. அதில் ஒரு ஐயனார் ஐயப்ப வடிவத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. (குறிப்பு: இருவரும் ஒருவரே என்று நான் முன்பே இதுபற்றி ஒரு கட்டுரை பதிவிட்டுள்ளேன்)
 
5. இந்தக் கட்டிடம் எத்தனைப்பேரிடமிருந்து கைமாறி கைமாறி இப்போது அருங்காட்சியகமாக வந்துள்ளது என்கின்ற வரலாறே பிரம்மிக்க வைக்கிறது.
 
6. காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட இடங்களை ஒரு வரைபடம் காண்பிக்கிறது. அதில் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை மற்றும் நேபாளம் இருந்ததைக் காணுகையில் நம் ஒருங்கிணைந்த இந்தியா கண்முன்னே வருகிறது. 
 
7. அப்படியே வெளியே வந்தால் ஒரு புத்தகக்கடை உள்ளது. அதில் காந்தியைப் பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன. அங்கே ஜே. கிருஷ்ணமூர்த்தி நூல்களும் தமிழருவி மணியன் நூல்களும் உள்ளன.
 
கண்டிப்பாக வாழ்வில் அனைவரும் ஒருமுறை சென்றுபார்க்க வேண்டிய இடமே இந்த அருங்காட்சியகம். ஆம்... மதுரையில் தன் மேலாடையைத்துறந்த மகாத்மாவின் இரத்தம் தோய்ந்த ஆடையும் அவரின் ஆத்மாவும் அங்கே அமைதியாக உறங்குகிறது.
ஓம் சாந்தி!
 
✍️செ. இராசா

No comments: