30/04/2022

வெற்றி வெற்றி

 

வெற்றிவெற்றி வெற்றியென்று சொல்லடா
வீரம்கொண்ட வேகத்தோடு செல்லடா
சுற்றிச்சுற்றிச் சுற்றியெங்கும் பாரடா
சோகமெல்லாம் சுக்குநூறாப் போகுன்டா
 
வாழ்கையென்ன வாழ்கையென்று பேசுறான்
வாழுமுன்னே நொந்துநொந்து சாகுறான்
நாளைநாளை நாளையென்று தள்ளுறான்
நாளைவந்தும் நாளையென்றே சொல்லுறான்
 
முடிஞ்ச வரைக்கும் முயன்றுபாரு
...முடியலைன்னா தூக்கிப்போடு
கிடைச்ச வாய்ப்பைப் பிடிச்சுயேறு
..கிடைக்கலன்னா ரூட்டமாத்து
 
இருக்கு இருக்கு காலம் இருக்கு
..இப்ப எதுக்கு கவலை உனக்கு
செருக்கு முறுக்கு வேணாம் ஒதுக்கு
..செய்யும் செயலில் கவனம் செதுக்கு
 
....வெற்றி வெற்றி
 
✍️செ. இராசா

29/04/2022

கனவில் தோன்றிய சில வரிகளில் இருந்து..

 

சொர்க்க வாசல் தொறந்திடுச்சு
சோதனை எல்லாம் மறைஞ்சிடுச்சு
மகத்துவ மார்க்கம் கிடைச்சிடுச்சு
மனசுல எல்லாம் குளிர்ந்திடுச்சு
இருக்கான் இறைவன் மறவாதே...
வருவான் தருவான் களங்காதே..
 
✍️செ. இராசா
 
(இன்று திடீரென்று எம் கனவில் தோன்றிய சில வரிகளில் இருந்து...)

என்னைப் புறக்கணிக்கும் என்னரும் உறவுகளே....

 

என்னைப் புறக்கணிக்கும்
என்னரும் உறவுகளே....
என்ன காரணத்தால்
என்னைத் துறந்தீரோ?!
 
உள்ளதை மறைக்காமல்
உண்மையைப் பதிவிட்டால்
அல்லதைச் சரியாக்கி
நல்லதை விடுவீரோ?
 
முன்னிலும் வேகத்தில்
முன்னோக்கிப் போகுங்கால்
சின்னப் பயலென்று
சிந்தையில் கொள்(ல்)வீரோ?!
 
என்றும் அன்புடன்
 
✍️செ‌. இராசா

புரியாத ஒன்றை

புரியாத ஒன்றைப் புரிந்ததாய் எண்ணிப்
புரியாமல் பேசும் புவியில்- சரியாய்ப்
புரிந்ததைக் கூடப் புரியாமல் செய்யப்
புரிந்தே விடுவார் புளுகு

27/04/2022

நீங்களும் என் நண்பர்களே..

 

மத அடையாளம் இல்லாமல்
இனப் பாகுபாடு பாராமல்
கட்சி பேதம் காணாமல்
உயர்வு தாழ்வு கொள்ளாமல்
நிறப் பிரிவை எண்ணாமல்
யாரையும் பார்க்க முடியுமானால்
நீங்களும் என் நண்பர்களே....

26/04/2022

பல் துலக்கும் குச்சி

 


ஆலும் வேலும் பல்லுக் குறுதி
....ஆன்றோர் சொன்ன வாக்கிது!
காலம் வென்ற ஞானம் மருவி
....காற்றில் எங்கோப் போனது!
பாழும் பேஸ்டை நன்றாய்க் கருதி
....பற்கள் எல்லாம் நோகுது!
வீழும் பல்லைக் மீட்கும் குருதி
...வேண்டும் என்றேத் தேடுது!
 
✍️செ. இராசா
 
இந்தக்குச்சி அரபு நாடுகளில் அனைத்து அங்காடிகளிலும் கடைகளிலும் கிடைக்கும். அரபியில் பல்துலக்குதல் #மிஷ்வாக் என்று சொல்லப்படுகிறது. தொழுகைக்கு வருபவர்கள் வாசனை திரவியங்கள் பூசிக்கொள்ளவும் மிஷ்வாக் செய்யவும் வலியுறுத்தப்படுகிறது.
 
