31/07/2023

நண்பனைத்தேடி

 


பரம்பரைக்கே முதல் ஆளா
பொறியாளர் ஆகனும்னு
படிக்கிற ஆசையில்தான்
பல்கலைக் கழகம்வந்தோம்..

தெக்கால என் ஊரு..
வடக்கால உன் ஊரு...

சீமைன்னு பேருவச்ச
செம்மண் பூமிவிட்டு
சிவனார் வாழ்கின்ற
சிதம்பரம் வந்தபோது
ஒன்னுமே புரியாம
ஒதுங்கிநான் நின்னப்ப
மாயவரம் பக்கத்து
சேமங்கலம் ஊரான்னு
கைகொடுத்த அந்நாளே
களங்கமில்லா நட்பானோம்...

என் அம்மா உன் அம்மா
உன் அம்மா என் அம்மான்னு
ஒன்னுக்குள் ஒன்னாகி
ஊரெல்லாம் சுத்திவந்தோம்...

அமுக்கு அமுக்குன்னு
அமுக்கிவச்ச சாப்பாட்ட
இரயிலடி ஓரத்துல
எத்தனை நாள் சாப்பிட்டிருப்போம்?!

விடுமுறை விட்டாலே
வீட்டுக்கு கூப்பிடுவ...
சாப்பிடு சாப்பிடுன்னு
சாப்பாடா போடுகிற
அம்மா உபசரிப்ப
எத்தனை நாள் கண்டிருப்போம்?!

சுகருக்கு மாத்திரை போட்டு
ஐஸ்கிரீமும் சாப்பிடுகிற
அப்பாவின் சேட்டையத்தான்
எத்தனை நாள் இரசிச்சிருப்போம்?!

சாமியறை எங்கேன்னு...
சாமிப்படம் எங்கேன்னு‌..‌
அன்பின் திமிரால
அம்மாட்ட கேட்டப்
நாத்திகக் குடும்பம்னு
நாசுக்கா சொன்னாலும்
அதெல்லாம் முடியாதுன்னு
அடம்பிடிச்சு மாட்டியதை
எத்தனைநாள் சொல்லிசொல்லி
எப்படில்லாம் சிரிச்சிருப்போம்...?!

அப்படி இப்படின்னு
எப்படியோ படிச்சிட்டு
நீ எங்கோ
நான் எங்கோன்னு
எங்கெங்கோ போயிட்டோம்...
எங்கேயோ வாழுறோம்...

இணைய காலத்திலும்
இணைய முடியாத நட்பாக
இன்னுந்தான் தேடுறோம்...
இல்லை இல்லை...

இன்னுந்தான் தேடுறேன்...
எங்க நண்பா இருக்க?!

#நண்பனைத்_தேடி

✍️செ. இராசா

(மாயவரம் அருகே உள்ள சேமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த சுபாஷ், S/o இரகுபதி என்னும் எம் நண்பரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி நன்றி)


No comments: