அய்யனாரும் ஐயப்பனும் ஒரே தெய்வமே என்பதற்கு நான் கூறும் சாட்சிகள்;
1. அய்யனாருக்குக் கருப்பு சாமிகள் காவல் தெய்வமாக உள்ளதுபோல் ஐயப்பன் கோவிலிலும் கருப்பண்ண சாமியும் கடுத்த சாமியும் காவல் தெய்வங்களாக உள்ளனர். பதினெட்டாம் படிக்குக் கீழ் வருவதால் இவரே பதினெட்டாம்படி கருப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த சாமி பற்றி நிறைய பாடல்கள் உள்ளன. (பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ் நாடு, மலையாளத்து துரையானை என்னுள்ளத்தில் வந்தானைக் கண்டடியேன், மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி....இப்படி) அக்காலங்களில் நிலப்பகுதிகளை சிறுபெரு நாடுகள் என்றே அழைத்தார்கள் என்பதால் மலையாள நாடும் நம் தமிழ்ச்சேரநாடே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
மேலும் இந்த கருப்புசாமி போன்ற காவல் தெய்வங்கள் கேரளாவில் வேறு எந்த சாமிகளுக்குக் கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும் .
2. நாம் சபரிமலையில் காணும் ஐயப்பன் என்பது பிரம்மச்சரிய வடிவம். அதே போல் அவருக்குப் பல வடிவங்கள் உள்ளன. குளத்துப்புழையில் குழந்தை வடிவம், ஆரியங்காவில் குமார வடிவம், அச்சன்கோவிலில் இல்லறத்தான் வடிவம், அதுவும் இரு மனைவியருடன். இதில் என்ன சிறப்பு என்றால் அவரின் மனைவியர் பெயர்கள் இரண்டும் அய்யனாரின் மனைவிகள் பெயர்களாய் இருப்பதே . ஆம் பூர்ணா (அ) பூர்ணகலா மற்றும் புஷ்கலா என்பதே அவர்களின் பெயர்கள் . அது எப்படிங்க மனைவிகள் பெயரும் ஒத்துப்போகும்? அங்கே தான் நம் அறிவு வேலை செய்ய வேண்டும்.
(ஆரியங்காவில் ஒரு தேவி மட்டுமே இருக்கும். அதன் பெயர் புஷ்கலாதேவி. இதற்கென்று ஒரு தனிக்கதை வேறு உண்டு)
3. ஐயப்பன் கோவிலும் ஐயனார் கோவிலும் ஊருக்கு வெளியே காட்டில்தான் இருக்கின்றன என்பதும் ஓர் ஒப்புமை. (இப்போது எல்லாம் நகரமயமாகிவிட்டது)
4. இங்கே மொழியும் நம்மை இணைக்கிறது. மேற்கூறிய பாடல்கள்போல் நிறைய பாடல்களே சாட்சி. ஐயப்பன் கோவிலில் "சாமியே சரணம் ஐயப்பா" என்று தமிழில்தான் எழுதி இருந்தார்கள். பின்னர் மாற்றிவிட்டார்கள் என்பது வரலாறு.
அதெல்லாம் சரி...இந்தப்பதிவு ஏன் இப்போது என்றுதானே கேட்கின்றீர்கள். சொல்கிறேன்...ஆவுடையார் கோவில் போன்ற கோவில்களில் இன்னும் மாற்று மொழி இல்லாமல் தமிழ் வழிபாடு உள்ளதுபோல், வேறு எங்கேயும் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்? நம்ம ஊர் காவல் தெய்வங்களை கும்பிட்ட நாம், எப்போது வெளி மாநில குருமார்களை கும்பிட ஆரம்பித்தோம் சற்றே யோசியுங்கள். மாயோன் சேயோன் என்று தொல்காப்பியம் கூறிய கண்ணனும் முருகனும் ஏன் கிருஷ்ணனாய் ஸ்கந்தனாய் மாறினார்கள்? ...இன்னும் புரியவில்லையா..?! எல்லாம் பிழைப்பிற்க்காக திரிக்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட கதைகளே....
இங்கே யாரையும் விரட்டிவிட வேண்டும் என்று சொல்லவரவில்லை. வள்ளுவர் வழியில் "மெய்ப்பொருள்" காண்போம் என்றே கூறுகின்றேன். ஒன்றே ஒன்று மட்டும் உண்மை உறவுகளே....மொழி மாறினால், கடவுளும் மாறிவிடும்.
மொழியைக் காப்போம் நம்மைச்சார்ந்த அனைத்தையும் காப்போம்.
செ. இராசமாணிக்கம்.
No comments:
Post a Comment