வயது என்பது
வெறும் வருடக் கணக்கல்ல
அது...
இறந்த காலத்தின்
இருந்த அடையாளம்...
வயது என்பது
வெறும் நாட்காட்டி நகர்வல்ல
அது...
தோன்றிய நேரத்தின்
தொன்மை அடையாளம்...
ஆச்சரியம் பாருங்கள்
பெண் பூப்படைந்தால்
வயதுக்கு வந்தது என்கிறோம்..
குறிப்பிட்ட நேரத்தைக்
குறிப்பேட்டிலும் குறிக்கின்றோம்
ஆனால் ஆண்களுக்கு அப்படியா?
இங்கே..
மீசை அரும்பியதையும்
குரல் உடைந்ததையும்
குறித்து வைத்திருக்கிறோமா?!
இல்லைக் குறிக்கத்தான் முடியுமா?!...
ஏழு கழுதை வயசாயிடுச்சே
இப்படித் திரிகிறாயே என்றால்
அது..
குடும்பச்சுமை தூக்கும் வயதைக்
குறியீட்டில் கூறுவதாய் அர்த்தம்
நாற்பது வயசுல
நாய்க்குணம் வந்திடுச்சு என்றால்
அது..
உணர்ச்சி வயப்படும் அவலத்தை
உரக்கச் சொல்வதாய் அர்த்தம்
இல்லை.
உறைக்கச் சொல்வதாய் அர்த்தம்...
இங்கே...
இளமையில் தாடிவிட்டு
வயதைக் கூட்டிக்காட்டும் நாம்தான்
முதுமையில் மீசையையும் மழித்து
குறைத்துக்காட்ட முயல்கிறோம்
எனில்...
இங்கே எத்தனை முரண்கள்?!!
உன் வயது என் அனுபவம்
என்கிற சொற்றொடர்க்கெல்லாம்
இப்போது வேலையில்லை...
பேரன் வயதுப் பையன்
பேர் சொல்லிக் கூப்பிட்டாலும்
ஹாய் சொல்லக் கற்றால்தான் வேலை
இங்கே மதிப்பென்பது
வயதுக்கில்லை
செயலுக்கே....
அவ்வளவு ஏன்?
அப்பனுக்கு பாடம் சொன்ன
சுப்பையா முதல்
அப்பரே சுமந்து சென்ற
சம்பந்தர் வரை
இங்கே மதிப்பென்பது
வயதுக்கில்லைத்
திறனுக்கே...
இனியும்...
நாங்கெல்லாம் அந்தக் காலத்துல...
என்றெல்லாம் பழைய புராணமே பாடாமல்
நாங்களும் ஏ-ஐ கால ஆட்களேயென
இப்போதும் கற்க முனைந்தால்
வயது என்பது
வயதே அல்ல
அவை வெறும் எண்களே....
செ. இராசா
25/07/2023
வயது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment