சிறியதுதானே என்று
சிறிதாய் நினையாதீர்...
ஏனெனில்..
சிறு ஓட்டைதானே
பெருங் கப்பலை மூழ்கடிக்கிறது...
சிறு பொறிதானே
பெருந்தீயாய் மாறுகிறது
சிறு சபலம்தானே
பெருந்தீதாய் முடிகிறது
சிறு துளிதானே
பெரும் உடலாய் வருகிறது
சிறு விதைதானே
பெரும் விருட்சமாய் வளர்கிறது
ஆம்...சிறிதுதான்
அணுக்கள் சிறிதுதான்
ஆனால், அண்டத்தின் பேராற்றல்
அதிலே உள்ளது
குறள்கள் சிறிதுதான்
ஆனால், அகிலத்தின் குரலெல்லாம்
அதிலே உள்ளது
அவ்வளவு ஏன்?
பெரிய கடல் என்பது
சிறிய நீர்த்துளிகளின்
கோர்வைதானே..
பெரிய காவியம் என்பது
சிறிய கவித்துளிகளின்
கோர்வைதானே..:
சிறு குரங்கெனஅனுமனின்
வாலில் தீவைத்தானே....இராவணன்
என்ன ஆனது?!
அது கொளுத்தியது
அவன் தீவைத்தானே?!!
சிறு துரும்பென சிந்துராஜனின்
சிதையை சீரழித்தனரே....பாண்டவர்
என்ன ஆனது?!
அவன் திரும்ப வந்து
அபிமன்யுவை சீரழித்தானே?!
சாக்கிரதை..
தேளின் கொடுக்கு சிறிதானாலும்
தேக்கிடும் விசம் பெரிது...
ஆனால்,
தேனியின் வயிறு சிறிதானாலும்
தேடிடும் விசயம் பெரிது
ஆம்...
தயிர் சிறிதுபோதும்
தயிரைப் புதிதாய் உருவாக்க
தவறு சிறிதுபோதும்
தருதலையாய் மனிதன் உருவாக..
ஈரல் சிறிதுபோதும்
ஈரலை மீண்டும் உருவாக்க..
ஈரம் சிறிதுபோதும்
இறைவனாய் மனிதன் உருவாக...
இனியும்...
சிறிதை சிறிதாய் நினையாதீர்...
✍️இந்தச் சிறியவன்
😊செ. இராசா
(இதில் “தீவைத்தானே”என்ற சிலேடை வாலி சொன்னது. உரிமையோடு நான் பயன்படுத்தி உள்ளேன்)
படத்தில்: தம்பி மகன் தணுஸ் ராஜா (இடம் உள்ளவர்)
No comments:
Post a Comment