மக்களே...நன்றாக யோசியுங்கள். பற்பசை வந்தபின்னர்தானே பல் மருத்துவமனைகள் பெருகியுள்ளது. BDS என்கிற பல் மருத்துவத்திற்கான நோக்கமே என்ன?! பல்பொடி இருந்தவரை இவ்வளவு பல் மருத்துவமனைகள் இல்லையே.... இப்போது மட்டும் ஏன்?. அதிலும் பச்சை, கருப்பு, நீலம் ...என்று வர்ணக்குறியீடுகள் வேறு. கேட்டால் இரசாயன அளவீட்டைப் பொறுத்தாம். எல்லாம் காதில் பூச்சூடும் வியாபாரம். பேசாமல் நாம குச்சிக்கே போயிடலாம்னா அங்கேயும் ஆர்கானிகான்னு ஒரு கேள்வி வரும். நல்ல வேளை அது செடியில்லை, பயிரில்லை...மரம். தப்பிச்சதுடா சாமி...!!
கொஞ்சம் யோசிப்போம்....!!!
 
✍️செ. இராசா

சூடு கொடுத்தால்தான்
சுருக்கம் நீக்குகிறது
அயர்ன்பாக்ஸ்

மதுவுண்ட கோப்பைக்குள் ......விழுந்துள்ள எறும்பே

 



மதுவுண்ட கோப்பைக்குள்
......விழுந்துள்ள எறும்பே
மதிகொண்டு மேலேறும்
......மார்க்கத்தை விரும்பே
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு
 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
 
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு
 
துறந்தவர் நெஞ்சைக் கூட உன் நினைப்பு
கொல்லுமந்த ஈர குணமே..
மறந்தவர் நெஞ்சைக் கூட உன் ஜொலிப்பு
வெல்லுமந்த தீர மனமே
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு
கடந்து வந்த பல பாதை- உன்
கனவை வெல்ல அது தேவை.. (2)
 
பபா பாபா பபா பாபா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா\
 
பொய்யில் வாழ்கிறவர்
பொழியும் பொய்கள் கண்டு அம்மம்மா
என்ன வாழ்க்கையென்று
எண்ணம் தோன்றுகையில் அம்மம்மா..
பொய்யைக் கண்டும் எண்ணம் மாறும்
பொய்யும் மெய்யாய் இங்கே தோன்றும்..
 
உண்மைபோலே உலகத்தில் வேறில்லையே
உன் மெய்..தான் உனையேற்றும் வேறில்லையே..
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு..
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு..
 
✍️செ. இராசா

மறதி

 

இப்பதான் பார்த்தேன் இருந்துச்சே இங்கதான்
இப்படிப் போய்வந்தேன் எப்படியோ- தப்பிடுச்சே
வச்சபொருள் இவ்வீட்டில் வச்சயிடம் இல்லாமல்
பிச்சை யெடுக்கும் பொழப்பு

24/04/2022

கேள்விகள் பத்து

  


#கேள்விகள்_பத்து

தென்னாட்டார் எல்லாம் திராவிடர் என்றானால்
எந்நாட்டார் நாமெல்லாம் இங்கு?
(1)

திராவிடத்திற் குள்ளேதான் செந்தமிழர் என்றால்
திராவிடம் தேவையா சொல்?
(2)

இந்தியக் கட்டமைப்பில் ஏமாற்றம் உள்ளதெனில்
சிந்தையில் உள்ளதென்ன செப்பு?
(3)

ஆரியர்தான் அத்தனைக்கும் ஐயமில்லை என்றாலும்
சேரிநிலை மாறியதா செப்பு?
(4)

அங்கிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்போரே
எங்கிருந்து வந்தீர்நீர் இங்கு?
(5)

தமிழ்தமிழ் என்றே தமிழ்நாட்டை ஆளும்
தமிழல்லார் நாடாநம் நாடு?!
(6)

எத்தனைநாள் ஆண்டீர்கள் ஏனிங்கே சாதிவெறி?
இத்தனைக்கும் காரணம்யார் இங்கு?!
(7)

சாதிய ஓட்டுக்காய் சத்தியத்தை விற்றிங்கே
ஊதிக் கொளுத்தவர்யார் சொல்?
(8)

மதுவெள்ளம் மேலேறி மாநிலத்தை ஓட்டும்
புதுமுறையின் தந்தை-யார் சொல்?
(9)

சாதியைச் சொல்லியே சந்திக்கும் தேர்தலில்
நீதிநிலை வென்றதா சொல்?!
(10)

✍️செ. இராசா

#மெட்டுக்கு_எழுதிய_இஸ்லாம்_பாடல்

 


பாங்கினோசை கேட்டால் யா அல்லாஹ் - யாரும்
பள்ளிபோகக் கூறும் யா அல்லாஹ்
பாங்கினோசை கேட்டால் யா அல்லாஹ்-யாரும்
பள்ளிபோகக் கூறும் யா அல்லாஹ்
 
மீளவேணும் ஆமின் யா அல்லாஹ்
மீளவேணும் ஆமின் யா அல்லாஹ்
மீட்டவேணும் அல்லா யா அல்லாஹ்
 
திருக்குரான் கூறுகின்ற
அருள்நெறிக் கொள்கையினை
கேட்கிற யாவருக்கும்
கிட்டுவது சொர்க்கமன்றோ..
 
முகம்மது நபிகூற்றை
அகமதில் ஏற்றுகின்ற
அத்தனை மனிதருக்கும்
அற்புதம் நேருமன்றோ...
 
நேர்மையில் ஈட்டுகின்ற செல்வத்தில் சிறுதுளியை
ஏழ்மையில் வாழ்கின்ற ஏழைகள் நிலையறிந்து
கொடைதர வேண்டும் என்றான் யா அல்லாஹ்
கொடைதரும் வள்ளல் நீரே யா அல்லாஹ்
 
✍️செ. இராசா

23/04/2022

இச்சையைத் தீர்த்துவிட்டேன் இன்று

 


கஞ்சிக்குத் தொட்டுக்கக்
......கைவசம் ஒன்னுமில்லை
வஞ்சிமனம் புண்ணாக
.......வஞ்சிடவும்- நெஞ்சமில்லை
பச்சை மிளகாயைப்
.....பக்கத்தில் வைத்தென்;பேர்
இச்சையைத் தீர்த்துவிட்டேன் இன்று!
 
✍️செ. இராசா

22/04/2022

விடியல்_வெண்பாக்கள்

  


#விடியல்_வெண்பாக்கள்

மின்சாரம் இல்லையென்று வீணாகப் பேசாமல்
மின்-இடை வேளையெனச் சொல்
(1)

மின்சாரம் இல்லையெனில் மிச்சம்தான் என்றுணர்ந்து
நன்றியுடன் வாக்களிப்பீர் நீர்
(2)

இயற்கை எழிலமைப்பில் இன்பங்கள் கோடி
செயற்கை வெளிச்சமேன் செப்பு?
(3)

எம்எல்ஏ எம்பி இருக்கின்ற மேயர்கள்
எம்மவர்தான் எல்லாமும் இங்கு!
(4)

ஒன்றிய மோடியென ஓதுகிறார் நம்முதல்வர்
என்னநாம் செய்திடலாம் இங்கு?
(5)

அப்படியே ஓட்டுங்கள் ஐந்து வருடங்கள்
எப்படியும் நாம்தான் இனி
(6)

குடியை நிறுத்துவதாய் கூறிடுவோம் மீண்டும்
குடியரசை நாட்டுவோம் கொன்று
(7)

எதிர்க்கட்சி எல்லாம் இனிமேலும் இல்லை
மிதிப்போம் உயர்வோம் விரைந்து?
(8)
மோடியைச் சொல்லியே முன்னோக்கிச் சென்றால்தான்
கோடியைக் கூட்டிடலாம் கோ.
(9)

விடியலென சொன்னோம் விடிந்ததா என்றால்
விடியுமெனச் சொல்வோம் விரைந்து!
(10)

செ.இராசா

அவர்களுக்குத் தெரியவில்லை

 

அவர்களுக்குத் தெரியவில்லை
அவர்கள் யாருக்காகக்
கொடி பிடிக்கிறார்கள் என்று!
 
அவர்கள் கடவுளே இல்லையென்பார்கள்!
அவர்களின் மனைவிகளோ
இருக்குதென்பார்கள்
கேட்டால்...
அது அவர்களின் உரிமையென்பார்கள்
பாவம்..
அங்கே இவர்களும் கொடிபிடிப்பார்கள்..
 
அவர்கள் சாதி இல்லையென்பார்கள்!
அவர்களின் படிவத்திலோ
சாதிபற்றிக் கேட்பார்கள்..
கேட்டால்‌‌..
அது அரசியல் வழக்கென்பார்கள்...
பாவம்..
அங்கே இவர்களும் கொடிபிடிப்பார்கள்..
 
அவர்கள் ஹிந்தி வேண்டாமென்பார்கள்..
அவர்களின் பள்ளிகளிலோ
ஹிந்தி வைப்பார்கள்..
கேட்டால்...
அது தனியார் பள்ளியென்பார்கள்
பாவம்..
அங்கே இவர்களும் கொடிபிடிப்பார்கள்..
 
ஆக‌...
அவர்கள் அப்படித்தான்‌.‌..
இவர்களும் இப்படித்தான்...
இங்கே நாமும்...
இப்படியேதான்...
 
✍️செ. இராசா

விடியல் ஆட்சீங்கோ வெளிச்சம் பாருங்கோ.....

 


கரண்டுவல்லைத் தண்ணிவல்லை
கவலை இல்லீங்கோ..‌..
கருத்து சொல்ல நேரமில்லை
கொஞ்சம் நவுருங்கோ...
 
வேலையில்லை வெட்டியில்லை
என்ன செய்யங்கோ?!
ஏழையென்ற பேருகூட
இங்கே இல்லீங்கோ...
 
என்ன கொடுமைங்கோ...
என்ன சொல்றீங்கோ...
விடியல் ஆட்சீங்கோ
வெளிச்சம் பாருங்கோ.....
 
✍️செ. இராசா

21/04/2022

 

அழகுக்குத் தேவையில்லை ஆபரணம்!
அழகே‌நாம் என்றேயெண்ணி நீவரணும்!
முகத்துக்குத் தேவையில்லை அரிதாரம்!
முகமேதான் இங்கே..இங்கே...அவதாரம்!
 
✍️செ. இராசா

20/04/2022

வரவேற்கிறேன்

 


முதல்வர் பதவியேற்றபின் 09.06.2021 அன்று மூன்று கோரிக்கைகளை எழுதி மின்னஞ்சல் வழியாக அனுப்பியிருந்தேன். அதை அப்படியே முகநூலிலும் பகிர்ந்திருந்தேன். இதையெல்லாம் முதல்வர் பார்ப்பாரா என்று சில நண்பர்கள் கேலியாகக்கூட கேட்டார்கள். ஆனால், எண்ணத்திற்கு வலிமை உண்டென்பதை ஆன்மீகப் பூர்வமாக மட்டுமல்லாமல் ஆராய்ச்சிப் பூர்வமாகவும் அணுகுகின்றவன் என்கின்ற ரீதியில் மாற்றத்தை எதிர்பார்த்தேன்.
நான் அனுப்பிய கோரிக்கைகளில் உள்ள அந்த இரண்டாம் வேண்டுகோளை அப்படியே
இங்கு வழங்குகின்றேன்.
இதோ;
 
2. தாய்த் தமிழுக்காக ஓர் வேண்டுகோள்
***********************************************
என்னதான் நாம் தமிழ்... தமிழ்.. என்று பேசினாலும், தமிழ்நாட்டில் பேச்சுத்தமிழ் தமிங்கிலீஸாய் மாறிவருவது தமிழார்வலர்கள் மத்தியில் மிகவும் வேதனையளிக்கிறது. பத்து வார்த்தைகள் பேசினால் அதில் ஐந்து வார்த்தைகள்தான் தமிழாக உள்ளது. இதில் கிராமத்தைவிட நகரத்தில் இந்த விகிதாச்சாரம் கூடுதலாக உள்ளது. இவற்றை மாற்றும் பொறுப்பு நம் ஊடகங்கள் அனைத்திற்குமே உள்ளது. ஆனால் அவர்களோ மக்கள் மேல் பழியைப் போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். ஆகவே அனைத்து ஊடகங்களையும் கூட்டி ஒரு சிறப்புக் கூட்டம் போட்டு தாங்கள் பேசினால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை விடுக்கின்றேன்.
இனிய மனமார்ந்த நன்றி முதல்வர் அவர்களே...
✍️செ. இராசா
(நல்லதை வாழ்த்துவோம்
அல்லதைத் தூற்றுவோம்)
 
என் நட்பில் உள்ள பத்திரிகை நண்பர்கூட, நான் பதிவிட்ட சில நாட்களில் அவர் வேலை பார்க்கும் மிக முக்கியமான பத்திரிகையில் என்னைப்போலவே வேறு சில கோரிக்கைகளை அனுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ நல்லது நடந்தால் சரி தான்.
 
(முதல் பின்னூட்டத்தில் முகநூல் பதிவின் இணைப்பு உள்ளது).

19/04/2022

புல்லென்று இகழ்ந்தாயோ?!

புல்லென்றால் இழுக்கென்றே....
பொழிந்தார்கள் புவியெல்லாம்
புல்லென்றால் தாழ்வென்றே...
புனைந்தார்கள் கவியெல்லாம்...
காலனைச் சிறு புல்லென்றே
காட்டிய காரணத்தால்
புல்லினம் நோகுவதை
பாரதிக்கு யார் சொல்வார்?!
 
கல்லாத அறிவிலியை
புல்லறிவு என்றதினால்
புல்லெல்லாம் புழுங்குவதை
வள்ளுவர்க்கு யார் சொல்வார்?!
 
ஆனாலும்...
தமிழ்த்திரு வாசகங்கள்
புல்லாய் பூண்டாயென...
புல்லை முதல் சொல்லியதால்
புல்லிற்குப் பெருமைதானே?
 
இடையர் குல கண்ணனின்
இடை இதழ் இருந்ததென்ன
புல்லாங்குழல் எனச்சொல்லும்
புல்லின மூங்கில் தானே??
 
அட....
பாயென்ற புல்லில்தானே
பாட்டன் முதல்
தாத்தன் வரை
படுத்தோம் பிறந்தோம்
கிடந்தோம் போனோம்
இப்போது
நெகிழிப் பாய் வந்தால்
நிசப்பாய் மறந்திடுமா என்ன?!
 
அவ்வளவு ஏன்...
அருகம்புல் இன்றி
ஆகமம் உண்டா?! இல்லை
ஆறுமுகச் சோதரன் உண்டா?!
எனில்....
தயைகூர்ந்து பழமொழியை மாற்றுங்கள்;
நெல்லுக்குப் பாயும்நீர்
புல்லுக்கும் பாய்வதில்லை..
புல்லுக்குப் பாயும்நீர்
புல்லுக்கேப் பாய்கிறது...
 
எப்படி?
 
புல் வளரா தேசத்தில்
புல்வெளிகள் பார்த்ததில்லையா?
புல்லானாலும் புருசனென்று"
பொய்யுரைக்காதீர்
வேண்டுமெனில்
ஃபுல்லானாலும் புருசனென்று
மெய்யுரைப்பீர்...
இப்போது சொல்லுங்கள்?!
எமைப்
புல்லென்று சொன்னால்
புலங்காகிதம் கொள்வீரோ?!
 
✍️செ. இராசா
 
(படத்தில் நெகிழிப் புல்லும் நிசப்புல்லும்)

பலவகைச் சாப்பாடு
நிறைந்து விடுகிறது
குப்பைத் தொட்டி

18/04/2022

எம்மொழி வாழும் இனி?!

 


முந்தைத் தலைமுறைக்கு
.......முன்பிருந்த சிக்கலெல்லாம்
இந்தத் தலைமுறையில்
.......இல்லையென்போர்- சிந்தியுங்கள்
நம்மொழி கல்லாரே
.......நாடெங்கும் உள்ளதினால்
எம்மொழி வாழும் இனி?!

✍️செ. இராசா

(ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசாத காலத்தில் ஊடகத்தில் உள்ளோர் எப்படி அறிவர்? .... இனி நம் தமிழ் மெல்ல மெல்ல.... 😭)

அமைதி பலவீனமா?!

 #தம்பியின் #கேள்விக்கென்_பதில்

அமைதி பலவீனமா?!
ஆச்சரியமாக உள்ளது

பேசுவார் பேசட்டும்
வீசுவார் வீசட்டும்
குத்துவார் குத்தட்டும்
வெட்டுவார் வெட்டட்டுமென
என்ன நடந்தாலும்
எல்லாம் நன்மைக்கேயென்று
அப்படியே அமர்ந்திருந்தால்
அமைதி பலவீனமில்லையா?!
பலவீனம்தான்....

இங்கே
ஏதோ ஒரு சார்பில் பேசுவோன்கூட
தான் யாரென்று காட்டிவிடுகிறான்...
ஆனால்...
எச்சார்பிலும் பேசாதவன்
அருகிருந்தே அறுத்துவிடுகிறான்..
எனில்...
அமைதி பலவீனம்தானே?!

அன்று..
வருணாசிரம தருமத்தால்
வஞ்சிக்கப்பட்டபோதும்;
மகாத்மாவிடம் சென்று
மன்றாடிய போதும்
அம்பேத்காரின் கேள்விகளுக்கெல்லாம்
அமைதியாய் இருந்தோமே...
எனில்;
அமைதி பலவீனம் தானே...

இங்கே...
எத்தனைத் திரௌபதிகள்
துகிலுரியப்படுகிறார்கள்?
அத்தனைத் திரௌபதிகளுக்குமா
அனைவரும் பொங்குகிறார்கள்?!!
எனில்;
அமைதி பலவீனம் தானே...

ஆக...
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...

அமைதி பலம்தான்..
அது சுயத்தை அறியும் பாதையெனில்
ஆனால்...
அமைதி பலவீனமே..
அது சுயநலம் கொண்ட போதையெனில்...

✍️செ. இராசா

பலமானோர் கோபம்

பலமானோர் கோபம் பலமில்லார் மேல்தான்
பலமானோர் மேலில்லைப் பார்

16/04/2022

எனதுள்ளம் பற்றுதே ஏன்?

மனமென்னும் கூடையில் மல்லிகை போட்டால்
மனதெல்லாம் வீசும் மணம்போல்- தினமும்
உனதன்பின் பார்வை உரசும் பொழுதில்

எனதுள்ளம் பற்றுதே ஏன்?

✍️

மேஸ்ட்ரோ பத்து

 


இசைஞானி மேலே எறிகின்ற கற்கள்
இசைத்தமிழ் மேலெறியும் கல்
(1)
 
இசைஞானி மேலே எறிகின்ற கல்லும்
இசைமீட்டும் என்ப(து) இயல்பு
(2)
 
இசைஞானம் தந்த இறைவனைப் பற்றி
வசைபாடல் என்பது வம்பு
(3) 
 
இசையினை மீட்டி எளியோர்க்கும் தந்த
இசைதேவன் தானெம் இறை
(4)
 
அசையும் அசையும் அழகாய்ப் பிணையும்
இசைத்தமிழ் கற்றவர் யார்?
(5)
 
திசையெட்டும் செல்லும் செந்தமிழ் வேந்தின்
இசைமுன் எதுவுமா ஈடு?
(6)
 
தசையிலும் ஊறிய தண்டமிழ்க் கோவை
அசைக்க நினைப்பவர் யார்?
(7)
 
இசைப்புயல் ஏஆர் ரகுமான் எனினும்
இசைப்புயலின் மூலம் இவர்!
(8)
 
இசைஞானி முன்னே எவருமே இல்லை
இசையெனில் என்றும் இவர்!
(9)
 
இசைகளின் ராசாவே எங்களின் ராசா
பசைக்கென்னத் தேவை பகர்?
(10)
 
 
செ. இராசா

14/04/2022

ஒவ்வொரு வருடமும்
உதிர்ந்து விடுகிறது
பழுத்த இலைகள்

சித்திரையோ தையோ

 


சித்திரையோ தையோ
......சிறக்கட்டும் புத்தாண்டு!
நித்திரையை நெஞ்சில்
......விலக்கட்டும் புத்தாண்டு!
சத்தியத்'தைப் போற்றிச்
......செழிக்கட்டும் புத்தாண்டு!
முத்தமிழ்போல் வாழ்ந்திடயெம் வாழ்த்து!

அண்ணல் அம்பேத்கருக்கு என் முதல் பாடல்

 


#சமத்துவநாள்
#மிகவும்_அருமையான_முன்னெடுப்பு
#வாழ்த்துகள்

#அண்ணல்_அம்பேத்கருக்கு_என்_முதல்_பாடல்

சமத்துவமே சரித்திரமே
.....தலைவனிலோர் தனித்துவமே!
அமரனுமே உயரனுமே
.....அவர்வழியில் அடையனுமே!
சமயமெல்லாம் தெளியனுமே
......சகலருமே சரிசமமே!
சுமந்ததெல்லாம் புரியனுமே
.....சுதந்திரம்தான் நிதர்சனமே!

பாபா சாகிப் அம்பேத்கர் வாழ்க வாழ்க!
பாபா சாகிப் அம்பேத்கர் வாழ்க வாழ்க!

எத்தனை எத்தனை வலிகள்
.......எப்படிப் பொறுத்தார் யோசி!
அத்தனை வலியையும் தாண்டி
......எப்படிப் படித்தார் யோசி!

சூத்திரர் என்றே சொல்லிச்சொல்லி
.....சோதனை தந்ததைக் கண்டே..
.....சோதனை தந்ததைக் கண்டே..
சூத்திரம் போட்டுச் சட்டம்செய்து
.....சாதனை செய்தார் நன்றே..
.....சாதனை செய்தார் நன்றே..
பிறப்பைச் சொல்லிப் பிரித்தேவைத்த
....பிரிவினை நோயைக் கண்டே..
....பிரிவினை நோயைக் கண்டே..
சிறப்பை நோக்கிச் சிந்தைசெல்ல
....தெளிவுடன் தந்தார் நன்றே..
....தெளிவுடன் தந்தார் நன்றே..

எத்தனை எத்தனை வலிகள்
.......எப்படிப் பொறுத்தார் யோசி!
அத்தனை வலியையும் தாண்டி
......எப்படிப் படித்தார் யோசி!

..........)

✍️செ. இராசா

அண்ணல் அம்பேத்கர் படித்து பெற்ற பட்டங்கள்:

Dr.AMBEDKAR (1891-1956)
B.A., M.A., M.Sc., D.Sc., Ph.D., L.L.D., D.Litt., Barrister-at-Law !!!
B.A.(Bombay University) Bachelor of Arts,
MA.(Columbia university) Master Of Arts,
M.Sc.( London School of Economics) Master Of Science,
Ph.D. (Columbia University) Doctor of Philosophy ,
D.Sc.( London School of Economics) Doctor of Science ,
L.L.D.(Columbia University) Doctor of Laws ,
D.Litt.( Osmania University) Doctor of Literature,
Barrister-at-Law (Gray’s Inn, London) law qualification for a lawyer in royal court of England


13/04/2022

கயிற்று வெண்பாக்கள்----------நூல்விடும் வெண்பாக்கள்

  


#கயிற்று_வெண்பாக்கள்
#நூல்விடும்_வெண்பாக்கள்

நரம்புக் கயிற்றால் நறுக்கெனக் கட்டும்
பரம்பொருள் வித்தையைப் பார்
(1)

தொப்புள் கொடியென்னும் தூளிக் கயிற்றினில்
எப்படி வந்தோம் இயம்பு
(2)

மஞ்சள் கயிற்றை மணமகள் ஏற்றதும்
நெஞ்சில் வருமோர் நினைப்பு
(3)

ஆடையைத் தாங்கும் அரைஞாண் கயிறுதான்
பாடைவரை வந்திடும் பார்
(4)

நூல்கயிற்றின் கூட்டணிதான் நூலாடை என்பதனால்
மேல்நிற்கும் நண்பனே நூல்
(5)

சிறுகயிறுகள் சேர்ந்துதான் தேர்வடம் ஆகும்
சிறிதென வேண்டாம் சிரிப்பு
(6)

கோணல் மரக்கூனைக் கூறிடும் நூலைப்போல்
கோணல் மனம்மாற்றும் நூல்
(7)

செம்பும் நெகிழியும் சேர்ந்த வடக்கயிற்றில்
மின்சாரம் பாயும் விரைந்து
(8.)

ராக்கிக் கயிறுகட்டி ரட்சிக்கும் நல்லுறவில்
பார்க்கலாம் பாசப் பிணைப்பு
(9)

நூல்விட்டுப் பார்த்து நுழைகின்ற யாரையும்
கால்பந்தாய் மோதிக் கட
(10)

12/04/2022

முருங்கை மரமும் நானும்

 


வளர்ச்சியே இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை
தளர்ச்சியைத் தந்திடலாம் தாண்டு!!

நான் நானாகத்தான் இருக்கிறேன்

 


நான் நானாகத்தான் இருக்கிறேன்
ஆனால்....
உன் பார்வையில்தான் நான் யாரோ?
 
✍️செ. இராசா

11/04/2022

நகலிசைக் கலைஞனா நான்

 


நகலிசைக் கலைஞனா நான்- இறைவா
அசலிசைக் கவிஞனே நான்....
நிழலிசைக் கலைஞனா நான்?- இறைவா
நிசவிசைக் கவிஞனே நான்....

உயிரிசை எந்தன் மூச்சு
உதட்டிசை எந்தன் பேச்சு
இமைஇசை டிக்டிக்காச்சு
இறைஇசை லப்டப்பாச்சு

குருதிநீர் ஓடும் சப்தம்
...‌‌.....குதித்தெழும் தொம் தொம் தொம் தொம்!
குடல்வழி போகும் சப்தம்
.......‌கூடிடின் டொம் டொம் டொம் டொம்!
இரண்டுகை தட்டும் சப்தம்
....‌‌...எழுப்பிடும் டப் டப் டப் டப்!
இணைகையில் கேட்கும் சப்தம்
........ஐயையோ ம்....கூம்....சட் டப்!

நகலிசைக் கலைஞனா நான்- இறைவா
அசலிசைக் கவிஞனே நான்....
நிழலிசைக் கலைஞனா நான்?- இறைவா
நிசவிசைக் கவிஞனே நான்...

இசைந்திடும் போதில் அங்கே
.....இசைப்பவன் யாரோ யாரோ?
இசைத்திடும் போதில் அங்கே
....இரசிப்பவன் யாரோ யாரோ?!

இசைஞனும் நானே நானே...
....இரசிகனும் நானே தானே..
கலைஞனும் நானே நானே..
....ருசிஞனும் நானே தானே...

உயிரிசை எந்தன் மூச்சு
உதட்டிசை எந்தன் பேச்சு
இமைஇசை டிக்டிக்காச்சு
இறைஇசை லப்டப்பாச்சு

✍️செ. இராசா

10/04/2022

டாணாக்காரன்

 


எந்தப்படம் ஓடும்
எந்தப்படம் ஓடாது
என்பதைத்தாண்டி
எந்தப்படம் ஓடவேண்டும்
எந்தப்படம் ஓடக்கூடாது
என்பதைத் தீர்மானிக்கும்
இந்தக் காலகட்டத்தில்
#டாணாக்காரன் போன்ற படங்கள்
வருவதே பெரும் விடயம்தான்....
அதற்காகவே முதலில் வணங்க வேண்டும் 🙏

காவல்துறை என்றவுடன்
கண்முன்னே வருவதெல்லாம்
சிவப்புநிறக் கட்டிடமும்
காக்கிநிற உடுப்பும்தானே...?!
ஆனால்...
அந்தக் காக்கிநிற உடுப்பணிய
இத்தனை பயிற்சிகளா?
இத்தனை அரசியலா?
இத்தனை ஈகோவா?
இப்படி.... எத்தனை இத்தனைகள்?
இத்தனைக்கும் மத்தியிலும்
ஈரமுள்ள சிலரும் இல்லாமல் இல்லை...
இப்படி அத்தனையும் தாங்கிய
இதுவரை சொல்லாத பக்கம்தான்...
இந்த டாணாக்காரன்...

கண்டிப்பாகப் பாருங்கள்
கண் கலங்கிப் போவீர்கள்...
கைதட்டி இரசிப்பீர்கள்...

அதில் ஒரு வசனம்;
#அதிகாரம்_இல்லாத_உணர்ச்சி
#உன்னை_எரித்துக்_கொன்றுவிடும்.
#அதிகாரம்_வலிமையானது..
#அந்த_அதிகாரத்தை_கைப்பற்றென்று
அண்ணல் அம்பேத்கர் கூறியதாய் வருகிறது...
உண்மைதானே....

ஆம்....
நம் கருத்து எடுபட வேண்டுமாயின்
அதற்கு அதிகாரம் வேண்டும்...
அதை அடித்துச் சொல்கிறது
இந்த "#டாணாக்காரன்"

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

மொழிபற்றிய என் பார்வை

 


#மொழி_பற்றிய_என்_பார்வை

பிறமொழி கற்றால் பெரிதாகும் சுற்றம்
மறவாதீர் பைந்தமிழர் மாண்பு
(1)

நம்மொழி யாதென்று நாம்காட்ட வேண்டுமெனில்
பன்மொழியில் மாற்றிப் பகிர்
(2)

இருமொழி மும்மொழி என்பவை தாண்டி
வரும்மொழி எல்லாம் படி
(3)

நம்பெருமை யாதென்று நாமே அளக்காமல்
செம்மொழியை கொண்டுபோய்ச் சேர்
(4)

திணிக்கின்ற போக்கைத் திருத்தாமல் விட்டால்
துணிவுடன் மன்றத்தில் சொல்
(5)

ஹிந்திமொழி கற்றால்தான் இந்திய வேலையெனில்
சிந்தையைச் சீர்திருத்தம் செய்
(6)

அரசியல் தேவைக்காய் ஆர்வலரைத் தூண்டி
அரசியல் செய்தல் பிழை
(7)

ஊடக தர்மமெல்லாம் ஒத்தூதல் என்றானால்
நாடகம்போல் மாறிவிடும் நாடு
(8.)

பேசுவோர் பேசிப் பிழைகளை நீக்கினால்
பேசுவரா எல்லோரும் பேச்சு
(9)

எதுவேண்டும் வேண்டாம் எனும்கொள்கை எல்லாம்
அதுவாழும் மக்களைச் சார்ந்து
(10)

✍️செ. இராசா

09/04/2022

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்-சதீஸ் (எ) ஜானகிராமன்

 இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

வருவாய் வளர்வாய் மலர்வாய்ப் பெரிதாய்
தருவாய் பொருளாய்த் தனியாய்த் தெரிவாய்
உருவாய் ஒளிர்வாய் உயர்வாய் விரைவாய்
குருவாய் அருள்வான் குகன்

✍️செ. இராசா

இளவல்: சதீஸ் (எ) ஜானகிராமன்