16/05/2017

தமிழ்-2




உடைபோல் அணிவோம் பிறர்மொழியை
உயிராய் மதிப்போம் தாய்மொழியை
உடையை வேறாய் அணிந்திடலாம்
உயிரை இழந்தால் யாதென்போம்?

ஆங்கிலம் அறிவது தனி-கலையே!
தமிழை விடுவதோ தற்கொலையே!
நாக்கின் நுனியில் இருந்துவிட்டால்
நாகரீகம் என ஆகிடுமோ?!

டாடி என்றால் அவமானம்!
அப்பா என்பதே அடையாளம்!
அடிமைத் தளையை அறுத்தெறிய
ஆங்கில மோகம் வெறுத்திடுவோம்!

பிழைக்கும் வழியாய் இருப்பதாலே!
பிள்ளைக்கு பலமொழி கற்பிப்போம்!
அறிவைப் பெருக்கிட மொழியறிவோம்!
அனைவரும் மகிழ்வுற வாழ்ந்திடுவோம்!

கற்க கசடற கற்றிடுவோம்!
கல்வியில் சிறந்தே விளங்கிடுவோம்!
தமிழை மூச்சாய் சுவாசித்தே
தலைமுறை தாண்டி நிலைத்திடுவோம்!

தமிழின் சிறப்பை அறிந்திடுவோம்!
தமிழைத் தாயாய் போற்றிடுவோம்!
தமிழ்மறை குறளைப் படித்திடுவோம்!
தமிழனாய் குரலை உயர்த்திடுவோம்!

வாழ்க தமிழ்!

இன்ப(ம்) மழையாகும் கவிதை




கல்லின் சிலைபோல
சொல்லில் உருசெய்ய
அகத்தின் அன்பெல்லாம்
எழுத்தில் பதிவாக
இறையின் வடிவாகும்
கவிதை!

காலம் மறைந்துவிட
தூரம் தொலைந்துவிட
உயிரும் உருகிவிட
உறைந்தே நின்றுவிட
உண்மைக் காதலாகும்
கவிதை!

வலியே வரியானால்
ருத்தம் எழுத்தானால்
ருத்தும் ரணங்கூட
விரைவில் பறந்தோட
விரும்பும் மருந்தாகும்
கவிதை!

மனதின் பதிவாலே
அழுத்த விளைவாலே
உணர்ச்சிக் குழம்பாலே
உதிக்கும் ஊற்றாகி
வழியும் மொழியருவி
கவிதை!

மொழியின் வழியாலே
எழுத்தின் சீராலே
அணியின் அழகாலே
நளின நதியாகி
கருத்தால் கடலாகும்
கவிதை!

வார்த்தைப் பொருளாலே
வாசிக்கும் திறத்தாலே
உள்ளம் இளகிவிட
இதயம் குளிர்ந்துவிட
இன்ப(ம்) மழையாகும்
கவிதை!

15/05/2017

அலுவலக கிருஷ்ணா

கிருஷ்ணா! கிருஷ்ணா!!

அலுவலக நண்பரெல்லாம்
அன்பாக அழைக்கின்றார்!

உன்நாமம் திருநாமம்
உச்சரிக்கும் அனைவருமே
உன்வேகம் யாதென்று
உண்மையிலே அறிந்தோரே!

சின்னவேலை பெரியவேலை
சிந்தனையில் தேவையில்லை
சிரத்தையோடு பணிசெய்தால்
சிரம்ஓங்கும் நிச்சயமாய்!

வாழ்க பல்லாண்டு!
வாழ்க வளமுடன்!

மனதில் வெறுமை ஏனோ?

மனதில் வெறுமை ஏனோ?
மதியில் தனிமை ஏனோ?
அமைதியை இழந்தேன் ஏனோ?
அவனை மறந்தததால் தானோ?!

அனைத்தும் அறிந்த அவனா-என்னை
அமைதியை அறிந்திட பணித்தான்
புயலாய் வீசிய என்னை
புழுவாய் பணித்தது ஏனோ?!

புதிராய் என்னுள் கேள்விகள்
புதிதாய் முளைக்குது இங்கே
புரிந்தால் என்னுள் மகிழ்வேன்
புதினம் புதிதெனக் கொள்வேன்

கண்ணன் பாடல்




கண்ணனின் வாயினில் அண்ட சராசரம்
கண்டதும் தாயினுள் வந்த பரவசம்

என்னென சொல்வேனோ?!- அதை
எப்படிச் சொல்வேனோ?!

கோவிந்தன் குழலொலி ராகத்தைக் கேட்டதும்
கோபியர் நெஞ்சினுல் பூத்திடும் காதலை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

கிருஷ்ணனின் சங்கொலி காதினில் வீழ்ந்ததும்
கிராதகன் துரியனின் சேனைகள் அதிர்ந்ததை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

மாதவன் வாய்மொழி கீதையை கேட்டதும்
ஆதவன் போல்ஒளி மின்னிடும் ஞானத்தை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

கேசவன் கையினில் சுழன்றிடும் சக்கரம்
கேடையம் ஆகியே காத்திடும் தர்மத்தை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

ஒவியம்: நதியா நாகராஜ்

14/05/2017

நன்றி(டா) அப்பா



பிறந்தநாள் விழாவொன்றில்
பிள்ளைகள் மகிழ்வுறவே
பற்பல நிகழ்ச்கசிளை
படிப்படியாய் அங்கேற்றினர்....

அங்கிருந்த பிள்ளைகளோ
ஆர்வத்தின் மிகுதியாலே
ஆனந்தக் கூத்தாடினர்....,
ஆசையோடு என்மகனும்
ஆடிடவே எண்ணமுற்று
எம்கரத்தை பற்றியங்கே
ஏக்கமான பார்வையோடு
'வாங்கப்பா' என்றழைக்க!

என்ன செய்ய? ஏது செய்ய?
என்றே நான் தயங்கி நிற்க!
என்னவளோ ஏற்றிவிட்டாள்
ஏறிவிட்டேன் மேடையிலே..

சோழபுரம் பள்ளியிலே
கோலாட்டம் ஆடியுள்ளேன்
அதைத்தவிற இதுவரையில்
ஆடவில்லை மேடையிலே!

கூட்டத்திலே ஒருவனாக
ஆட்டத்திலே குதித்துவிட்டேன்
ஆச்சரியம் என்னவென்றால்?!
ஆடியதில் சிறந்தவரில்
அடியேனும் உண்டாமாம்...!!!

அகத்தினிலே சிரித்துவிட்டேன்
அப்படியே அடக்கிவிட்டேன்

சந்தோச மனத்தோடே
சிரிப்பான முகத்தோடே
அலையெல்லாம் அடங்கியதும்
அமைதியான இடமொன்றில்
வந்தமர்ந்த எம்மகனின்
வாய்மொழியை யாதுரைப்பேன்?!

'நன்றி அப்பா வந்ததற்கு'
என்றேதான் சில வார்த்தை
உதிர்த்தானே அன்போடு...
உளமாறக் கூறியதில்
உறைந்துவிட்டேன் அப்படியே.....

உண்மையிலே நானும்தான்
அவனாலே வளர்கின்றேன்

நன்றிடா அப்பா உமக்கும்

01/05/2017

அணுவை அறிவோம்



அண்டம் பிண்டம் அனைத்திலுமே
அணுவின் இருப்பே ஆதாரம்!
அணுவை ஆதியில் அறிந்தவர்கள்
அறிவில் சிறந்த தமிழர்களே!


ஐன்ஸ்டீன் கூறிய விஞ்ஞானம்!
பிரபஞ்ச ரகசிய மெய்ஞானம்!
அனைத்தும் அறிந்த சித்தர்களை
அகிலம் போற்றிட வேண்டாமா?!

அணுவின் புரோட்டான் எலெக்ட்ரான்கள்
சிவனின் லிங்கக் குறியீடே!
ஒளியின் வேகத் தாக்குதலில்
உட்கரு சக்தியாய் வெளிப்படுமே!

காலமும் தூரமும் மறைகின்ற
சாத்திரக் கதைகள் பொய்யில்லை
சார்பியல் கொள்கை விதிபோலே
பார்க்கும் கண்களே ஆதாரம்!

தூணிலும் துரும்பிலும் இருப்பதுபோல்
ஊனிலும் உயிரிலும் உறைகிறதே!
என்னிலும் உன்னிலும் இருக்கின்ற
அணுவே ஹரியென அறிந்திடுவோம்!

22/04/2017

குரு வணக்கம்



அருள்பசியால் இரை(ற)தேடி
அலைந்தேதான் திரிந்தேனே!
அருள்மழையே பொழிந்தாலும்
அடியேன்நான் நனையலையே!

வந்தவழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்னேனே!
போனயிடம் அத்தனையும்
பாவிப்பசி தீரலையே!

முக்திவழி காட்டிடவே
முத்து ஐயா வந்தாரே!
அருட்தந்தை கருத்துக்களை
அமுதம்போல தந்தாரே!

எம்குருவின் ஆசியாலே
என்பிணிகள் ஓடியதே!
அகத்தவத்தின் அற்புதத்தால்
அருள்பசியும் அடங்கியதே!

ஆதியையாம் அடைந்திடவே
ஆனதவம் சொன்னாரே!
விழிப்புநிலை சாவியாலே
விதிப்பூட்டைத் திறந்தாரே!

துயர்துடைத்த எம்குருவை
துரியத்திலே வாழ்த்துகிறேன்!
மனமாலே மொழியாலே
மகிழ்ந்ததேநான் வணங்குகிறேன்!

வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் ஐயா

18/04/2017

வள்ளுவம் போற்றுவோம்







அறத்தை உயிராய்க் காத்து
பொருளை உடலுக்காய் சேர்த்து
இன்பத்தை மனதினில் கொள்வோம்

கடவுளைப் பாயிரம் பாடி
இல்லறம் நல்லறம் செய்து
துறவறம் பொதுநலம் பயில்வோம்

மூன்று பால்களும் பயின்றால்
நான்காம் பாலாம் வீட்டை
ஐங்கரன் அருளால் பெறலாம்

ஊழ்வினை ஆற்றும் செயலால்
உயர்வும் தாழ்வும் வரலாம்
உண்மை தவறிட வேண்டாம்

நட்பியல் அறிந்தோர் வாழ்வில்
நாளும் இன்பம் அடைவார்
நட்பால் உயர்வைப் பெறுவார்

கர்மம் செய்திடும் முன்னே
காலம் கணித்திட வேண்டும்
கடமை ஆற்றிட வேண்டும்

அரசர் அமைச்சர் எல்லாம்
அறத்தை அரணாய் காக்க
அளித்த குறள்கள் பயில்வீர்

கல்லாமை இருளை அகற்றி
கல்வியை அறிவாய் மாற்றி
அன்பை அருளாய் ஆக்குவோம்

ஊடல் கூடல் காமம்
ஊறுகள் களைத்திடும் பாடம்
உயர்மறை திருக்குறள் ஒதும்

குறளால் தமிழுக்குப் பெருமை
தமிழால் தமிழர்க்குப் பெருமை
தமிழரால் தரணிக்கேப் பெருமை

வாழ்க தமிழ்!
வாழ்க குறள்!
வாழ்க வள்ளுவன்!

மகளே செல்ல மலரே




மகளே செல்ல மலரே!
மாரில் தவழும் மயிலே!
மழலை கொஞ்சம் மொழியால்
மனதில் மின்னும் நிலவே!

வித்தில் விளைந்த முத்தே!
விருப்பில் பிறந்த சொத்தே!
விவேகம் கலந்த குறும்பால்
விடியல் கொள்ளுது மனமே!

கவிதா கருவழி உறவே!
கடவுள் அருள்வழி வரவே!
கதைக்கும் அழகைக் கண்டால்
களிப்பில் கவிதை வருதே!

தங்கை இல்லா நிலையே!
தந்தது எம்முள் குறையே!
தங்கை மகளாய் வந்ததால்
தந்தையும் தமையனும் ஒன்றே!

அப்பா என்ற சொல்லே!
அனுதினம் அமுதைத் தருதே!
அணுவின் ஒலியைக் கேட்டால்
அகிலமே மறந்து விடுமே!