19/04/2022

புல்லென்று இகழ்ந்தாயோ?!

புல்லென்றால் இழுக்கென்றே....
பொழிந்தார்கள் புவியெல்லாம்
புல்லென்றால் தாழ்வென்றே...
புனைந்தார்கள் கவியெல்லாம்...
காலனைச் சிறு புல்லென்றே
காட்டிய காரணத்தால்
புல்லினம் நோகுவதை
பாரதிக்கு யார் சொல்வார்?!
 
கல்லாத அறிவிலியை
புல்லறிவு என்றதினால்
புல்லெல்லாம் புழுங்குவதை
வள்ளுவர்க்கு யார் சொல்வார்?!
 
ஆனாலும்...
தமிழ்த்திரு வாசகங்கள்
புல்லாய் பூண்டாயென...
புல்லை முதல் சொல்லியதால்
புல்லிற்குப் பெருமைதானே?
 
இடையர் குல கண்ணனின்
இடை இதழ் இருந்ததென்ன
புல்லாங்குழல் எனச்சொல்லும்
புல்லின மூங்கில் தானே??
 
அட....
பாயென்ற புல்லில்தானே
பாட்டன் முதல்
தாத்தன் வரை
படுத்தோம் பிறந்தோம்
கிடந்தோம் போனோம்
இப்போது
நெகிழிப் பாய் வந்தால்
நிசப்பாய் மறந்திடுமா என்ன?!
 
அவ்வளவு ஏன்...
அருகம்புல் இன்றி
ஆகமம் உண்டா?! இல்லை
ஆறுமுகச் சோதரன் உண்டா?!
எனில்....
தயைகூர்ந்து பழமொழியை மாற்றுங்கள்;
நெல்லுக்குப் பாயும்நீர்
புல்லுக்கும் பாய்வதில்லை..
புல்லுக்குப் பாயும்நீர்
புல்லுக்கேப் பாய்கிறது...
 
எப்படி?
 
புல் வளரா தேசத்தில்
புல்வெளிகள் பார்த்ததில்லையா?
புல்லானாலும் புருசனென்று"
பொய்யுரைக்காதீர்
வேண்டுமெனில்
ஃபுல்லானாலும் புருசனென்று
மெய்யுரைப்பீர்...
இப்போது சொல்லுங்கள்?!
எமைப்
புல்லென்று சொன்னால்
புலங்காகிதம் கொள்வீரோ?!
 
✍️செ. இராசா
 
(படத்தில் நெகிழிப் புல்லும் நிசப்புல்லும்)

No comments: