14/12/2021
இப்போதே செய் --------------- வள்ளுவர் திங்கள் 189
நாளை இருக்குதென நாளைக் கடத்தாமல்
நாளையை இன்றாக்க நன்று
(1)
இருக்கின்ற போதெல்லாம் இம்சையென சொல்லிப்
பிரிந்தபின் சொல்வார் பெரிது
(2)
இதையதை என்றெல்லாம் ஏதேதோப் பேசி
எதையுமே செய்யாரே இங்கு
(3)
நல்ல மனதையும் நஞ்சாக்கிப் பார்க்கின்ற
பொல்லாப் பணமென்றும் பொய்
(4)
அறமில்லாப் பக்தி அரிசியில்லா நெல்போல்
பறந்துவிடும் வெற்றுப் பதர்
(5)
நிலையில்லா வாழ்வை நிலையாக எண்ணும்
நிலைதானே மாயை நிலை
(6)
தன்முனைப்பின் உச்சத்தில் தானென்று சொல்வோர்கள்
தன்னால்தான் வீழ்வர் தனித்து
(7)
செய்கின்ற நேரத்தில் செய்வதைச் செய்யாமல்
செய்தாலும் இல்லை சிறப்பு
(8.)
இப்போதிங் கில்லையெனில் எப்போதும் இல்லையென்பர்
தப்பாமல் இப்போதே தாக்கு
(9)
சொல்லும்முன் யோசிப்பாய் சொல்லாமல் செய்திடுவாய்
நல்லோரின் சான்றாய் நட
(10)
செ. இராசா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment