இரட்டைப்படை_செ_இராசா
தனிமையில் வாழ்வது தானொருகை ஓசை!
இனிமையாய் வாழ்வீர் இணைந்து.
(1)
இணைந்து மகிழ்ந்திட ஈட்டிவரச் சென்றே
நினைந்து கரையுதய்யா நெஞ்சு!
(2)
நெஞ்சு வலிக்குதே நீர்சொல்லும் காதையில்
கொஞ்சம் மனபலத்தைக் கூட்டு.
(3)
கூட்டுவதைக் கூட்டியபின் கூடிடலாம் என்றெண்ணி
வாட்டமுடன் போகுதய்யா வாழ்வு
(4)
வாழ்வுநல் வாழ்ந்திடவே வாட்டமும் தேவைதான்
பாழாகும் உன்இளமை பார்?
(5)
பார்க்கின்ற நேரத்தில் பாராமல் விட்டுவிட்டால்
யார்க்கும் இதுபோல்தான் இங்கு
(6)
இங்கெங்கே இல்லாமல் எங்கும் இருப்பதுகாண்
தங்குதடை, துன்பம், துயர்
(7)
துயரங்கள் நீங்கத் தொலைதூரம் சென்றே
முயன்றவரை ஈட்டும் முனைப்பு
(8)
முனைப்போ முயற்சியோ முன்னெடுப்போ எல்லாம்
நினைத்தல் நடந்தால் நலம்
(9)
நலமுடன் வாழவழி நம்நாட்டில் கண்டால்
புலம்பெயர மாட்டார் புரி!
(10)
புரிந்தோம்நாம் நன்றாய் புரியாதோர் ஆட்சி
சரியில்லை இங்குவெறும் சங்கு
(11)
சங்கம் வளர்த்தயினம் தான்வாழ்ந்த நாடுவிட்(டு)
எங்கும் நகருதய்யா ஏன்?
(12)
ஏனென்றால் என்சொல்ல எல்லாம் சதியால்தான்
போனர் புலம்தான் பெயர்ந்து
(13)
பெயர்ந்து விழுகின்ற பேரண்டக் கல்லாய்
பெயர்ந்துதான் போகும் பிழைப்பு
(14)
பிழைப்புக்காய் நம்மக்கள் பல்நாடு போனார்
அழையா விருந்தினர் ஆம்
(15)
ஆமென்று சொல்வோர் அனைத்திலும் முன்செல்வர்
தாமதிப்போர் பின்செல்வர் தான்
(16)
தன்முன்னே செல்வதற்காய் தன்னினத்தைத் தான்கவிழ்ப்பர்
என்னபெயர் வைப்போம் இவர்க்கு?
(17)
இவர்களால் தானய்யா இந்நிலை வந்தோம்
இவர்போல் அவரும் இடர்
(18)
இடர்வரினும் மேலும் இடராதே வெல்வோம்
தொடர்ந்தேநல் நேர்வழியைத் தொட்டு
(19)
தொட்டதெல்லாம் இங்கே துலங்கிடும் என்றானால்
சட்டென்று நிற்போம் தனித்து
(20)
ஐயா சுந்தரராஜன் தயாளன் &
செ. இராசா
No comments:
Post a Comment