ஒப்பில்லார் நட்பை உருவாக்க எண்ணாமல்
தப்பில்லை நிற்பாய்த் தனி
(1)
தான்தான் உயர்வென்று தன்னையே எண்ணுவோர்
வேண்டாம் உடனே விலகு
(2)
ஒத்த கருத்தின்றி ஓயாமல் சண்டையிடும்
பித்தர் உறவை விடு
(3)
காரியம் சாதிக்க கைகோர்க்கும் யாரையும்
காரிய காரணத்தில் காண்
(4)
பாகிலே போட்டுவிட்டால் பாகற்காய் மாறிடுமா
ஊகித்தே உண்டாக்(கு) உறவு
(5)
சிறியவர் ஆனாலும் சேர்க்கலாம் நட்பில்
சிறுகுணம் உள்ளோரே தீது
(6)
பழகிய பின்னர்தான் பற்றிட வேண்டும்
பழகும்முன் வேண்டாம் விடு
(7)
உள்ளத்தில் ஒன்றும் உதிட்டிலே ஒன்றுமாய்
உள்ளோரைக் கண்டால் உதறு
(
மதிக்கின்ற நட்பை மதிப்போடு போற்றும்
மதியுள்ள நண்பரைச் சேர்
(9)
இல்லாத போதும் இனிதாகப் போற்றிடும்
நல்லோரின் நட்பையே நாடு
(10)
செ. இராசமாணிக்கம்
#வள்ளுவர்_திங்கள்_143
#நட்புப்பத்து
04/01/2021
சேரும்முன் யோசி--குறள் வெண்பாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment