03/11/2021

தமிழில் #சிலேடை

 தமிழில் #சிலேடை வாக்கியங்கள் பாடல்கள் அதிகம். சிலேடை என்றால் ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது என்பதை அனைவரும் அறிவோம்.

இங்கே நான் மிகவும் இரசித்த ஒரு சிலேடை; (இதை நாலடியார் என்று தவறாகச் சுட்டுகிறார்கள். யாரேனும் சரியான மூலம் அறிந்தால் கூற வேண்டுகிறேன்)

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

"காக்கைக் கறி சமைத்து கருவாடு மென்று தின்பர் சைவர்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அதெப்படி காக்கையும் கருவாடும் சைவர்கள் தின்பார்கள் என்று நாம் யோசித்தால் அப்பாடலின் அர்த்தம் அதுவல்ல என்பதை பதம் பிரித்து மீண்டும் அப்பாடலைப் படித்தால் புரியும்.

கால்-கைக் (காய்)கறி சமைத்து (தன்)கரு வாடுமென்று தின்பர் சைவர்

தன் கையில் கால்பங்கு மட்டும் எடுத்த காய்கறியை சமைத்து தன் கருமையமான உயிர் வருந்துமென்று சாப்பிடுவார் சைவர்.

இப்பாடலை நான் கூறியவுடன் ஒரு மேலூர் தம்பி அடித்தார் பாருங்கள் ஒரு பாடல். சத்தியமாக எனக்குப் புரியவே இல்லை. இது நம்ம ஊர்ப்பக்கம் நாடகங்களில் பேச்சுவாக்கில் அடிக்கும் சொல்லாடல்கள்.

இதோ அப்புதிர்:

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எட்டுநாள் இலையறுத்து பத்துநாள் சமைத்து
ஆறுநாள் சாப்பிடு...

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எதாவது புரிகிறதா?
இதைப்பேச்சுவாக்கில் மட்டுமே அணுக வேண்டும். எழுதினால் கண்டுகொள்வீர். எழுதவா?!

எட்டுனால் இலையறுத்து பத்துனால் சமைத்து ஆறுனால் சாப்பிடு.

கவனித்தீர்களா....நகரம் னகரமாகியுள்ளது.

அதாவது உன் உயரத்திற்கு எட்டுனால் இலையறுத்து; தீப்பெட்டி பத்துனால் சமைத்து; சோறு ஆறுனால் சாப்பிடவாம்.

சரி நாமும் இதுபோல் எழுதவோமா என்று யோசித்தபோது வந்ததே இந்தக்குறள்;

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

சொல்வதைச் செய்வோர்கள் தங்களை ஆயாமல்
கொல்வதால் நம்பாட்டைக் கூறு

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

இதற்கு விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். கூலிப்படை போன்ற தற்குறிகள் தம் நிலைமை பற்றி யோசிக்காமல் கொல்வதால் நாம் படும் பாட்டைக் கூறுகிறது.

ஆனால் சற்றே உற்று நோக்கினால்...
இப்படி மாறும்;

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

சொல்--வதைச் செய்வோர்கள் தம்--களை ஆயாமல்
கொல்வதால் நம்பாட்டைக் கூறு

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

சொல்லை வதை செய்வோர்கள் தாம் செய்யும் களைகளை (பிழைகளை) ஆராயாமல் நம்மைக் கொல்வதால் நாம் இயற்றிய பாட்டின் தன்மையைக் கூறு. அல்லது நாம் படும் பாட்டினைக் கூறு.
எப்பூடி? நாங்களும் எழுதுவோம்ல.....😊😊😀😀

✍️செ. இராசா

No comments: