21/03/2024

பிழைப் பத்து -----குறள் வெண்பாக்கள்

 #பிழைப்_பத்து
#குறள்_வெண்பாக்கள்

இத்தனைநாள் ஆனபின்னும் இன்னும் பிழையென்றால்
எத்தனைநாள் வேண்டும் இதற்கு?!
(1)

செய்த பிழையையே செய்கின்றோம் என்றானால்
செய்வதில் என்ன சிறப்பு?
(2)

ஒற்றுப் பிழையென்றால் ஓரள(வு) ஏற்றிடலாம்
முற்றும் பிழையென்றால் நோவு!
(3)

தப்பின்றி செய்தால் சரியென்று சொல்லாதோர்
தப்பிழைத்தால் சொல்லிடுவர் தப்பு!
(4)

உயரத்தில் நிற்போரின் ஒற்றைப் பிழையும்
துயரம் கொடுக்கும் தொடர்ந்து!
(5)

சிறுபிழை தானென்று சிந்திக்க வேண்டாம்
சிறுபொறியில் காடழியும் சேர்ந்து!
(6)

தளைதட்டும் பாட்டெழுதித் தந்திடுவோம் என்றால்
தலைநிமிரும் பேருண்டா சொல்?
(7)

எழுதுவோர் கண்களுக்(கு) எட்டாப் பிழையைக்
கழுகுபோல் கண்டிடுவர் காண்!
(8)

மீண்டும் முயல்கின்றோம் மீண்டும் தவறென்றால்
மீண்டும் முயன்றிடுவோம் மீண்டு!
(9)

எழுத எழுதத்தான் ஏற்றமுறும் என்றால்
எழுத்தைத் தவம்போல் எழுது!
(10)

✍️செ. இராசா

No comments: