வெட்டிவிடு
துண்டாக்கிவிடு என்கிற அர்த்தத்தில்
இந்தக் கத்தரி என்னும் வார்த்தைதான்
எவ்வளவு நுட்பானது..!!!
துணியோ? மயிரோ*?
காகிதமோ? ரிப்பனோ?!
கத்தரிக்கின்ற கருவிக்கு
கத்தரிக்கோல் என்றே பெயர்...
புற்றுநோய்கூட
பற்றிடா வண்ணம்
கத்தரித்து காக்கின்ற காய்க்கும்
கத்தரிக்காய் என்றே பெயர்...
வெயிலின் உக்கிரத்தில்
வெளியேறும் எண்ணத்தை
கத்தரிப்பு செய்கின்ற வெயிலுக்கும்
கத்தரிவெயில் என்றே பெயர்...
எனில்
கத்தரி என்றால் நல்வார்த்தைதானே?!
ஆம்...
கத்தரிக்க வேண்டியவற்றைக் கத்தரி
அது நன்மை பயக்குமெனில்...
31/01/2021
கத்தரி
29/01/2021
Kajra mohabath wala song Tamil lyrics-----------கவியாக நீயே வாடா
அடுத்து ஒரு ஹிந்தி பாடலுக்கு தமிழ்_வரிகள்
வக்ரா கடற்கரையில் உருவான பாடல்
கவியாக நீயே வாடா
கனவெல்லாம் நீயே தான்டா
உன்னாலே வாழ்வே சுகம்தானே
நீயின்றி நானோ ஜடம் தானே
யார்யாரோ எந்தன் பின்னே
ஆனால் நான் உந்தன் பின்னே
வாடா நீ என்னைச் சுவைக்க
வாடாத என்னில் இலயிக்க
ஏதேதோ வித்தைகாட்டி
ஏய்க்காதே நீயும் என்னை (2)
எப்போதும் கண்ணைக்காட்டி
கொல்லாதே சின்னப் பெண்ணை
உன்னாலே போதும் போதும்
.......எல்லாமே மாயம் போடா (2)
சொல்லாத சொல்லைச் சொல்லும்
.......ஐயோநீ மோசம் போடா
ஆனாலும் நான் உன் நிழல்தான்
..நீயின்றி இல்லை இவள்தான்
27/01/2021
ஆமாம்... என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?!
ஆமாம்...
என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?!
அப்போதுபோலவே இப்போதும்
கவ்வுகிறாயே எப்படி?
ச்சே...
கழுத்தை மட்டுமா கவ்வுகிறாய்?
கொஞ்சம் அசந்தால்
மேலெல்லாம் படர்ந்துவிடுகிறாயே..
ஆமாம்...!!!
என்ன செய்தாலும் மீண்டும் வருகிறாயே...
என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?!
சொல் தேமலே....?!!
மெட்டு: மேரே நசீப்மே து ஹே கேநகி .......Mere naseeb mein tu hai ke nahi
ஒரு ஹிந்திப் பாடலுக்கு தமிழ் வரிகள் எழுதுவோமா?!! இதோ....
#பல்லவி_மட்டும்_தமிழில்
வாடா வசீகரா நீயே பாரடா
தீயா எரீகிற மோகம் தீரடா
வாடா வசீகரா நீயே நீரடா
தீயா எரீகிற தேகம் தூரடா
நீ வந்தால் தானே
நான் இங்கே நானே
அன்பே உன்னா லே உல்லா லலே.. (சமே)
வாடா வசீகரா நீயே பாரடா
தீயா எரீகிற மோகம் தீரடா
26/01/2021
சில சமயம் மேலே சில சமயம் கீழே
சில சமயம் மேலே
சில சமயம் கீழே
சில சமயம் வலதாய்
சில சமயம் இடதாய்
நீ உருட்டும் போக்கில்தான்
நானும் உருள்கிறேன்....
ஆமாம்...
எப்போது என்னைச் சேர்ப்பாய்?!
இப்படியெல்லாம் ஏங்கிடும்
ரூபிக் குயூப்ஸே நான்
25/01/2021
அளவுப்பத்து---------------குறள் வெண்பாக்கள்------------அந்தாதி
அளவை அறியாமல் ஆடுகிற ஆட்டம்
களத்திலே நிற்காது காண்
(1)
காண்பதை எல்லாமே கைப்பற்ற எண்ணாமல்
வேண்டுவதை மட்டுமே வேண்டு
(2)
வேண்டியது கிட்டியும் வேண்டுமென நிற்போர்க்கு
வேண்டியதும் போகும் விலக்கு
(3)
விலக்குவதை எல்லாம் விரும்புவோர் என்றும்
விளங்கவே மாட்டார் விடு
(4)
விடுமுறை நாளெல்லாம் வேண்டுமட்டும் ஆடி
விடுவதாய்ச் சொல்வது வீண்
(5)
வீண்வாதம் செய்வோர்கள் வேண்டுவது யாதென்றால்
தான்சொல்லும் சொல்லே சரி
(6)
சரியென்றும் தப்பென்றும் தர்க்கத்தில் செல்வோர்
சரியென்றால் ஏற்பரா சொல்
(7)
சொல்வதை என்றும் சுருக்கமாய்ச் சொல்வோர்க்குச்
சொல்லென்றும் வெல்கின்ற சொல்
(
சொல்லும்சொல் மீறாமல் சொன்னதுபோல் செய்வோரே
எல்லோரும் வேண்டும் உறவு
(9)
உறவினரே ஆனாலும் உண்மையைச் சொல்லும்
அறிவுரைக்கும் உண்டோர் அளவு
(10)
செ.இராசமாணிக்கம்
#வள்ளுவர்_திங்கள்_146
21/01/2021
20/01/2021
தேனீ
19/01/2021
வெட்டென வெடுக்கென பேசாதே
வெட்டென வெடுக்கென பேசாதே- நீ
விட்டிட விலகிட எண்ணாதே
சட்டென சடுதியில் சொல்லாதே- எனைக்
கட்டிலில் வென்றிட வா.....
ஆணவம் கொண்டவன் தானா -என
வீணென சீண்டிட வேணாம்
தேனென சிந்திடு நீனா- எனைத்
தேளெனக் கொட்டிட வேணாம்
கனவா நனவா அடிநீ எனவா தினம் இனிவா
18/01/2021
ஆயிரம் மைல் கடந்தும்....
ஆயிரம் மைல் கடந்தும்
ஆண்டுகள் பல கடந்தும்
மாற்றங்கள் வந்த போதும்
மாறலையே உன் நினைப்பு!!
கண்களால் அளவெடுத்து
கைகளால் பற்றியதும்
படக்குனு வாய் வச்சு
கடக்குனு கடிச்சாக்க
வெள்ளமாய் ஊறியென்னுள்
வெல்லமாய் இனிப்பியே...
ஐயய்யோ என்ன சொல்ல
ஆசைக்கோர் அளவே இல்லை?!
என் அன்புக் கடலைச்சே....
அறிந்து சொல் -------அரசியல் பத்து---------குறள் வெண்பாக்களில்
ஒவ்வொரு சொல்லையும் ஊன்றிக் கவனித்தால்
அவ்வள(வு) அர்த்தங்கள்; ஆம்
(1)
திரிவடுகர் சொல்லே திராவிடர் என்று
திரிந்ததாய்ச் சொல்வர் தெளி
(2)
திராவிட நாடென்ற சித்தாந்தக் கொள்கை
வராமலே கைவிட்டோர் யார்?!
(3)
நாக்கெனும் ஆயுதத்தால் நாட்டையே ஆள்வோர்க்கு
வாக்கில்தான் என்றும் குறி
(4)
சங்க இலக்கியத்தில் சான்றில்லா ஓர்சொல்லால்
எங்களைச் சொல்லாய் இனி
(5)
அறிந்தேதான் சொல்கின்றார் ஆள்வோர்கள் என்றும்
அறியாத நம்மவரை ஆய்ந்து
(6)
சோழனின் ஆட்சி சுருங்கிய நேரத்தில்
ஆளத்தான் வந்தார்கள் அன்று
(7)
சித்தர்கள் சொல்லாத சித்தாந்த தத்துவமா
எத்தர்கள் சொன்னார்கள் இங்கு?
(
எதையெதையோ சொல்லி இனவாதம் செய்தே
விதைத்தார்கள் அன்று விதை
(9)
தமிழென்று சொன்னால் திராவிடன் என்றால்
தமிழென்ற சொல்லேன் தனித்து?
(10)
செ. இராசா
#வள்ளுவர்_திங்கள்_145
15/01/2021
எதை எதை நீயும் விதைக்கின்றாயோ
13/01/2021
ஆயிரந்தான்_இருந்தாலும் ..........அவபோல யாருமில்லை
ஆயிரந்தான் இருந்தாலும்
..........அவபோல யாருமில்லை
ஆத்தாடி...அவசமைச்சால்
.........கமகமக்கும் என்னசொல்ல?
அவளப் போல யாரு- அவ
சமையல் சூப்பர்_ஸ்டாரு
மீனு குழம்பு வச்சா
............மூனுநாளு மணமணக்கும்
மீண்டும் வக்கச் சொல்லி
.............நாக்குநம்மை நமநமக்கும்
நாட்டுக் கோழி வச்சா
............நாலுநாளு ருசியிருக்கும்
நாக்கில் வப்ப தெல்லாம்
............நாட்டுக்கோழி சுவையிருக்கும்
சைவம் சமைச்சாலும்
...........சப்புக்கொட்டி வாய்வலிக்கும்
சந்து பொந்தெல்லாம் சத்தியமா
............எதிரொலிக்கும்
அவளப் போல யாரு- அவ
சமையல் சூப்பர் ஸ்டாரு
(அய்.....சோறு சோறு சோறு... அப்படின்னு )
12/01/2021
காதலென்னும் இம்சை----------இம்சைப் பத்து----குறள் வெண்பாக்கள்
நினைத்தாலே தித்திக்க நெஞ்சத்தில் கவ்வும்
உனைப்போல யாதுண்(டு) உரை
(1)
உன்னைநான் வர்ணித்தால் ஊருலகம் சொல்லாதா?
தன்னையே வர்ணிப்ப தாய்
(2)
ஒன்றுக்குள் ஒன்றாகி ஒன்றிய பின்னாலே
உன்நிலையும் என்நிலையும் ஒன்று
(3)
கண்ணுக்குள் சிக்கிய காதலனே நீதூங்க
கண்ணிமைச் சாமரமாய் நான்
(4)
உள்ளத்தில் வாழும் உரியவனே நீபாட
உள்-இசை லப்டப்பாய் நான்
(5)
செல்லுக்குள் நிற்கின்ற தென்னவனே நீயேதும்
சொல்லும்முன் கேட்பேனே நான்
(6)
இப்படித்தான் சொல்வதென ஏதும் தெரியாமல்
எப்படியோ சொல்கின்றேன் நான்
(7)
ஏதேதோ கற்பனையை எண்ணத்தில் வைத்துவிட்(டு)
ஏதோ பிதற்றுகின்றேன் நான்
(
இம்சை தருகின்ற என்காதல் நோய்தந்த
கம்சன் மருமகனா நீ?
(9)
கனவிலே பாடும் கவிராசா போலே
நனவிலும் வந்தாயோ நீ
(10)
செ.இராசா
#வள்ளுவர்_திங்கள்_144
07/01/2021
மூஞ்சிக்கு எடுக்குற மாதிரி
06/01/2021
சிவப்பத்து ------- குறள் வெண்பாக்கள்----குறள் அந்தாதியும்கூட
#சிவனில்_தொடங்கி_சிவனில்_முடியும்
#சகர_தகர_மோனை_மட்டும்_உள்ளது
சிவமென்றால் என்ன சிவலிங்கம் தானா
சிவமென்றால் எல்லாம் சிவம்
(1)
சிவசிவ என்றே சிவனைத் தொழுவோர்
சிவனாலே ஆவார் சிவம்
(2)
சிவனவன் தாளில் சிரசினை வைத்தால்
சிவனால் உயரும் சிரம்
(3)
சிரத்தில் அகந்தை சிறிதேனும் இல்லார்
சிரத்தில் இருப்பான் சிவம்
(4)
சிவமய சிந்தையைச் சீவனில் கொண்டால்
சிவகணம் ஆக்கும் சகம்
(5)
சகமும் சனமும் சகலமும் இங்கே
செகநாதன் என்னும் சிவம்
(6)
சிவனை நினைந்து சிறிதும் அளித்தால்
சிவமாய்ப் பெருகும் தினம்
(7)
தினம்தினம் போற்றும் சிவனடி யாரும்
தினங்களில் ஆவார் சிவம்
(
சிவக்குரல் போற்றும் சிவக்குறள் பாட
சிவனால் வருமே செயம்
(9)
செயமே செயமே சிவனருள் வந்தால்
செயம்தரும் தெய்வம் சிவம்
(10)
பாஞ்சாலி திரௌபதி (ஐவரை மணந்தவள் ஆவாரா பத்தினி?!)
ஐயம் தீர்த்திடவே
அடியேன் நான் முயல்கின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அடி காட்ட வேண்டுகிறேன்- தத்தம்
அடிகாட்ட வேண்டுகின்றேன்
துரோணரைப் பலி தீர்க்க
துருபதன் வளர்த்த வேள்வி
வானை முட்டியதில்
வானவரும் கொந்தளிக்க
விரும்பிய பிறப்பாக
திருஷ்ட தியூமனும்
விரும்பாத பிறப்பாகக்
கிருஷ்ணை திரௌபதியும்
ஒன்றன்பின் ஒன்றாக
அன்னையின்றி வெளிவந்தார்!
முதலில் ஏற்காத
முட்டாள் துருபதனும்
நெருப்புக் கன்னிக்குப்
பொறுப்பான தந்தையானார்!
குழந்தைப் பருவமில்லாக்
குமரிக் குழந்தைக்கு
சுயவரம் நடத்திவைக்க
சுற்றத்தை வரவேற்றார்!
வில்வித்தைப் போட்டியிலே
எல்லோரும் பங்கேற்க
விஜயனாம் அர்ச்சுனனே
வெற்றியினைப் பெறுகின்றார்!
பெற்ற பரிசேந்தி
பெற்றவளாம் குந்தியினை
வெற்றித் திருமகனும்
வேகமாய் நாடிவர
என்ன ஏதேன்றே
ஏறெடுத்தும் பாராமல்
பெற்றதைப் பகிர்ந்தளிக்க
பெற்றவளும் சொல்லிவிட
ஐவரோடு ஒருவராய்
அனைவரும் அதிர்ச்சியுற்றார்!!!
அறுவரோடு சேர்ந்தங்கே
அன்னையும் அதிர்ச்சியுற்றார்!!!
என்ன செய்வதென
எண்ணுகிற அவ்வேளை
வேதவியாச முனி
விடைசொல்ல விஜயமானார்!
பிறவிப் பெருந்தளையால்
பிறக்கின்ற மற்றோர்முன்
இறையின் அருட்கலையாய்
இறங்கி வந்த பாஞ்சாலி
குணவான்கள் ஐவருக்கும்
மணவாட்டி ஆனாலும்
நெருப்பிலே குளித்தபின்தான்
நெருங்கிடுவாள் அடுத்தவரை..
பரிசுத்த தீயாலே
பந்தத்தை அழித்துவிட்டு
கற்புநெறிக் கன்னிகையாய்
கச்சிதமாய்த் திரும்பிடுவாள்...
பிறப்பின் இரகசியத்தை
பெரியவர் இயம்பியதும்
அறத்தின் காவலர்கள்
ஐவரையும் கைப்பிடித்தாள்!
அக்னிப் பத்தினியாள்
அறத்தோடு கை கோர்த்தாள்!
அரக்கர் கூட்டத்தைத்
அழிக்கின்ற தீயானாள்!
04/01/2021
சேரும்முன் யோசி--குறள் வெண்பாக்கள்
ஒப்பில்லார் நட்பை உருவாக்க எண்ணாமல்
தப்பில்லை நிற்பாய்த் தனி
(1)
தான்தான் உயர்வென்று தன்னையே எண்ணுவோர்
வேண்டாம் உடனே விலகு
(2)
ஒத்த கருத்தின்றி ஓயாமல் சண்டையிடும்
பித்தர் உறவை விடு
(3)
காரியம் சாதிக்க கைகோர்க்கும் யாரையும்
காரிய காரணத்தில் காண்
(4)
பாகிலே போட்டுவிட்டால் பாகற்காய் மாறிடுமா
ஊகித்தே உண்டாக்(கு) உறவு
(5)
சிறியவர் ஆனாலும் சேர்க்கலாம் நட்பில்
சிறுகுணம் உள்ளோரே தீது
(6)
பழகிய பின்னர்தான் பற்றிட வேண்டும்
பழகும்முன் வேண்டாம் விடு
(7)
உள்ளத்தில் ஒன்றும் உதிட்டிலே ஒன்றுமாய்
உள்ளோரைக் கண்டால் உதறு
(
மதிக்கின்ற நட்பை மதிப்போடு போற்றும்
மதியுள்ள நண்பரைச் சேர்
(9)
இல்லாத போதும் இனிதாகப் போற்றிடும்
நல்லோரின் நட்பையே நாடு
(10)
செ. இராசமாணிக்கம்
#வள்ளுவர்_திங்கள்_143
#நட்புப்பத்து
03/01/2021
ஆங்கிலத்தில் பிழைவிட்டால்