15/07/2024

அழுத்தம்


 
அழுத்தம் என்னும் பேராற்றல்தான்
இந்த மொத்தப் பிரபஞ்சத்தின்
மூல விசை!
அழுத்தம் என்னும் ஓராற்றல்தான்
இந்த உள்ளப் பிரளயத்தின்
உந்து விசை!

இரு விரல்களின் உராய்வில்
சொடக்கு வருவதற்கும்
இரு உடல்களின் உராய்வில்
ஜனனம் வருவதற்கும்
மூல காரணம் ஒன்றுதான்
அது; அழுத்த விசையே...!

சின்னப் பம்பரம் சுழல்வதற்கும்
பெரிய கோள்கள் சுழல்வதற்குமே
மூல காரணம் ஒன்றுதான்
அதுவும்; அழுத்த விசையே..!

அழுத்தம்
குறைந்தாலும் ஆபத்து
கூடினாலும் ஆபத்து
சந்தேகமெனில்
பீபி(BP) உள்ளவர்களிடம் கேளுங்கள்!

அழுத்தம்
இருந்தாலும் பிடிக்காது
இல்லையென்றாலும் ருசிக்காது
சந்தேகமெனில்
ஐடி(IT) பணியாளர்களிடம் கேளுங்கள்!

ஆழம் அதிகரித்தால்
அழுத்தம் அதிகரிக்கும்
இது அறிவியல்...

ஆழம் அதிகரித்தால்
அழுத்தம் குறையும்
இது ஆன்மீகம்..

எனில் அழுத்தம் சரியா? தவறா?

தரிசான மனத்தை உழுது
வளமான மனமாக்கினால்
அழுத்தம் சரியே...
அழகான மனத்தைக் அழுத்தி
அழுக்கான மனமாக்கினால்
அழுத்தம் தவறே...

கரி பிடித்த சட்டியை
அழுத்தித் தேய்த்தால்தான்
சுத்தமாகும்!
அஃதே..
வினை பிடித்த சிருஷ்டியை
அழுத்தி நீக்கினால்தான்
சுத்தமாகும்...

பூனை யானைமேல் நடப்பதும்
யானை பூனைமேல் நடப்பதும்
ஒன்றாகாதுதான்....ஆனால்
என்றோ நடந்த ஒன்றை
எப்போதும் அசைபோட்டால்
பூபோன்ற அழுத்தமும்
பூகம்ப அழுத்தமாகலாம்..
ஜாக்கிரதை..
அழுத்தம்
இடம்பொறுத்தும் மாறும்..
பொருள்பொறுத்தும் மாறும்...

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்
அழுத்தத்தை அழுத்தியே எடுக்கலாம்
முயன்று பாருங்கள்...!!!

அழுத்தம் அழகாக்கும்
அந்த இஸ்திரி பெட்டியைப்போல்!
அழுத்தம் அழகாகும்
இதோ இந்தக் கவிதையைப்போல்!

✍️செ. இராசா

No comments: