குரு
செல்களுக்குள் உட்புகுந்த
.....சிற்றின்ப ஆசையினை
அல்லலென எண்ணி
......அகற்றிடுவீர்- இல்லையெனில்
தொல்லை பலதருமே
.....தொற்றுபோல் பற்றிடுமே
சொல்லாத் துயர்தருமே
......சூழ்ந்து!
சீடன்
சிற்றின்பம் தப்பென்று
......செப்புகின்ற நற்குருவே
சிற்றின்பம் தப்பென்றால்
..... செய்ததுயார்?- குற்றமுற
ஆப்பிளைத் தின்றதுதான்
......ஆதாமின் பாவமெனில்
ஆப்பிள்;ஏன் சைத்தான்;ஏன்
......அங்கு?!
குரு
ஆண்டவரின் செய்கையில்
.....ஆயிரம் அர்த்தமுண்டு
தீண்டாதீர் என்றபின்னும் ....
......தீண்டியதார்?- வேண்டியதார்?
அத்தனைக்கும் காரணமாம்
......ஆசையெனும் சைத்தானை
சித்தத்தில் நீக்குவதே
......தீர்வு!
சீடன்
என்னதான் உள்ளதென
......எல்லோரும் எண்ணுவதில்
என்ன பிழையுண்டோ
.......யாமறியோம்- என்றாலும்
சிற்றின்பம் தாண்டாமல்
.......சேர்ந்திடுமா பேரின்பம்
குற்றமென்ன எம்கூற்றில்
.......கூறு!
குரு
ஒன்றிலும் ஒன்றாமல்
......ஒவ்வொன்றாய் தாண்டிடும்முன்
ஒன்றிலே பற்றியதில்
......ஓர்ந்திருந்தால்- நன்கறிவாய்
ஒன்றிற்கு மேலறிய
......ஓர்பிறவி பத்தாது
நன்கறிந்தோர் சொல்கேட்டால்
......நன்று!
செ. இராசா
No comments:
Post a Comment