31/08/2022

மயிரென்பர்- கண்டாயா?

 


மண்டையில் உள்ளவரை
......மாண்புடன் காண்பவர்கள்
மண்டையை விட்டால்
......மயிரென்பர்- கண்டாயா?
மீண்டும் வரமுடியும்
.......வீழ்ந்தாலும் தப்பில்லை
நீண்ட முடியாய் விழு!
 
செ. இராசா

நண்பர் சிவாவின் புதுமனைப் புதுவிழா வாழ்த்துகள்

 


#வாழ்த்துகள்_நண்பா (நண்பர் சிவாவின் புதுமனைப் புதுவிழா மற்றும் மகன் பேகனின் காதணிவிழா சிறக்க இனிய மனமார்ந்த
வாழ்த்துகள்)

பிறந்தகம்* விட்டகலும்
.....பெண்பிள்ளை போலே
பறந்தின்று போகின்ற
.....பால்ய- உறவால்
சிறகை இழந்ததுபோல்
.....சிக்குண்ட தாலே
உறக்கம் வரவில்லை யே!
(1)
 
*பிறந்தவீடு
தந்தையும் தாயுமாய்
.....தன்னையேத் தந்தநீ
எந்தைபோல் நின்ற
.....இறையருள்- விந்தையடா
கூட்டைத் துறந்தால்
.....குயிலின்றிக் கூடுபடும்
பாட்டைப் ப(பா)டுகின்றேன் பார்‌!
(2)
 
உடலோர் இடமாய்
.....உயிரோர் இடமாய்
கடலைக் கடந்தும்
.....கதைத்தேன்- திடமாய்
வலிகள் எதுவும்
......வரவில்லை நண்பா..
வலியேனோ இன்று வருது!
(3)
 
இருவரும் ஒன்றாய்
.....இணைந்தே இருக்க
ஒருவீடு கட்டி
.....ஒருங்கே- இருக்க
முடிவொன்று செய்தே
.....முயன்றோம் இருந்தோம்
முடிந்ததா நண்பா முடிவு?!
(4)
 
கண்ணில் அருவி
.....கவியாய் வருகினும்
உண்மையில் உன்மேல்
.....ஒருபிழை- கண்டிலேன்
காலம் விடுக்கும்
.....கணக்கைப் புரிந்தவர்
ஞாலத்தில் யார்தான் இயம்பு?!
(5)
 
வள்ளுவம் சொல்கின்ற
.....நட்பியல் கூற்றுகளை
உள்ளபடி கொண்டுள்ள
.....உன்போன்ற- கள்ளமிலா
நல்லவனை நானறியேன்!
.....நல்லவனா நான்?அறியேன்!
வல்லவனாய் வாழயெம் வாழ்த்து!
(6)
 
எல்லாம் சிவமயம்
......என்றவனைச் சொல்வதுபோல்
எல்லாம் சிவாமயம்
......என்றிவனைச்- சொல்லுவதேன்?!
எல்லா இடங்களிலும்
.....எல்லாமாய்ப் போயங்கு
சொல்லாமல் நிற்பான் துணைக்கு!
(7)
 
சந்தான லெட்சுமியின்
.....சத்திய நாயகனாய்
சுந்தருக்கும் பாரதிக்கும்
.....சோதரனாய்- தந்தையாய்
நற்றமிழ் நாச்சியப்பர்
.....நல்கிய மைந்தனாய்
சுற்றமுடன் என்றும்வாழ் சூழ்ந்து!
(8)
 
பேர்போற்றும் மைந்தமையப்
.....பேகனெனப் பேரிட்டாய்
ஊர்போற்றும் வீடமைய
.....உள்ளத்தில்- வேரிட்டாய்
பார்போற்றும் வாழ்வமைய
.....பைந்தமிழை நேர்வைத்தே
சீர்போற்ற வாழ்த்துகிறேன் சேர்ந்து!
(9)
 
எத்தனையோ செய்துவிட்டாய்
.....என்னவென்று சொல்லிடுவேன்?!
புத்தனைப்போல் புன்னகைப்பாய்
.....பொய்யின்றி- சத்தியமாய்
இன்னலுறும் போதெல்லாம்
.....இன்சொல்லால் தீர்ப்பவனே..
நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்!
(10)
 
✍️செ. இராசா

30/08/2022

வெண்பாவில் பாடல் எழுதமுடியுமா?

 



இதோ பொழிப்பு மோனையில் மட்டும் இரண்டாம் அடியில் சமரசம் செய்துகொண்டு எழுதியுள்ளேன். பாடுங்க...பாடலாம்)
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துணக்கு நான்தருவேன்..
......இன்னும் பிள்ளையாருக்கு அதேதானா?
....... கொஞ்சம் மாத்துங்கய்யா
 
ஐயா பெரியய்யா
.....அத்தனையும் உன்னதய்யா
பொய்யா எதைக்கொடுப்பேன்
......சொல்லய்யா?- மெய்யய்யா
உந்தன் குறையென்றால்
........ஓர்பொருள்தான் உள்ளதய்யா.
எந்தன் அறியாமைய் யா!
 
தேனும் திணைமாவும்
.......செஞ்சுவச்ச மோதகமும்
நானும் கொடுக்கணுமா
.......சொல்லய்யா?- நீனும்
பிடிச்ச கொலுக்கட்டைப்
.......போரடிச்சா விட்டுடய்யா
பிடிச்சத நான்தாரேன் யா!
 
மண்ணில் உருவானால்
......மண்ணேதான் தீர்வென்றா
மண்ணில் பிறந்தாயோ
......சொல்லய்யா?- எண்ணிப்
பிடிச்ச களிமண்ணின்
........பிள்ளையார் நீரய்யா?
முடி(ந்)த்ததும் நீர்தானய் யா‌..
 
✍️செ‌ இராசா

29/08/2022

பாம்பின் குரல்

 


என்னதான் நீங்க படமெடுத்தாலும்
எங்கப் படத்திற்கு ஈடாகுமா?!

உங்களுக்குத் தான்
கருப்பு வெள்ளை தாண்டிய
வர்ண பேதமெல்லாம்...
எங்களுக்கு ஒரே நிறம்தான்..

உங்களுக்குத் தான்
நகரும் நகராது என்கிற
பரிணாமமெல்லாம்...
எங்களுக்கு ஒரே அசைவுதான்...

படமெடுப்பதில் பச்சைப்பிள்ளை நீங்கள்...
படமெடுக்கவே படைக்கப்பட்டவர் நாங்கள்...

உங்க வயசு வெறும் இருநூறுதான்
எங்க வயசு..பல மில்லியன்கள்

உங்க படத்தின் முடிவு இரசிகர்கள் கையில்
எங்க படத்தின் முடிவு எங்களது வாயில்...

உங்கள் படம் வென்றால் திரை வெள்ளம்
எங்கள் படம் வென்றால் நுரை தள்ளும்

உங்கள் உடை கழன்றால் "ஏ" என்பர்
எங்கள் உடை கழன்றால் 'வாவ்" வென்பர்

உங்‌க படத்துல நிசத்துக்கு மரியாதை
எங்க படத்துல விசத்துக்கு மரியாதை

நீங்க குளோசப்ல எடுப்பீங்க
நாங்க எடுத்தாலே குளோஸ் & அப்தான்...

ஆனாலும்...
நீங்கதான் பெரிய ஆளுங்க..
ஏன் தெரியுமா?
நாங்க ஒரு சமயத்தில் ஒராளைத்தான் கொல்வோம்.....

ஆனால் நீங்க....

#பாம்பின்_குரல்

✍️செ. இராசா

ஔவைத் திங்கள் - 06 --------- சுயதம்பட்டம்



தன்னைப் பெரிதென்று தம்பட்டம் போடுபவர்
தன்னால்தான் வீழ்வர் தனித்து
(1)

இப்படித்தான் ஹிட்லரும் ஏதேதோ கொக்கரித்தான்
எப்படிப்பின் செத்தான் இயம்பு?
(2)

பக்சேக்கள் கூட்டமும் பைத்தியம்போல் கொக்கரித்தே
சிக்கிவிட்டார் சீக்கிரம் சேர்ந்து!
(3)

தலைகனத்த மூடரெலாம் தற்குறிபோல் பேசி
நிலைகுலைந்து போனார் நினை
(4)

குருவிகள் செய்வதுபோல் கூடொன்று செய்ய
ஒருவரும் உண்டோ உரை
(5)

கறையான்கள் புற்றைப்போல் கச்சிதமாய்க் கட்டும்
துறைஞானம் உள்ளவர்யார் காட்டு
(6)

தேனீபோல் ஓடோடி சேகரம் செய்தாலும்
வாய்நீரில் வந்திடுமா தேன்?
(7)

போகும் இடமெல்லாம் பொய்வேசம் போடாமல்
சாகும்முன் சாதனைகள் செய்
(8.)

தன்னைப் பறைசாற்றல் தற்கொலைபோல் என்றுரைத்த
கண்ணனின் மெய்ப்பொருள் காண்
(9)

இவர்போல் அவர்போல் எனச்சொன்னால் உச்சம்
எவருக்குப் போகும் இயம்பு?
(10)

✍️செ. இராசா

#மூலப்பாடல்

நூல்: தனிப்பாடற்_திரட்டு (வெண்பா எண்: 2)

வான்குருவி யின்கூடு
.........வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும்
.......செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று
........வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்
........றெளிது.

அனுமதியா வேணும் அதுக்கு?

 


என்ன இருந்தா எனக்கென்ன வந்ததய்யா
ஒன்னுக்கு வந்தாக்க ஓரமா- நின்னு
மனுசப் பயலுகபோல் வந்தவுடன் போக
அனுமதியா வேணும் அதுக்கு?
 
✍️செ. இராசா

28/08/2022

வாயடைத்துப் போனாலும் வாழ்த்திட மாட்டார்கள்!
ஓயமனம் கொள்ளாமல் ஓடு!

27/08/2022

நேரிசை வெண்பாவில் ----------- வந்தியும் குந்தியும்

 


(கத்தாரில் நாங்கள் புதிதாய் வாங்கிவந்த ஆண் கிளியான வந்தி என்னும் வந்தியத்தேவனும் பெண் கிளியான குந்தி என்னும் குந்தவையும் என்ன பேசுகிறார்கள் என்று பாருங்களேன்)
 
ஏய்புள்ள குந்தி!
.....இதக்கொஞ்சம் கேளுபுள்ள
வாய்கிழிய கத்துறவன்
.....வந்துட்டான்- ஓய்ஓய்னு
ராகமே இல்லாமல்
.....ராத்திரியில் பாடிடுவான்
வேகமாத் தூங்கிடலாம்
.....வா!
 
ஆமாம்யா வந்தி!
.....அதுபோல்தான் அம்மணியும்
சீமான்போல் எப்போதும்
.....சீறுகிறாள்- தாமாக
சப்தமின்றி பேச
.....சகலரும் கற்கலையோ?!!
எப்படித்தான் வாழ்வோமோ
.....இங்கு?!
 
சிரியாவில் தோன்றி
......சிறகடித்தோம் வானில்
தெரியாமல் சிக்குண்டோம்
......சேர்ந்தே- விரிவலைக்குள்
பற்றிய நம்மைப்
......பறக்கவிட்டார் கூண்டுக்குள்
குற்றமென்ன செய்துவிட்டோம்
.....கூறு?
 
நம்வானில் சுற்றியது
......நாம்செய்த தப்பாசொல்?!
நம்மைச் சிறைபிடித்த
......நன்றியில்லா- நம்மக்கள்
கூடிப் பறந்தநம்மைக்
......கூடுவிட்டு நாடுவிட்டு
வாடி வதங்கவிட்டார்
......வந்து!
 
கத்தாரில் வந்தவுடன்
.....கத்திக் கதறியபின்
செத்துப் பிழைத்ததினால்
......தித்திக்க- முத்தமிட்டோம்
வானம் சுருங்கியபின்
......வாழ நினைத்தாலும்
ஊனம்போல் வாழும்
......உயிர்!
 
கண்ணாடிப் பாப்பாவால்
.....கைமாறி இங்குவந்தோம்
அண்ணாவும் தங்கையும்
.....அன்பானோர்- உண்மையிலே
ஐயாவும் அம்மாவும்
.....அப்பப்போ கத்தலைன்னா
மெய்யாலும் இவ்வீடு
.....மேல்!
 
இந்தாள் இருக்கார்ல...
.....ஏதோ கவிஞராம்
அந்தாள் ஒருவேளை
.....அன்போடு- சிந்தித்தால்
நம்ம இருவரையும்
.....வானத்தில் விட்டிடலாம்
அம்மணி ஏற்குமா
.....அங்கு?
 
கட்டறுத்தால் தான்நான்
.....கவிஞனென ஏற்றிடுவேன்
கட்டுண்டு நின்றால்
.....கவிஞனில்லை- கட்டாயம்
விட்டு விடுவித்தால்
......வீரமுள்ள நற்கவியாய்
பட்டம் கொடுப்போம்
.....பறந்து!
 
பட்டம் புகழென்றால்
......பல்லிழுப்போர் தானதிகம்
கெட்ட பயபுள்ள
......கேட்பானோ?!- கட்டாயம்
விட்டாப் பறந்திடலாம்
...... வேகமாய் நம்நாடு
திட்டம் இதுதான்நற் தீர்வு!
 
விடுதலை வேண்டுமென்றே
.....விட்டுவிடக் கேட்போம்!
விடுவிக்க வில்லையெனில்
.....மீண்டும்- கெடுவைப்போம்!
காந்திபோல் உண்ணாமல்
.....காத்திருப்போம் என்றுரைப்போம்!
ஏந்தி உயிர்துறப்போம் இங்கு!
 
✍️செ. இராசா

25/08/2022

சாக்கிரதை

 

கோமாலு சர்மாவோ?
......கோல்மால் சவர்மாவோ?
ஆமான்னு விட்டாக்க
......ஹாயென்பாள்- ஏமாந்தா
வீடியோ வாவென்பாள்!
.....‌.வில்லங்கம் காட்டிடுவாள்!
ஆடியோவில் பின்வைப்பாள்
.......ஆப்பு!
 
✍️செ. இராசா

திருச்சிற்றம்பலம்

 





என் மனைவியார் இந்தப்படத்திற்குப் போகலாம் என்றபோது, சற்றே யோசித்துதான் சம்மதித்தேன். படம் மாலை 6:00 மணி என்று முன்கூட்டியே போனால், படம் 7:00 மணிக்கே என்றார்கள். சரி பரவாயில்லை 4 டிக்கெட் போடுங்கள் என்றேன். அங்கே அரங்கில் யாருமே முன்பதிவு செய்யவில்லை என்று காட்டியதால், படம் சரி இல்லையோ என்கிற சந்தேகம் எழுந்தது. நண்பர் ஒருவருக்குப் போன்செய்து இடம் காலியாக உள்ளது வருகிறீர்களா என்றால், அவர் தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர் படம் அப்படி ஒன்றும் சரி இல்லை என்றார்களாம். தாங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள் என்று சொன்னார். ஆகா...வசமா மாட்டிக்கிட்டோம்போல என்கிற மனநிலையில்தான் படம் பார்க்கப் போனேன்.
ஆனால், படம் போன போக்கும், அதில் நடித்த அனைத்து ஜாம்பவான்களின் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பும் எங்களைக் கட்டிப்போட்டதென்றே சொல்லலாம். ஆக... விமர்சனங்களைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டாம் மக்களே... (இதில் நான் எழுதும் விமர்சனமும் சேரும்தான்😊😊)
 
சென்னையில் நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இவரின் முதல் படமான #துள்ளுவதோ_இளமை வந்தது. அந்தப்படத்தை ஏறக்குறைய ஒரு நீலப்படம் பார்க்கும் மனநிலையில்தான் போரூரில் உள்ள திரையரங்கில் பயந்து பயந்துபோய் பார்த்து வந்தேன். அதன்பிறகு #காதல்_கொண்டேன், #திருடா_திருடி, அப்புறம் #புதுக்கோட்டையிலிருந்து_சரவணன்.....என அவர் நடித்த படங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து, அவர் தேசிய விருது வாங்கிய #அசுரன் வரை பட்டைய கிளப்பியது என்றால் அவரின் கடுமையான உழைப்பே காரணம். அந்த வகையில் இந்தப்படத்திலும் மிகப் பிரம்மாதமாக தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பு மட்டுமல்ல, அவர் குரல் வளத்தில் வருகின்ற பாடல்களும் தனி ரகம்தான். இதிலும் நன்றாகப் பாடியுள்ளார்.
 
 
சொல்லவே வேண்டாம். நடிகர் ரகுவரன், ராஜ்கிரண் ஆகிய தனித்துவமான நடிகர்கள் வரிசையில் பிரகாஷ்ராஜும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. இப்படத்தின் பாதியில் பக்கவாதம் வந்த நிலையில், இயற்கை உபாதைக்காக அப்பாவை அழைத்து, கட்டிலில் இருந்து கீழே விழுந்து தன் வேட்டியை சரி செய்ய முடியாமல் திணறும் காட்சி ஒன்றே போதும். அப்பப்பா.....செம்ம.
 
 
எவ்வளவு பெரிய இயக்குநர் இவர். அவரை நடிக்க விடாமல் ஒரு தாத்தாவாகவே வாழ வைத்துள்ளார் இந்தப் படத்தின் இயக்குநர். ப்பா.... கடைசியில "#என்_இனிய #தமிழ்_மக்களே...." என்று இவர் மூலமாக படத்தின் மையக் கருவைச் சொல்ல வைப்பதெல்லாம்...வேற வேற ரகமான சிந்தனை.
 
தனுஷோடு போட்டி போட்டு தனுஷை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜாம்பவான்களையும் விஞ்சும் அளவில் நடித்துள்ளார். இவரைக் கவர்ச்சியாகப் பயன்படுத்தாமல் நடிப்பால் வெளிப்படுத்தியத் தன்மைக்கும் இயக்குநரை வாழ்த்தியே ஆக வேண்டும்.
வாழ்த்துகள்
திரு. #மித்ரன்_ஜவகர் அவர்களே...
 
வர வர....தலைவர் பின்னணி இசையில் பட்டையக் கிளப்புகிறார். தனுஷ் பேசும் ஒரு நீண்ட வசனத்திற்கு வருகின்ற பின்னணி இசை ஒன்றே போதும்‌....அவரின் இசை முதிர்ச்சிக்கு.
 
எல்லாம் வழக்கமான கதைதான், ஆனால், இதில் சொன்ன விதம் புதுமை. பொதுவா, பெண்களை வைத்தே நகர்த்தும் காட்சிகளில் எல்லாம் ஆண்கள் வந்து அசத்துவது வித்தியாசமான அணுகுமுறை. குறிப்பாக, நித்யா மேனனின் தம்பி தன் அக்கா கனடா போகும்போது பேசுவது, தனுஷிடம் இறுதியில் தன் அக்கா பற்றி பேசுவது போன்ற காட்சிகள் எல்லாம் மிகவும்
அருமையாக
இருந்தது.
அப்பக் குறையே இல்லையா?...
இருக்கு..எனனதான் தாத்தாவும் பேரனும் நண்பர்கள் போல இருந்தாலும் அடிக்கடி வீட்டில் அமர்ந்து தண்ணி அடிக்கும் காட்சிகள் எல்லாம் சமூகத்தை மேலும் சீரழிக்க வைக்கும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை மட்டும் தவிர்த்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இப்படம் ஆகச் சிறந்த படம்....

சதாசிவம்

 

 

 
தன்னால் இயன்றதைத்
.......தந்துதவும் வள்ளல்நீர்!
சொன்னால் மறுக்காமல்
........சொல்காக்கும்- குன்றும்நீர்!
பின்னால் ஒருபோதும்
........பேசாத நண்பன்நீர்!
முன்னால் வரவேண்டும்
........நீர்!
 
சதாநான் வணங்குகின்ற சாமியின்பேர் கொண்ட
சதாசிவம் நற்குணச் சான்று!
 
வாழ்க வளமுடன் ஐயா!
 
இனிய மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துகள்

24/08/2022

கருத்த பெண்ணே- உனைக் காணாமல் நான் நோகிறேன்

 


கருத்த பெண்ணே- உனைக்
காணாமல் நான் நோகிறேன்- நீ
கிடைச்ச பின்னே - அந்திக்
கீழ்வானம் நானாகிறேன்!‌...

கொஞ்சும் விழி கூறும் மொழி
கொஞ்ச'ம் கவி நானுன் செவி...(2)

எத்தனை விண்மீன்கள்
எத்தனை மின்தூண்கள்
ஆயினும் அன்பேநீ என் சூரியன்...
எத்தனை தேசங்கள்
எத்தனை பாஷைகள்
ஆயினும் அன்பேநீ தெந்-தேன்தமிழ்..

உண்ட சுவையினைச் சொல்லில் விளக்கிட
...உண்மைச் சுவையென்ன தெரியுமோ?
உந்தன் அழகினைச் சொல்லில் வடித்திட
...எந்த கவிஞனும் முடியுமோ?!

22/08/2022

ஔவைத் திங்கள் - 005 -------------- இனம் இனத்தோடு சேரும்

 


சோம்பேறி கூட்டத்தில் தூங்குவதைத் தப்பென்றால்
வேம்பென்பர் வேண்டாம் விடு!
(1)
 
புகழென்னும் போதைக்குப் போட்டுவிடும் குல்லா
இகழாகும் வேண்டாம் இழுக்கு!
(2)
 
தமிழின் பெயரால் தவறிழைப்போர் கண்டால்
தமிழறம் பாடித் தடு
(3)
 
இலக்கியப் பேர்சொல்லி ஏமாற்றும் கூட்டம்
வலைவீச வந்தால் நறுக்கு!!
(4)
 
மொய்வைத்தால் மொய்வைக்கும் மொய்நட்பை விட்டுவிட்டு
மெய்நட்பைப் பற்றினால் நன்று!
(5)
 
ஒத்தூதும் கூட்டத்தில் ஊதுகுழல் ஆகவுள்ள
சத்தில்லா வீணரைத் தள்ளு!
(6)
 
அறிவீனர் கூட்டத்தை ஆதரிப்போர் கூட
அறிவீனர் என்றே அறி
(7)
 
படைப்பைத் திருடி படைப்புபோல் செய்வோர்
கடைசியில் என்னாவர்? காண்!
(8)
 
வெளிச்சத்தை தேடிவிழும் விட்டில்போல் ஆகா
ஒளிதேடும் ஞான உயிர்!
(9)
 
குடிக்கக் கரம்பற்றிக் கோப்பையைத் தூக்கி
இடித்துரைக்கும் நட்புதான் இன்று!
(10)
 
 
 
(தமிழை வைத்துப் பிழைப்பவர்களை நினைத்து எழுதிய பாடல்)
#மெட்டு: எல்லாம் தெரிந்த மெட்டுதான். கண்டுபிடியுங்கள்....
 
நாயோடு தான் நான் பாடுவேன்
நரியோடு தான் நான் கூடுவேன்
விருதோடுதான் விளையாடுவேன்; உன்
மடி மீதுதான் நான் தேடுவேன்‌...(2)
 
நாயோடு தான் நான் பாடுவேன்
தளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளைதான்
நீ மறுத்தாலும் அது காண
பேர் ஆர்வம்தான்....(2)
 
உனைத்தூக்கும் துணையாக
எனை மாற்றவா
எனைத்தூக்கும் துணையாக
உனை மாற்றிவா
தமிழ் விளக்காக நாம் வாழ
வழி செய்யவா......
 
(நாயோடு)
 
பாலூற்ற எம காலம்
அழைக்கின்றது
நான் படும்பாட்டை சம காலம்
மறுக்கின்றது....(2)
 
எமக்காக எந்நெஞ்சம் துடிக்கின்றது?
எமக்காக எந்நெஞ்சம் துடிக்கின்றது?
சில பேர் தந்து
என் வாழ்க்கை இனிக்கின்றது...
 
(நாயோடு)
 
✍️செ. இராசா

20/08/2022

தன்னைப்போல் யாரென்று ......தற்பெருமை கொள்ளுபவர்

தன்னைப்போல் யாரென்று
......தற்பெருமை கொள்ளுபவர்
என்னைப்போல் இல்லையென
......எப்போதும்- முன்மொழிவர்
ஒன்றைப்போல் இவ்வுலகில்
......ஒன்றுமில்லை என்பதனை
என்றைக்கும் ஏற்பதில்லை
..... ஏன்?

ஆழ்கடலா ஆர்ப்பரிக்கும்?
......ஆவினமா கொக்கரிக்கும்?
பாழ்மனமா பூச்சொரியும்?
......பண்டிதமா- கீழ்நோக்கும்?
ஊழ்வினைதான் தான்'சொல்லும்
......உன்வினைதான் பேர்சொல்லும்
ஆழ்மனம்தான் யார்சொல்லும்
......அங்கு!

✍️செ. இராசா

19/08/2022

பூரி



எண்ணெய் எனச்சொன்னால்
.....எட்டுமைல் போகிறவன்
அண்மையில் நீயென்றால்
.....ஆவென்பேன்- உண்மையில்
உப்பிய மேனியின்மேல்
.....ஓற்றையாய்த் தீண்டுகையில்
எப்போதும் பூரிப்(பு) எமக்கு!

✍️செ‌ இராசா

18/08/2022

குப்புறப்படுத்த கோழி---------- #கொத்தால்சாவடி_லேடி




குப்புறப்படுத்த கோழி- நீ
கங்குள சுட்ட டோழி....
சின்னச் சின்னப் பீஸ் போடவா
......ஆமாவோய்
லெக்பீஸத் தனியா போடவா
......ஆமாவோய்
சில்லிபோட்ட சாஸு போடவா
......ஆமாவோய்
தொட்டுக்கொள்ள சரக்குப் போடவா
........ஆமாமோய்
உன்னை செக்க செவேன்னு
பார்க்கும்போதே எச்சில் இங்கே ஊறுதடி

 

 

 

 

 

 

குப்புறப்படுத்த கோழி- நீ
கங்குள சுட்ட டோழி...

சஃபாரி மார்க்கெட் போசொல்ல
கிரவுண்ட் ஃபுளோரு சாப்புல
டோழிய நான் சுடும்போது பார்த்தேன்டா...
கங்குள டோழி சுடயில
எண்ணைத் திரண்டு வரயில
கிரிள்ளுல அதுவும் ஒழுகுறத பார்த்தேன்டா

வாடியக்கா சமந்தா
கணக்கா இருக்குற
போடியக்கா திரிஷா
கணக்கா நெளியுற
அம்மா டாடி ஐ ஆம் சாரி என்னைய விட்டிடுங்கோ
வெஜ்னு சொல்ற பசங்க எல்லாம் ரொம்பப் பாவங்கோ.....

வடிவானவள் .....வெடியாயென ...........வருவாளெனில் யாவும்

 


#இன்றைய_தினம்_பிறந்தநாள்_கொண்டாடும்
#மனைவியாருக்கு
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்

வடிவானவள்
.....வெடியாயென
...........வருவாளெனில் யாவும்
அடிதூளென
.......அடடாவென
.............அழகோவியம் ஆகும்!
இடியாயிலை
......இசையாயென
............எனிலோடிடும் தாளம்!
முடிவாகிட
........முறையாயொரு
...............மொழிவாயொரு ராகம்!

விழியாடிடும் மொழியால்-நீ
மொழிவாய்ப் பழபொழிகள்....
இதழோவிய வரியால்- நீ
தருவாய்ப் புதுக்கவிகள்‌‌..
...யாவும்
.......ஆகும்
.........தாளம்
‌............ ராகம்

கலையானவள்
......கவியாயென
.........வருவாளெனில் நாளும்!
நிலைமாறிய
..... நிலையாயென
..........நிஜமாகவே மாறும்!
சிலையானவள்
.......சிகையாடிட
........‌..சிரிப்பாளெனில் பாரம்!
தலைகீழென
.... தடுமாறிட
.........விரைந்தோடியேப் போகும்!

மரபோடிடும் உடையால்- நீ
வருவாய்ப் புதுநடையில்...
தமிழாடிடும் உரையால்- நீ
தணிப்பாய் மனச்சுமைகள்...
......நாளும்
.... ....... மாறும்
...................பாரம்
...................போகும்!

✍️செ. இராசா

FOOTBALLSONG மலையாளம் + அரபி கலந்த மெட்டு



கத்தார் மண்ணின் பேர் சொல்லும்
கோப்பைக்காக உலகின்று
போட்டிபோட்டுப் போகவென்றே Net தட்டும்!

பல வழிவந்தத் தடைகளை எல்லாம்
பட்டென சட்டெனப் பொடிப்பொடியாக்கி
மாயாஜாலம்
காட்டுதிங்கே state of Qatar...

தன்னார்வத்தின் பலம் கொண்டு
கடுகளவேனும் தயங்காமல்
வென்றுநிற்கும் கத்தார் தானே
உலகத்தின் HERO...

Aljanoob, Albid, 974.....அனைத்திடங்கள்
ஓர் நல்ல சரித்திரம்
கத்தார் படைக்க
அற்புதப் போட்டி யார்தருவார்?

கரங்கள் சேர்க்கும் மனங்கள் சேர்க்கும்
போட்டி என்றால் அது ஃபுட்பால்
இவ்வுலகம் முழுதும் உறவென மாற்றி
ஒருகுடை கீழ்வர வைக்குது...

players... யாரிவர் கையில் கப்பு வரும்
இவரில் யாரிதழ் முத்தமிடும்
வெல்லும்; வீரனைக் கண்டிட இனிமேல் யாரும் கண்ணிமை சிமிட்டாதீர்....

டிசம்பரில் பதினெட்டாம் நாளில்
கொட்டும் பேரிகைசப்தம் ஊடே
பட்டையக் கிளப்பி வெல்வதும் யாரு
பார்ப்போம் வாங்க....

டிசம்பரில் பதினெட்டாம் நாளில்
கொட்டும் பேரிகைசப்தம் ஊடே
தெறிக்க விடுகிற வீரனும் யாரு
பார்ப்போம் வாங்க....

✍️செ. இராசா

16/08/2022

 

கொதிக்கும் வெயிலில்
கூலாய் நிற்கிறது
மரம்

இருக்கையில நினைக்க மாட்டான்

 

இருக்கையில நினைக்க மாட்டான்
எவனும் நல்ல ஆளை..
இறந்தபின்னே போட்டிடுவான்
எம்மாம் பெரிய மாலை...
 
ஆ..........நீ
 
வளரயில கொடுக்க மாட்டான்
எவனுமிங்கேக் கைய..
வளர்ந்தபின்னே வந்துநிப்பான்
வாழ்த்து சொல்லப் பைய...
 
என்ன தர்மம்டா? என்ன கர்மம்டா?
ஒன்னும் புரியாம.... சுழலும் உலகம்டா....
 
✍️செ. இராசா

15/08/2022

பொய்முகம் --- ஔவைத் திங்கள்- 004

தலைப்பு : #பொய்முகம்
(வெண்பா எண்: 1)
 
விரகர் இருவர்
.......புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள்
.......வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும்
.......வேண்டும் அவர்வித்தை
நஞ்சேனும் வேம்பேனும்
.......நன்று?


மேடையில் போற்றிடுவார்! விட்டதும் மாற்றிடுவார்!
சாடையில் கூப்பிடுவார் தாழ்ந்து!
(1)

வாக்காளர் தெய்வமென்பார்! வந்தவுடன் என்னவென்பார்?
நாக்கால் வடைசுடுவார் நன்கு!
(2)

காணும்முன் சீயென்பார்! கண்டவுடன் பல்லிழிப்பார்!
நாணும் செயல்புரிவார் நைந்து!
(3)

பாரதி நீயென்பார்! பார்த்துவிட்டு போவென்பார்!
கோருவதைத் தாவென்பார் கோர்த்து!
(4)

நிர்வாகத் தூணென்பார்! வேண்டிநின்றால் வீணென்பார்!
கர்ஜித்தால் போவென்பார் காண்!
(5)

அண்ணனென்பார் தம்பியென்பார்! ஐயமில்லா சாமியென்பார்!
எண்ணத்துள் கொண்டிடுவார் சூது!
(6)

கர்ணனினி இல்லையென்பார்! காரணம் நீயென்பார்!
நிர்மூலம் ஆக்கிடுவார் நின்று!
(7)

சீதைபோல் நீயென்பார்! சீக்கிரமாய்ச் சொல்லென்பார்!
தோதையெண்ணி விட்டிடுவார் தூது!
(8)

சாமியே தானென்பார்! சாய்ங்காலம் வாவென்பார்!
காமினிக்காய் வாடிடுவார் காய்ந்து!
(9)

கண்ணகிபோல் வாழென்பார்! காதலிப்பார் மாதவியை!
பெண்ணென்றால் கொண்டிடுவார் பித்து!
(10)

✍️செ. இராசா

14/08/2022

ராஜேந்திரச் சோழன்

 


ராஜராஜ சோழராஜ ராஜேந்திரச் சோழனே
ராஜராஜ சோழராஜ ராஜாதி ராஜனே
 
கப்பல்கட்டி கடலிலோட்டி
......கண்டந்தாண்டி வென்றவன்!
கப்பம்கட்டும் அரசினர்க்கும்
......கண்ணில்தெய்வம் ஆனவன்!
 
கோவில்கட்டி குளமும்வெட்டி
.......கோட்டைகட்டி ஆண்டவன்!
நாவில்வெட்டி நியாயம்பேசும்
.....மன்னர்நெஞ்சில் தீயிவன்!
 
ஆமைசெல்லும் பாதைகண்டு
........ஆழிவென்ற சோழனே!
நேர்மைசெல்லும் பாதைகண்டு
........நீதிநின்ற ராஜனே!
 
கங்கைகொண்ட சோழனென்ற
.......ராஜேந்திர சோழனே!
நங்கைபேரில் ஏரிதந்த
.......நீர்தானே ராஜனே!
 
ராஜராஜ சோழராஜ ராஜேந்திரச் சோழனே
ராஜராஜ சோழராஜ ராஜாதி ராஜனே]
 
எந்தசாதி உந்தன்சாதி
......என்றுவுன்னை ஆய்கிறார்!
அந்தசாதி மன்னரென்றே
........ஆருடங்கள் சொல்கிறார்!
 
சாதியென்ன சாதியென்று
........சாட்சிதேடும் மாக்களே...
சாதியென்ன ஆனபோதும்
.......சாகமொய்க்கும் ஈக்களே...
 
போதும் போதும் போகும் போதும்
....சாதி பேதம் போதுமே...
மோதும் போதில் ஓடிப் போகும்
....ஆதி அந்தம் யாவுமே....
 
✍️செ. இராசா