அழுக்கு
அழுக்கை
அழுக்குதானே என்று
அலட்சியப்படுத்தாதீர்..
தூசியும் அழுக்கும் சேர்ந்ததே
சுற்றிவரும் கோள்கள்...
அழுக்கை
இழுக்கென்று கூறி
அறைகூவல்விடாதீர்...
ஈருடலின் அழுக்குகள் சேர்ந்ததே
உலவுகின்ற உயிர்கள்...
பார்வதியின் அழுக்கில்தான்
பிள்ளையாரின் அவதாரமென்பது வெறும் கதையல்ல...
அது உண்மையை உணர்த்தும் தத்துவம்...
இந்திரனின் அழுக்கால்தான்
அகலிகையின் அவலமென்பது
வெறும் புராணமல்ல..
அது இன்றுவரைத் தொடரும் பேரவலம்....
ஆம்..
பிண்டமும் அழுக்கு
அண்டமும் அழுக்கு
நீயும் அழுக்கு
நானும் அழுக்கு
உயிரிருக்கும் வரைதான்
உடலுக்கு மரியாதை...
உயிர் பிரிந்தால்
உடலும் அழுக்கே...
அகத்தின் அழகு மட்டுமல்ல
அகத்தின் அழுக்கும்
முகத்தில் தெரியும்
முகத்தில் மட்டுமல்ல
எழுத்திலும் தெரியும்....
சில அழுக்குகள் ஆபத்தானவை
உடனே நீக்கிவிடவேண்டும்...
இல்லையேல்
பற்றிப் படிந்து
புற்றுநோய்க்கு வழிவகுக்கும்...
சில அழுக்குகள் நீக்கமுடியாதவை
அனுபவித்துதான் ஆக வேண்டும்..
இல்லையேல்...
கர்மவினை போல்
வேறுவழியில் வலிகொடுக்கும்...
அழுத்த அழுக்கை
அழுது தீருங்கள்...
பழுத்த அழுக்கை
விலகி வாருங்கள்...
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..
எல்லா அழுக்கும் அழுக்கல்ல உள்ளத்தின்
பொல்லா அழுக்கே அழுக்கு!
செ. இராசா
23/08/2023
அழுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment