10/07/2022

கட்டுரை-3 --- எளிய முறையில் உடம்பைக் குறைப்பது எப்படி?



 
இக்கட்டுரையில் முதலில் கலோரி என்றால் என்ன என்று பார்ப்போம்.
நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் பெரும்பாலும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு வகையான ஆற்றல் உள்ளது. அதேபோல் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் அதே ஆற்றலானது செலவும் செய்யப்படுக்கிறது. இப்படி நாம் உட்கொள்ளும் ஆற்றல் மற்றும் செலவழிக்கும் ஆற்றலென இந்த இரண்டு ஆற்றல்களுமே #கலோரி என்ற அலகால்தான் அளவிடப்படுகிறது. 
 
பொதுவாக நாம் சாப்பிடும் உணவிலுருந்து கிடைக்கும் ஆற்றலும் நாம் செலவு செய்யும் ஆற்றலும் சரியாக இருக்கும்பட்சத்தில் நம் உடலின் எடை கூடுவதோ அல்லது குறைவதோ இல்லை. எப்போது ஒன்று மிகுந்து ஒன்று குறைகிறதோ அப்போதுதான் அதன் சமநிலை கெட்டு நாம் பருமனாகவோ அல்லது ஒல்லியாகவோ உருமாற்றம் பெருகின்றோம்.
 
எனில், சமநிலையான உணவென்றால் என்ன?
அதாவது, ஒரு சராசரியான கணக்கின்படி அன்றாட வேலைப்பார்க்கும் ஆண் அல்லது பெண் எவ்வளவு உணவு உட்கொள்ளலாம் என்ற ஒரு அட்டவணை உள்ளது. இதெல்லாம் ஒரு உத்தேசமான கணக்குதான். அவரவர் வாழும் நாட்டைப்பொறுத்து, உயரத்தைப்பொறுத்து இவையெல்லாம் மாறும். அந்த கணக்கின்படி உணவு உட்கொள்வதே சமநிலையான உணவாகக் கருதப்படும்.
இப்போது உதாரணமாக ஒரு ஆண் 2300 கலோரி உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்துக்கொள்வோம். அவரே அதிகமான உடலுழைப்பு உள்ளவராக இருந்தாலும் கூடுதலாக உணவு எடுத்துக்கொண்டாலும் உடம்பு வைக்காது. ஆனால், அவர் வேலையே செய்யாமல் நிறைய சாப்பிட்டால் கட்டாயம் உடம்பு போடவே செய்யும்.
 
அதெல்லாம் சரி, இந்த உணவுக்குள் இருக்கும் கலோரியை எப்படி கணக்கிடுவது என்று தெரிந்தால்தானே, எவ்வளவு சாப்பிடலாம் என்று அறியமுடியும், எனில் கலோரியைக் கணக்கிடுவதெப்படி?
....தொடரும்
 
✍️செ. இராசா

09/07/2022

இருபது ரூபா கொக்கோ கோலோ


 

இருபது ரூபா கொக்கோ கோலோ- வாநீ
இருக்கிற இப்ப செம்ம தூளா....
அறுபது கூட உன்னைப் பார்த்தா- மாறி
இருபது போலத் துள்ளும் ஃபாஷ்டா...
 
நீ ஆப்பிளில் லேட்டஸ்ட் மாடல்
நான் நோக்கியா காலத் தேடல்
ம்ம்.....அதனால் வருமா ஊடல்- அட
அதுதான் இனிக்கிற கூடல்- வா
தருவோம் அசத்துற பாடல்!
 
நீ நைன்டி கிட்ஸு ஆளு
நான் டூகே கிட்ஸு கேர்ளு
ம்ம..‌‌...அதுலாம் வருமா சொல்லு- நீ
ஆஃப்லைன் மோடுல நில்லு- உன்
ஆண்ட்ராய்ட் போனத் தள்ளு!
 
✍️செ. இராசா
 
(படத்தில் உள்ள குட்டியூண்டு கோலா பாட்டிலைப் பார்த்தவுடன் தோன்றிய கற்பனை வரிகள்)

08/07/2022

 







பிள்ளைகளுக்கு இரயில் பயண அனுபவங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் விரைவுவண்டியில் முன்பதிவு செய்தோம். உண்மையில் அவர்களுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தாலும் இந்த அனுபவம் தேவையென்றே நினைக்கிறேன். 
 
இரயில் இருக்கைகள் விமான இருக்கைகள்போல் இருந்தாலும் அகலம் குறைவாக உள்ளதால் தாராளமாக அமர முடியவில்லை. தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதி, சாப்பிட, புத்தகங்கள் வைக்க, கைப்பேசி மின்னூட்டம் போட என பல வசதிகள் இருந்தாலும், மின்விசிறிகளின் காற்று போதுமானதாக இல்லை. நாங்கள் அமர்ந்த இடத்தில் சாளரமும் இல்லையென்பதால் சுத்தமாக காற்றே இல்லை. கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும், பயணச்சீட்டின் விலை மிக மிகக் குறைவாகவே உள்ளதால் பலபேருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 500 கிமீ பயணம் வெறும் 200 ரூபாயில் என்பது, தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான ஒன்றே. கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமே சாத்தியமான ஒன்று இது.
 
இந்தக் கதவுக்குப் பக்கத்தில் கழிப்பறை போகுமிடத்தில் கூட்டமாக அடைத்துக்கொண்டு நிற்பவர்களை மட்டும் எப்போதும் கட்டுப்படுத்தவே முடியாதுபோலும். எது எப்படியோ நல்லபடியாக ஊர்வந்து சேர்ந்தோம்

கட்டுரை-2- எளிய முறையில் உடம்பைக் குறைப்பது எப்படி?


உடம்பைக் குறைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நாம் என்ன செய்வோமென்றால், யார் யாரெல்லாம் சொல்கிறார்களோ அதையெல்லாம் கேட்கின்றோம் அதன்படி சிலநாட்கள் செய்கின்றோம். பிறகு அதையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு வழக்கம்போல் மீண்டும் உடம்பு குறையவே மாட்டேன்கிறது என்று புலம்ப ஆரம்பிக்கின்றோம். சரிதானே?!
அதேதான்....நானும் அப்படித்தாங்க என்ன என்னல்லாம் செய்யனுமோ..எல்லாமே செஞ்சேன். ஒன்னும் சரியா வரலை... அப்பதான் திடீர்னு ஒரு யோசனை வந்தது. அதாவது நாம் சாப்பிடும் கலோரியின் அளவு பற்றிய கணக்கை சரியான முறையில் குறைத்து சாப்பிட்டால் உடம்பு குறையுமா என்னும் யோசனைதான் அது. ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதை அளந்தேன் படபடன்னு குறைய ஆரம்பிச்சுடுச்சு. அது எப்படிங்க....சாப்பாட்டெல்லாம் அளப்பது? கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.
அதானே.. இருங்க சொல்றேன்.
 
நம்ம வள்ளுவர் என்ன சொல்றார்னா....(ஆகா....பொறுமை பொறுமை) முன்பு உண்ட உணவின் செரிக்கும் தன்மையறிந்து பின்பு உட்கொள்ளும் உணவையும் அறிந்து சாப்பிடச் சொல்றாரு. அதோடு நமக்கு ஏத்துக்கிற மாறுபாடில்லாத உணவா சாப்பிடச்சொல்றாரு. அப்டீனா என்னன்னா?!! நாம சாப்பிடுற இட்லி தோசை, சப்பாத்தி, சோறு....அதெல்லாம் ஓகே. ஆனால், இந்தப் பீஸா, KFC, பர்கர் அதெல்லாம் இல்லாமல். சரி அதுவும் வேண்டுமப்பு. ஏன்னா அதெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு இப்ப அதுவும் எங்களுக்கு மாறுபாடில்லா உணவாயிடுச்சு. அதுக்கேத்தமாதிரி சொல்லுங்க அதானே.....அதுக்கும் வழி இருக்கு.
சொல்கிறேன். 
 
அதுக்கு முதல்ல கலோரினா என்னன்னு தெரிஞ்சுக்குவோம். சரியா?!!
 
.....தொடரும்

குறளுரையாடல் - அந்தாதி - கரு- பொது

 


எம்மயிரும் இங்கே உயர்வில்லை என்றுணரக்
கம்பன் கவிதையிலே காண்
(1)
 
காண்கின்ற கானலை காவிரியாய் நம்புபவன்
தான்தான் சரியென்பான் தள்ளு
(2)
 
தள்ளாடும் மானிடரின் தானென்ற கர்வத்தால்
எள்ளி நகைக்கும் இனம்
(3)
 
இனம்மதம் சாதியிலே என்னய்யா உண்டு?
மனம்குணம் பார்த்தலேநல் மாண்பு
(4)
 
மாண்போடு பார்த்தாலே மக்கள் பணிசிறக்கும்
மாண்டுதான் போகும் மதம்
(5)
 
மதப்பற்று தப்பில்லை மாந்தரின் வாழ்வில்
மதவெறிதான் தப்பாகும் மாறு
(6)
 
மாறும் உலகில் மதவெறிக் கொண்டுள்ளம்
கூறுதான் போடலாமோ கூறு
(7)
 
கூறுவோர் கூறியும் கூற்றினைக் கேட்கார்க்குக்
கூறுவதால் என்பயன் கூறு
(8)
 
கூறும் அறிவுரைகள் குப்பையிலே வீசுவோர்க்கு
சேறோடு சந்தனமும் ஒன்று
(9)
 
ஒன்றை இரண்டாக்கி ஊதுகின்ற பேரென்றும்
நன்றை அறியார்; நகர்
(10)
 
நகரும் இயந்திரத்தால் நாசமான வீடு
இகழ்கிறதே நாடும் இளித்து
(11)
 
இளிக்கும் செயலால் எதிர்ப்புதான் கூடும்
தெளிவுடன் ஆண்டால் சிறப்பு
(12)
 
சிறப்போங்கும் நாடென்றும் சீரழியக் கூடும்
பிறப்பிலே பேதம் பிணக்கு...
(13)
 
பிணக்குகள் இன்றிப் பிரியமாய் வாழ்ந்தால்
இணக்கங்கள் கூடும் இனிது
(14)
 
இனிதாய் மனங்கள் இணைந்தால் எவரும்
இனிமேலும் வாலாட்டா(ர்) இங்கு
(15)
 
இங்கங்க னாதபடி எங்கும் இருக்குமிறை
தங்களிடம் இல்லையே ஏன்?
(16)
 
ஏனென்ற கேள்வி இறைவனிடம் கேட்டுநின்றேன்
ஊனென நின்றான் உறைந்து
(17)
 
உறைந்துதான் போனேன் உளமார்ந்த நட்பில்
நிறைகிற(து) உன்னாலென் நெஞ்சு
(18)
 
நெஞ்சில் அமர்ந்தாய் நிறைவாக என்னன்பே
அஞ்சிடாமல் எம்மை அணுகு
(19)
 
அணுகுண்டு விஞ்ஞானம் ஆக்கிய(து) என்ன?
மனிதவுயிர் யாவும் மயிர்!
(20)
 
✍️ இருவரும் 
 
08.07.2022

07/07/2022

கட்டுரை-1--------- எளிய முறையில் உடம்பைக் குறைப்பது எப்படி?

 

ஆணோ பெண்ணோ முன்பெல்லாம் திருமணமான பிறகுதான் உடலின் எடை கூடும். ஆனால் இப்போதோ சொல்லவே வேண்டாம். உலகில் கிடைக்கும் அனைத்து வகையான உணவையும் எப்போது வேண்டுமானாலும் ஒரு பிடிபிடிப்பதாலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருகி உடல் உழைப்பு குறைந்து போனதாலும் சிறியவர்முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் உடல் எடை கூடிவிடுகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், கூடிக்கொண்டே போகும் உடல் எடைப்பற்றி வேறு யாரேனும் சுட்டிக்காட்டும் போதுதான் அது பலருக்கும் தெரிய வருகிறது. 
 
அதிலும் வளைகுடா போன்ற வெளி நாடுகளுக்குச் செல்லும் பலருக்கும் போன சில வருடங்களில் சம்பளம் கூடுகிறதோ இல்லையோ அவர்களின் உடல் எடை அநியாயத்திற்கு கூடி விடுகிறது. அப்படி கூடியபின் அவர்கள் சந்திக்கும் உடல் சார்ந்த மற்றும் உளம் சார்ந்த பிரச்சனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுவும் குறிப்பாக திருமணம் ஆகுவதற்குமுன் உடல் எடைபோட்டால் அதைக் குறைக்க என்னதான் மாங்கு மாங்கென்று நடையாய் நடந்தாலும் காலணிகள் சிறுத்த அளவுகூட உடல் சிறுக்காமல் அவர்கள் படும் வேதனை இருக்கிறதே....அப்பப்பா சொல்லிமாளாது. 
 
இதுபோக, இதைக்குடித்தால் சரியாகிவிடும் அதைச்சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலரும் பல மருத்துவ யோசனைகளை அள்ளிப்போட்டு, அதை அத்தனையையும் ஒன்று விடாமல் செய்து பார்த்து நொந்து போனவர்கள்தான் இங்கு ஏராளம். அப்படி நொந்து நூடுல்ஸானவர்களின் நானும் ஒருவனாகதான் இருந்தேன். ஒரு கட்டத்தில் எப்படி நானாக "என் வழி தனி வழியென்று" உடம்பைக் குறைத்தேனோ அந்த வழியை அனைவருக்கும் பகிரலாமே என்கிற நல்ல நோக்கத்தில் தான் இக்கட்டுரையை எழுதுகின்றேன். இது சம்பந்தமாக ஏற்கனவே கத்தார் மனவளக்கலை மன்றத்தில் சிறப்புரை ஆற்றி இருந்தாலும் அதை எழுத்துப் பூர்வமாக ஆவணப்படுத்துவோமே என்கிற எண்ணத்தில்தான் இக்கட்டுரைத் தொடரை எழுத நினைக்கின்றேன்.
 
இங்கே என்னை நானே இரண்டுமுறை பரிசோதித்துப் பார்த்துள்ளமையாலும், இதே முறையில் என் மனைவியும் உடம்பைக் குறைத்துள்ளதாலும் இந்த முறையை அனைவரும் பின்பற்றலாம் என்று மனப்பூர்வமாக அனைவருக்கும் சிபாரிசு செய்கின்றேன். இக்கட்டுரையின் முடிவில் "எளிய முறையில் உடம்பைக் குறைப்பது எப்படி?" என்பதைத் தெரிந்துகொள்வதால் அதையே இக்கட்டுரைக்கு தலைப்பாக்கியுள்ளேன்.
 
வாருங்கள் கட்டுரைக்குள் நுழைவோம்....
 
 
செ. இராசமாணிக்கம்

04/07/2022

#பாவலர் அகரம் அமுதன் அவர்கள் பற்றிய ஓர் பார்வை

 



பெரியோரைக் கண்டு
வியக்க வேண்டாமென்றான்
கணியன் பூங்குன்றனார்...
காரணம்...
வியந்துபோய் விட்டால்
அப்படியே தேங்கிவிடுவோம் என்பதற்காக..
 
ஆயினும்..
சிலரைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை..
அப்படி யாம் வியந்து பார்க்கும் மனிதர்களில்
பாவலர் அகரம் அமுதன்
சமீபத்தில் முன்னிலையில் நிற்கிறார்...
என்றால் அது மிகையல்ல...
 
பொதுவாக ஒரு மனிதனை
அவனின் அப்போதைய நிலையில் வைத்தே
அனைவரும் விமர்சிக்கின்றோம்...
யாருமே பின்னோக்கிப் பார்ப்பதில்லை..
காரணம்....
யாருக்கும் அதற்கான நேரமும் இல்லை...
 
அப்படி புரிந்துகொள்ளப்படாத
அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட
ஆகச்சிறந்த கவிஞர்களில்
அகரம் அமுதனும் ஒருவரென்றே நினைக்கின்றேன்.
 
அவரின் வெண்பா வேகத்திற்கு
அவரோடு போட்டிபோட
அவரால்தான் முடியுமென்றால்
அது வெறும் புகழ்ச்சியல்ல
அவரின் உண்மையான ஆற்றல்...
 
ஆனால் அப்படிப்பட்ட மனிதர்
ஆங்கிலம் கலந்த வெண்பா எழுதுகிறாரென்றால்
விமர்சனம் வராமலா இருக்கும்....
எழுந்தது... படுவேகத்தில் எழுந்தது
எழுப்பியதில் சில மிதவாதிகளும் உண்டு
பல தீவிரவாதிகளும் உண்டு..
(நானும்தான்)
 
ஏன் அப்படி படைக்கிறார் என்பதற்கு
அவரிடம் ஆயிரம் காரணங்கள்..
அதையெல்லாம் விடுவோம்.
அது மட்டும்தான் அவர் உயரமா?
இல்லை...
இல்லவே இல்லை....
இதை யாம் உணர
அவரின் இரு புத்தகங்கள் தேவைப்படுகிறது..
 
ஒன்று மாவீரன் பிரபாகரனைப் போற்றி
சீமான் அவர்கள் அணிந்துரை எழுத
ஆஸ்திரேலிய உறவுகளின்
அற்புதமான பங்களிப்பால் வெளியிடப்பட்ட
தனித்தமிழ் வெண்பா இலக்கியம்
மற்றொன்று
குழந்தைகளுக்கு வழிகாட்டும் விதமாய்
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள்
அணிந்துரை வழங்க
இலக்கியத் தோழர்கள் பங்களிப்பில் வந்த
தனித்தமிழ் குறள் வெண்பா நூலுமே சாட்சி..
 
இவையெல்லாம் வெறும் 15 நாட்களில்
உருவாக்கியுள்ளார்...
அதுவும் தற்போதல்ல..
2011 ஆம் ஆண்டில்..
 
ஒன்று சொல்லுங்கள்....
ஒரு நூலை நாமாகக் கோர்த்து
நாமே வெளியிடுவது பெருமையா?
இல்லை,
அந்நூலை நமக்காக
பிறர் வெளியிடுவது பெருமையா?
 
எனில்
எது அவர்களை அப்படிச் செய்யவைத்தது
சந்தேகமே இல்லை...
அவரின் தமிழல்லாமல் வேறென்ன?!
 
இரண்டு நூல்கைளயும் படித்தேன்
மிரண்டு போனேன்...
அவரின் உயரம்...
என்னில் இருந்து
பல கிலோமீட்டர் உயர்ந்து பார்க்கிறேன்...
பல கிலோமீட்டர் வியந்து பார்க்கிறேன்...
 
அப்படிப்பட்ட அவர் ஏன் மாறினார்?
மாறாமல் இருக்க அவரொன்றும் குளமல்ல..
எனில் யாரவர்?
ஒவ்வொரு கணமும் மாறும் ஆறவர்..
 
மாறுவார்....மீண்டும்..‌
நாம் பிடித்தால் நனைவோம்.‌.
இல்லையேல் ஒதுங்கி நிற்போம்...
 
✍️செ. இராசா

நாகை கூடுகை-2

 



பொண்மணியார் வாழும் புகழ்மிக்க நாகையில்
அண்ணாவைக் காணவந்தோம் அங்கு!
(1)
 
சென்னைவாழ் கோவலரும் திட்டகுடி பாவலரும்
அண்ணனெங்கள் விக்டரும் அங்கு!
(2)
 
நானெனும் மண்குடமும் நாகைக்கு வந்திடவே
ஆனதெங்கள் எண்ணிக்கை ஐந்து!
(3)
 
தேநீரில் நாநனைத்தோம் செந்தமிழில் தேன்குடித்தோம்
பாநீரில் மூழ்கிவிட்டோம் பார்த்து
(4)
 
சங்க இலக்கியத்தைச் சாறாக்கி அப்படியே
எங்களண்ணா தந்தார் இசைந்து
(5)
 
கம்பர் கவிக்கோ கவியரசர் எல்லோரும்
நம்முன்னே நின்றனர் நன்கு!
(6)
 
புல்லட்டு பாடலுக்கும் போட்டவித்தை யாதென்று
கல்கண்டாய் தந்தார் கனிந்து!
(7)
 
மீன்இறால் நண்டென்று வீட்டில் சமைத்துவந்து
ஊண்தந்த பொன்மணியார்; தாய்!
(8)
 
அவரவர் அச்சிட்ட அற்புத நூல்கள்
எவருக்கும் கிட்டிய(து) அங்கு.
(9)
 
இருநாள் நினைவை இதயத்தில் ஏற்றி
வரும்நாளில் வாழ்வோம் இனி!
(10)
 
✍️செ. இராசா
 
(அற்புதமான இலக்கியச் சந்திப்பை உருவாக்கிக் கொடுத்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏)

01/07/2022

கருப்புடை போட்டவன்லாம்

 


கருப்புடை போட்டவன்லாம்
நாத்திகனும் அல்ல...
காவியுடை போட்டவன்லாம்
ஆத்திகனும் அல்ல.
..
✍️செ. இராசா

கருப்பன் பாடல்- 2.0--( செங்கிடாக் கருப்பனுக்காக எழுதிய பாடல்)



மருதங்குடி வாழுகின்ற ஐயனாரு சாமிங்க
....வாளேந்தி கூடநின்னு காக்குறது யாருங்க?
....வாளேந்தி கூடநின்னு காக்குறது யாருங்க?
ம்ம்....வாடா.... கருப்பா....செங்கிடாக் கருப்பா!
 
மேகம் இடிஇடிக்குது; கருப்பன் வந்தால்
..........மின்னல் வெடிவெடிக்குது!
தேகம் துடிதுடிக்குது; கருப்பன் வந்தால்
.........திக்குத் தெறிதெறிக்குது!
ஊரே நடுநடுங்குது; கருப்பன் வந்தால்
.........உண்மை வெளிவருகுது!
பாரே படபடக்குது; கருப்பன் வந்தால்
..........பாரம் வலிகுறையுது?
 
அங்காளியும் பங்காளியும் ஒற்றுமையா வாழ்ந்திடனும்
சொந்தங்களும் பந்தங்களும் நல்லநாளில் சேர்ந்திடனும்
எங்கசாமி கருப்பன் முன்னே
எங்கசாமி கருப்பன் முன்னே
எல்லாருமே கூடிடனும்...
அந்தாப் பாரு கருப்பன் வர்றான்
இந்தாப் பாரு கருப்பன் வர்றான்
ஐயனாரு சாமியோட எங்கசாமி கருப்பன் வர்ரான்...
ம்ம்....வாடா.... கருப்பா....செங்கிடாக் கருப்பா!
 
அந்தசாதி இந்தசாதி ஒற்றுமையா வாழ்ந்திடனும்..
தென்புலத்தார் தெய்வமென்ன எல்லோருமே
புரிஞ்சிடனும்..
நம்மசாமி கருப்பன் முன்னே
நம்மசாமி கருப்பன் முன்ன
எல்லாருமே கூடிடனும்...
அந்தாப் பாரு கருப்பன் வர்றான்
இந்தாப் பாரு கருப்பன் வர்றான்
ஐயனாரு சாமியோட எங்கசாமி கருப்பன் வர்ரான்...
ம்ம்....வாடா.... கருப்பா....செங்கிடாக் கருப்பா!
 
✍️செ. இராசா