31/07/2023

நண்பனைத்தேடி

 


பரம்பரைக்கே முதல் ஆளா
பொறியாளர் ஆகனும்னு
படிக்கிற ஆசையில்தான்
பல்கலைக் கழகம்வந்தோம்..

தெக்கால என் ஊரு..
வடக்கால உன் ஊரு...

சீமைன்னு பேருவச்ச
செம்மண் பூமிவிட்டு
சிவனார் வாழ்கின்ற
சிதம்பரம் வந்தபோது
ஒன்னுமே புரியாம
ஒதுங்கிநான் நின்னப்ப
மாயவரம் பக்கத்து
சேமங்கலம் ஊரான்னு
கைகொடுத்த அந்நாளே
களங்கமில்லா நட்பானோம்...

என் அம்மா உன் அம்மா
உன் அம்மா என் அம்மான்னு
ஒன்னுக்குள் ஒன்னாகி
ஊரெல்லாம் சுத்திவந்தோம்...

அமுக்கு அமுக்குன்னு
அமுக்கிவச்ச சாப்பாட்ட
இரயிலடி ஓரத்துல
எத்தனை நாள் சாப்பிட்டிருப்போம்?!

விடுமுறை விட்டாலே
வீட்டுக்கு கூப்பிடுவ...
சாப்பிடு சாப்பிடுன்னு
சாப்பாடா போடுகிற
அம்மா உபசரிப்ப
எத்தனை நாள் கண்டிருப்போம்?!

சுகருக்கு மாத்திரை போட்டு
ஐஸ்கிரீமும் சாப்பிடுகிற
அப்பாவின் சேட்டையத்தான்
எத்தனை நாள் இரசிச்சிருப்போம்?!

சாமியறை எங்கேன்னு...
சாமிப்படம் எங்கேன்னு‌..‌
அன்பின் திமிரால
அம்மாட்ட கேட்டப்
நாத்திகக் குடும்பம்னு
நாசுக்கா சொன்னாலும்
அதெல்லாம் முடியாதுன்னு
அடம்பிடிச்சு மாட்டியதை
எத்தனைநாள் சொல்லிசொல்லி
எப்படில்லாம் சிரிச்சிருப்போம்...?!

அப்படி இப்படின்னு
எப்படியோ படிச்சிட்டு
நீ எங்கோ
நான் எங்கோன்னு
எங்கெங்கோ போயிட்டோம்...
எங்கேயோ வாழுறோம்...

இணைய காலத்திலும்
இணைய முடியாத நட்பாக
இன்னுந்தான் தேடுறோம்...
இல்லை இல்லை...

இன்னுந்தான் தேடுறேன்...
எங்க நண்பா இருக்க?!

#நண்பனைத்_தேடி

✍️செ. இராசா

(மாயவரம் அருகே உள்ள சேமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த சுபாஷ், S/o இரகுபதி என்னும் எம் நண்பரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி நன்றி)


30/07/2023

ஆசைப் படாதவன் ஆசைப் பட்டேங்க

 


ஆசைப் படாதவன் ஆசைப் பட்டேங்க
ஆழி அலைபோல ஆடி நின்னேங்க
பாதை தடம்மாறி பதறிப் போனேங்க
பார்வை தெரியாம பரிதவிச்சேங்க 
 
என்னங்க என்றதுமே எல்லாம் போச்சுங்க
வந்த கனவுகூட வாபஸ் ஆச்சுங்க...
விடியும் முன்னால விடிஞ்சு போச்சுங்க
விடிஞ்ச பின்னால தூக்கம் வல்லீங்க
 
✍️செ. இராசா

26/07/2023

ஈசனே.............சிவகாமி நேசனே மெட்டு



சொல்கின்ற சொல்லுக்கும்
......செய்கின்ற செய்கைக்கும்
............சொட்டளவும் பேதமில்லை!
...சூழ்ந்துள்ள பேர்கண்டும்
.......சொல்கின்ற பொய்கண்டும்
..........எண்ணத்தில் மாற்றமில்லை!

வெல்கின்ற காலத்தில்
...‌...வென்றிடுவோம் என்றாலும்
...........வேகத்தை விட்டதில்லை!
...நேர்கின்ற நேரத்தில்
.......நேராமல் போனாலும்
............நெஞ்சத்தில் நழுவவில்லை!

இல்லையெனச் சொல்லாமல்
.......இன்னுமென இன்னுமென
...........இன்னும்தான் எழுதுகின்றேன்!
...இவ்வுலகை வெல்லாமல்
.....என்னெழுத்தை ஏற்றாமல்
.......ஈசனையும் விடுவதில்லை!

சில்லறைகள் செய்கின்ற
.....சீரில்லா செய்கையினால்
........ செந்தமிழைக் காணவில்லை!
சீர்கெட்ட நற்றமிழை
.....சீராக்கம் செய்யாமல்
.......நானுமினி விடுவதில்லை

ராஜனே கவிதாவின் நேசனே- யாம்
அறங்காத்த வள்ளுவரின் தமிழ்தாசனே..

✍️செ. இராசா

25/07/2023

வயது



வயது என்பது
வெறும் வருடக் கணக்கல்ல
அது...
இறந்த காலத்தின்
இருந்த அடையாளம்...

வயது என்பது
வெறும் நாட்காட்டி நகர்வல்ல
அது...
தோன்றிய நேரத்தின்
தொன்மை அடையாளம்...

ஆச்சரியம் பாருங்கள்
பெண் பூப்படைந்தால்
வயதுக்கு வந்தது என்கிறோம்..
குறிப்பிட்ட நேரத்தைக்
குறிப்பேட்டிலும் குறிக்கின்றோம்

ஆனால் ஆண்களுக்கு அப்படியா?

இங்கே.‌‌.
மீசை அரும்பியதையும்
குரல் உடைந்ததையும்
குறித்து வைத்திருக்கிறோமா?!
இல்லைக் குறிக்கத்தான் முடியுமா?!...

ஏழு கழுதை வயசாயிடுச்சே
இப்படித் திரிகிறாயே என்றால்
அது..
குடும்பச்சுமை தூக்கும் வயதைக்
குறியீட்டில் கூறுவதாய் அர்த்தம்

நாற்பது வயசுல
நாய்க்குணம் வந்திடுச்சு என்றால்
அது..
உணர்ச்சி வயப்படும் அவலத்தை
உரக்கச் சொல்வதாய் அர்த்தம்
இல்லை.
உறைக்கச் சொல்வதாய் அர்த்தம்...

இங்கே‌‌...
இளமையில் தாடிவிட்டு
வயதைக் கூட்டிக்காட்டும் நாம்தான்
முதுமையில் மீசையையும் மழித்து
குறைத்துக்காட்ட முயல்கிறோம்
எனில்...
இங்கே எத்தனை முரண்கள்?!!

உன் வயது என் அனுபவம்
என்கிற சொற்றொடர்க்கெல்லாம்
இப்போது வேலையில்லை...
பேரன் வயதுப் பையன்
பேர் சொல்லிக் கூப்பிட்டாலும்
ஹாய் சொல்லக் கற்றால்தான் வேலை

இங்கே மதிப்பென்பது
வயதுக்கில்லை
செயலுக்கே....

அவ்வளவு ஏன்?
அப்பனுக்கு பாடம் சொன்ன
சுப்பையா முதல்
அப்பரே சுமந்து சென்ற
சம்பந்தர் வரை
இங்கே மதிப்பென்பது
வயதுக்கில்லைத்
திறனுக்கே...

இனியும்...
நாங்கெல்லாம் அந்தக் காலத்துல...
என்றெல்லாம் பழைய புராணமே பாடாமல்
நாங்களும் ஏ-ஐ கால ஆட்களேயென
இப்போதும் கற்க முனைந்தால்
வயது என்பது
வயதே அல்ல
அவை வெறும் எண்களே....

✍️செ. இராசா

24/07/2023

நீங்கள் எங்கள் மேல் ஏறித்தான்

நீங்கள் எங்கள் மேல் ஏறித்தான் உச்சம் அடைய துடிக்கின்றீர்...
ஆனாலும் எங்களுக்குத் துளிகூட
பொறாமை இல்லை
காரணம் நாங்கள் ஏணிகள்..✍️

23/07/2023

சுத்த வெளிசெல்லும்

 


சுத்த வெளிசெல்லும்
.....சூட்சுமம் கற்றறிந்து
சித்த உணர்வோடு
.....சிந்தித்தால்- நித்தம்
இறையுணர்வு மேலோங்கும்
.....இன்னல்கள் மாயும்!
மறைபொருள் காணும்
.....மதி!
 
✍️செ. இராசா

21/07/2023

 


கோப்பைகளத் தட்டித் தட்டி
குடிக்கிறான்- குடிச்சாக்
கோட்டையில இருப்பவன்போல்
கதைக்கிறான்..

ஆடுமுன்னே சச்சினாட்டாம்
அலட்டுறான்- ஆனா
ஆடையில சகுனியாட்டம்
ஆடுறான்.....

எம்மாம் பெரிய ஆளு எல்லாம்
சும்மாதானே இருக்குறான்
சும்மா இருக்கும் ஆளு எல்லாம்
யம்மா சீனு போடுறான்...

ஹேய்...

20/07/2023

கேட்டவுடன் வருபவளே..

 


கேட்டவுடன் வருபவளே..
கேட்காமலே தருபவளே.‌‌
தேடுகிறேன் தெரியவில்லையோ- எந்தன்
தேடலிலே தெளிவு இல்லையோ?

பாக்களென வருபவளே‌.‌..
பாடலெனத் தருபவளே...
வாடுகிறேன் தெரியவில்லையோ- எந்தன்
வார்த்தையிலே உணர்வு இல்லையோ?!

வயசு போகிறது வாடி அம்மா
வையம் வாழ்த்திடநீ தாடி அம்மா
மனசு நோகிறது வாடி அம்மா
நானும் வென்றிடவே தாடி அம்மா

✍️செ‌. இராசா


19/07/2023

தேவிஸ்ரீ ஆரி

 


தேவிஸ்ரீ ஆரி
தேவிஸ்ரீ ஆரி
நெல்லிக்குப்பம் வாரீர்
தேவிஸ்ரீ ஆரி...
 
முகலாயக் கைவண்ணம்
முறையாக ஆரம்பம்
அழகான உருவாக்கம்
அதுதானே அடையாளம்
 
வண்ண வண்ண கற்களுடன்
கண்ணைக் கவரும் சித்திரங்கள்
மின்னும் தங்கச் சங்கிலிபோல்
அங்க மாகிய விசித்திரங்கள்
 
பாரம்பரியப் பெருமை கொண்ட
ஆரி வேலைத் தொழில் நுட்பம்
ஆதித் தமிழர் வழியில் வந்த
தச்சுக் கலையின் தொழில் நுட்பம்
தேவி ஸ்ரீயால் எழில் கூட்டும்
 
நச்சென ஃபேஷன் டிசைனிங்
பட்டென ஈர்த்திடும் டிசைனிங்
ஜிகுஜிகு ஜிகுஜிகுவென
ஜிகுஜிகு ஜிகுஜிகுவென
ஜொலித்திடும் ஆரி டிசைனிங்...
நச்சென ஃபேஷன் டிசைனிங்
பட்டென ஈர்த்திடும் டிசைனிங்
ஜிகுஜிகு ஜிகுஜிகுவென
ஜிகுஜிகு ஜிகுஜிகுவென
ஜொலித்திடும்...
தேவிஸ்ரீ ஆரி டிசைனிங்....
 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கனவான நம் எண்ணம்
நனவாக வாருங்கள்
தெளிவாக உருவாக்கும்
திறனிங்கே பாருங்கள்
 
என்ன என்னக் கற்பனையோ
என்ன வேணும் கேளுங்கள்
மின்னல் வேகம் செல்லுகின்ற
எங்கள் வேகம் பாருங்கள்
 
நெல்லிக்குப்பப் பெருமை சொல்ல
வந்தது தேவி Sri ஆரி...
பிளவ்சிஸ் வொர்க்கில் புதுமை செய்ய
வாரீர் தேவி Sri ஆரி.
வாரீர் தேவி Sri ஆரி
 
நச்சென ஃபேஷன் டிசைனிங்
பட்டென ஈர்த்திடும் டிசைனிங்
தகதக தகதகவென
தகதக தகதகவென
ஜொலித்திடும் ஆரி டிசைனிங்...
நச்சென ஃபேஷன் டிசைனிங்
பட்டென ஈர்த்திடும் டிசைனிங்
தகதக தகதகவென
தகதக தகதகவென
ஜொலித்திடும்...
தேவிஸ்ரீ ஆரி டிசைனிங்....
 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தாங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
 
Devi Sri Aari works
நம்பர் 7, திருவிக தெரு,
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி எண்:
96004 01263
 
✍️செ. இராசா

17/07/2023

ஐயா முத்துச்சாமி

 


ஐயா #முத்துச்சாமி - அவர்
எங்களோட சாமி..
ஐயா முத்துச் சாமி- அவர்
போலயாரு காமி..
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

காலையில் எந்திரிச்சு
வேலைக்குப் போகசொல்ல
கட்டிங்க விட்டுக்கிட்டு
போறதில தப்புயில்லை..

கஷ்டப்படும் நம்மசனம்
இஷ்டப்பட்டுக் குடிக்கனும்
இஷ்டப்படிக் குடிக்கனுன்னா
நம்மகடை தொறக்கனும்...

(வேறு)
குடிமகன் உரிமையக்
காத்திடும் தலைவரு...
விடிந்ததும் தொறந்திட
விரும்பிடும் அமைச்சரு

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

ஐயா முத்துச்சாமி - அவர்
எங்களோட சாமி..
ஐயா முத்துச் சாமி- அவர்
போலயாரு காமி..

✍️செ. இராசா