20/01/2021

தேனீ

 



என்போல் யாரிங்கே
யாமே யாமேயென..
சாதனைகள் புரிந்தோர்போல்
ரோதனைகள் செய்வோர்க்கே
ஔவையார் சொல்கின்றார்
ஆழமான பாடலொன்று;
------------------------------------------------------------------
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
------------------------------------------------------------------
தன் அலகால் கூடுகட்டி
தனி அழகாய்த் தொங்கவிடும்
வான்குருவி நுட்பமதை
வல்லுனரே அறிவீரோ?!
 
புறவெப்பம் புகா வண்ணம்
அகவெப்பம் அணுசரித்துக்
கரையான்கள் கட்டுகிற
கலைஞானம் அறிவீரோ?!
 
வாயாலே வலைபின்னி
வாய்க்குள்ளே போடுகிற
அரசியலார் முன்னோடி
சிலந்தியார் அறிவீரோ?
 
ஒரு அவுன்ஸ் தேன் சேர்க்க
ஒரு லெட்சம் மைல் சுற்றும்
தேனியார் வாழ்வியலை
தெரிந்துதான் வைத்தீரோ?!
 
இத்தனையும் அறிந்திருந்தால்
எப்படிநீர் சொல்வீர்கள்?!
யாமே யாமேயென..
யாமறியேன்..பராபரமே
யாமறிவேன்..பராபரமே!

ஒரு குழுவில் வாழ்கின்ற
ஒற்றை இராணித்தேனியோ
முட்டை மட்டுமே இடும்
ஆண் தேனீக்களோ
கலவி மட்டுமே செய்து பின்னர்
காலமாகிவிடும்..
 
வேலைக்கார பெண் தேனீக்களோ
வாழும் வரை வேலை செய்து
மலடாகவே மரணிக்கும்!
 
அடுக்கடுக்காய் தளம்போட்டு
அறுகோணத்தில் அறை அமைத்து
மைல்கள் பல பயணித்து
மலர்கள் பல பரிசித்து
நடனத்தால் தொடர்பு கொண்டு
நளினமாய் வழிநடத்தி
உயரத்தில் வாழ்கின்ற
வியத்தகு உயிரினமே- நீ
இயற்கையின் பேரினமே!
இறைவனின் ஓரினமே...!!!
வணங்குகிறோம் உம்மை...🙏🙏🙏🙏

(கத்தாரில் என் அலுவலகம் அருகே கிடந்த தேனடை படத்தில் உள்ளது)

No comments: