29/02/2020

திட்டம் வகுத்துத் திருடிடும் கூட்டத்தைச்
சட்டம் வகுத்துத் தடு

இரசமேப் போதும்

இரசமேப் போதும் எதற்குக் கவலை?!
வரமது மூத்தோர் மருந்து


✍️செ. இராசா

(சைனாவில் சூப்பு சூப்பாக் குடிச்சாங்க...இப்ப ரசம் குடிக்கிறாங்க!!!
நாமளும் கொஞ்சம் கொஞ்சமா பழசையெல்லாம் ஒதுக்கிட்டோம். மக்களே....உணவே மருந்து என்று வாழ்ந்த மூத்தோர் கொடுத்த உணவுகளை விட்டுவிட வேண்டாம். மீள்வோம் மீண்டும். கொல்வோம் கொரானாவை)

#போடா_குடிகாரா



#போடா_குடிகாரா


எப்படி அப்படி சொல்லிப்புட்ட
கண்ணே.... கண்ணே
தப்படி அப்படி சொல்லாதடி
பெண்ணே...பெண்ணே

எல்லா நாளும் உழைக்கும் பொழுது
நல்லா உடம்பு வலிக்கும் பொழுது
அப்போ கொஞ்சம் அலுப்பு விலக
எப்போ கொஞ்சம் குடிக்கிறேன்டி
...............(எப்படி அப்படி)

எல்லாக் காசையும் அழிச்சுப் புட்டு
ஃபுல்லாப் போதை ஏத்திக் கிட்டு
பொல்லா வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டு
தள்ளாடிப் போய் விழுகலைடி
...... ...........(எப்படி அப்படி)

28/02/2020

ஹைக்கூ/ Haikoo


💐💐💐💐💐💐💐💐
ஒட்டெடுப்பு முறையால்
நன்றாக வளர்கிறது
சாதீயக் கட்சிகள்

By the method of voting
Grows well
Caste parties
(1)
***************************
வாக்காளர் அறிவிப்பில்
பகுத்து ஆராயப்படுகிறது
சாதீய ஓட்டுகள்

In the voter's list
Analyzed much thoroughly
Caste votes
(2)
***************************
பிடித்துக் கொண்டதால்
பற்றி எரிகிறது
மதவெறி

Caught easily
Burns about
Religious fanaticism
(3)
****************************
ஒட்டாத போதும்
கவ்விக் கொள்கிறது
கூட்டணிக் கட்சிகள்

Not sticking enough
Clamping together
Alliance parties
(4)
*****************************
தூண்டி விட்டபின்
உயிர்ப்போடு இருக்கிறது
எதிர்க்கட்சிகள்

After being instigated
They are alive very much
Opposite parties
(5)
****************************
எரியும் நெருப்பில்
குளிர் காய்கிறது
ஊடகங்கள்

In the burning fire
Basking themselves...
Media!
(6)
*****************************
✍️செ. இராசா
# Trans : Raju Arockiasamy
 — with Raju Arockiasamy.

27/02/2020

சும்மா இல்லீங்கோ- வாழ்க்கை

சும்மா இல்லீங்கோ- வாழ்க்கை
சும்மா இல்லீங்கோ

அப்படி இப்படி உருட்டி உருட்டி
செப்படி வித்தையாக் குடும்பம் நடத்தி
பெத்த பிள்ளைகளப் படிக்க வச்சு
செத்துப் பிழைக்கிற வழியக் காட்டி
நல்லது கெட்டத வாங்கிக் கொடுத்து
நல்லவன் கையில கட்டிக் கொடுத்து
ஐயோ அப்பா அப்பப்பா என்று
அப்பவும் பெத்தது அழுது வந்து
நிக்கிற பொழுது கலங்கி நின்றிடும்
அக்கணம் எப்படி அமைதி வந்திடும்;

ஐயோ அய்யய்யோ அய்யய்யோ
ஐயோ அய்யய்யோ
சும்மா இல்லீங்கோ- வாழ்க்கை
சும்மா இல்லீங்கோ

பட்டி தொட்டியில நிலத்த வித்து
பட்டாப் பத்திரம் அடகு வச்சு
வட்டிக்கு வட்டியா போட்டுக் கட்டி
கட்டிய வீட்டுக்கு உறவக் கூட்டி
வெந்த சோறுகள வடிச்சுப் போட்டு
வந்த சனங்களோ வாழ்த்தும் சாக்கில்
சிந்தி விழுகிற சாடைப் பேச்சில்
பொங்கி வருகிற பொல்லாக் கோபம்
பொட்டிப் பாம்பெனப் பொத்திடும் போதும்
முட்டி முட்டிக்கிட்டு வந்திடும் பாருங்க;

ஐயோ அய்யய்யோ அய்யய்யோ
ஐயோ அய்யய்யோ
சும்மா இல்லீங்கோ- வாழ்க்கை
சும்மா இல்லீங்கோ

✍️செ. இராசா ©️®️

26/02/2020

பாடல்: வெளிநாட்டில் வாழும் பிரிந்த கணவன் பாடுவதுபோல்


இம்முறை சரணம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது


#உசுரு_விட்ட_உடலுபோல
உன்னை விட்டு உழலுறேன்
என்ன சொல்லி என்ன ஆக..
என்னைநானே நோகுறேன்..
எண்ணையில்லா விளக்குபோல
எண்ணத் திரிய எரிக்கிறேன்...
கண்ணுக்குள்ள உன்னை வச்சு
கண்ணீராலே நனைக்கிறேன்..

அடியே அடியே... அடியே அடியே..
அடிமேல் அடியே..வாழ்க்கை இடியே..
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல்...கொடுமை கொடியே!

#சரணம்_1

நமது வாழ்க்கை சதிராடுது
ஏனோ இன்னும் விளையாடுது
வருகிற காலம் மட்டும் காணோம்

வருச வருசம் கடந்தோடையில்
இருக்கும் இளமை உருண்டோடையில்
கண்ணுக்குள் ஏனோ
விண்ணுக்கும் மண்ணுக்கும் கனவு போகலையே
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல் கொடுமை..யடியே

#சரணம்_2

கடவுள் செஞ்ச சதியா இது
நாம செஞ்ச வினையா இது
அடிக்கிற யோகம் மட்டும் காணோம்

வரவு நடந்து வரும் வேளையில்
செலவு பறந்து வரும் போதினில்
என்னம்மோ ஏதோ
நெஞ்சுக்கும் மூளைக்கும் அடிக்கும் அய்யய்யோ!
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல் கொடுமை..யடியே

✍️செ.இராசா©️®️

24/02/2020

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்


நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்

அட இருங்க இருங்க...
எந்தக் காலத்தில..

குனிந்த நடையும்
கூன் விழுந்த பார்வையும்
........கோணல் முகமும்
........காணொளி மோகமும்
தேய்ந்த விரலும்
தேடுகின்ற உறவுமாய்
........உலகம் எங்கிலும்
........உலவுகிற காலமாம் இது!

✍️செ. இராசா

#தேடிட_வாராயோ_நீ


இரவியைப் பிரிந்து
இரவில் கரைந்து
எனைப்போல் தேயும் நிலவே
உனைப்போல் யாரென் துணையே?

பசலை மிகுந்து
விசமாய்ப் பரந்து
எனைப்போல் வெளிரிய நிலவே
உனைப்போல் யாரென் துணையே?

கவியில் நிறைந்து
செவியில் குளிர்ந்து
எனைப்போல் உலவும் நிலவே
உனைப்போல் யாரென் துணையே?!

மலர்ந்தால் மலர்ந்து
மலர்ந்தபின் குறைந்து
எனைப்போல் ஊடும் நிலவே
உனைப்போல் யாரென் துணையே?

#தேடிட_வாராயோ_நீ
#அவனைத்_தேடிட_வாராயோ

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_105

23/02/2020

பெண்கள் எனும்போதே பெண்-'கள்' எனநோக்கும்
கண்களில் உள்ளது முள்

20/02/2020

ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு




ஓடுஓடுஓடு அஞ்சிடாமல் ஓடு

நின்றிடாமல் நின்றிடாமல் ஓடிடு -நீ
கொஞ்சமேனும் நின்றிடாமல் ஓடிடு
கெஞ்சிடாமல் அஞ்சிடாமல் ஓடிடு- நீ
கொஞ்சமேனும் அஞ்சிடாமல் ஓடிடு

ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு

படிச்சு முடிச்சுப் பிடிச்சுப் போனால்
அடிச்சுப் பிடிச்சு அழுத்துவாங்க
...........ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு
கிடைச்ச இடத்தில் பிடிச்சு நின்னால்
அடைச்சு முடக்கி அமுக்குவாங்க
......ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு

இருக்கும் வாய்ப்பில் எகிறி வந்தால்
இருப்பைக் காட்டி முடக்குவாங்க
........ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு
இருந்தும் மீண்டுத் திமிறி வந்தால்
இரும்புக் கையால் அடக்குவாங்க
.........ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு

திரும்பத் திரும்பத் துணிஞ்சு வந்தால்
திரும்பத் திரும்பத் தாக்குவாங்க (2)
ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு

அதுவே..

துரத்திப் பிடிச்சு ஜெயிச்சு நின்னால்
அருமை என்று வாழ்த்துவாங்க (2)
அதுவரைக்கும்...

ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு
ஓடுஓடுஓடு ஓடுஓடுஓடு

(நின்றிடாமல்....

ச்சும்மா இல்லீங்கோ- வாழ்க்கை
ச்சும்மா இல்லீங்கோ

✍️செ.இராசா ©️®️

PC: Inesh Raja

கருப்பண்ண சாமிக்கு எழுதிய வெண்பா


இயற்கை இடர்பாட்டை இல்லாமல் செய்தும்
செயற்கை வினைகளைச் சேதாரம் செய்தும்
கவசம்போல் காக்கும் கருப்புக்கு; வெள்ளிக்
கவசத்தைச் சாற்றுகிறோம் காண்!

✍️செ. இராசா

(எழுதும்படி வேண்டிய மாமா அவர்களுக்கும் கருப்பண்ணசாமிக்கும் நன்றி நன்றி)

18/02/2020

நடமாடும் தெய்வம்


தும்மினால் துடித்து
விம்மினால் துடைத்து
கம்மியாய் ஊடிடும் உருவம்- எந்தன்
கண்ணில் நடமாடும் தெய்வம்!

அல்லதை விடுத்து
நல்லதை எடுத்து
உள்ளதை உரைக்கும் உருவம்- எந்தன்
உள்ளத்தில் உறவாடும் தெய்வம்!

உயிரில் நுழைந்து
உயிர்-மை கலந்து
தாய்மையைக் கொடுக்கும் உருவம்- எந்தன்
தாய்மெய் தெரிகின்ற தெய்வம்!

கருவம் குறைந்து
கருணை மிகுந்து
கவிபோல் பொழியும் உருவம்- இந்தப்
புவிமேல் அவன்தான் தெய்வம்!

✍️செ. இராசா
கவிதை பிறக்கட்டும்
கொஞ்சம் காத்திரு
என் அன்பு நானே...

17/02/2020

தவம் பழகு


தவம் பழகு
**************
(குறள் அந்தாதி- அதாவது முதல் குறள் வெண்பாவின் இறுதிச் சீரானது அடுத்த குறள் வெண்பாவின் ஆரம்பச் சீராக இருக்கும்படி அமைத்தது)

உயிரும் மனமும் உடலும் இணங்கும்
பயிற்சியை நாளும் பழகு
(1)

பழக்கத்தில் ஒன்றினைப் பற்றினால் பின்பு
வழக்கத்தில் அஃதே வரும்
(2)

வருபவை எல்லாம் வருவது திண்ணம்
விருப்பு வெறுப்பை விலக்கு
(3)

விலக்கிய ஒன்றை விரும்பா தவரே
உலகில் பெறுவார் உயர்வு
(4)

உயர்ந்த மனதால் உலகினைக் கண்டால்
இயற்கையில் இல்லை இழுக்கு
(5)

இழுக்கிற மாடாய் இருக்கிற வாழ்க்கை
இழுக்கென நெஞ்சிலே ஏற்று
(6)

ஏற்றிடும் எண்ணம் எழிலாய் இருந்திட
ஆற்றல் பெறுமே அகம்
(7)

அகத்தவ ஆய்வில் அடிமனம் சென்று
தகர்த்திடா ஆசைத் தவறு
(8)

தவறை உணர்ந்துத் தவறைத் திருத்தத்
தவறாது செய்வாய்த் தவம்
(9)

தவமும் அறமும் சரியாய்ப் பயின்றால்
எவருமே ஆவர் இறை
(10)

இறைவன் இருப்பிடம் எங்கிலும் இல்லை
உறைவிடம் உந்தன் உயிர்
(11)

#வாழ்க_வளமுடன்

15/02/2020

உருகும் மெழுகாய்
கருகும் பனியாய்
கரையும் உப்பாய்
கரைந்தது எந்தன்
“நான்”

14/02/2020

மெட்டு: காதல் கடிதம் தீட்டவே


காதல் உலகில் தோன்றவே
நீயே கந்தாக் காரணம்
காட்டில் மானைக் கண்டியோ
வேலா காதல் கொண்டியோ..
வந்தயிடம் வள்ளியிடம் உன்னைக் கண்டாயோ
அன்றுமுதல் கண்டதுமே வேலன் டைன்ஸ்டே ஆனதோ
வாய்ப்புகள் மட்டும் வருமென்றால் மற்றோரின்
வாய்ப்புகழ் பாடிட வாழ்

13/02/2020

வாசகன்போல் பாருங்கள்


ஆசிரியர்போல் பார்க்காதீர்
ஆச்சரியப் படாமல்
ஆராய்ச்சி செய்வீர்!

பெற்றோர்போல் பார்க்காதீர்
பற்றினால் மட்டும்
பாராட்டி மகிழ்வீர்!

காதலர்போல் பார்க்காதீர்
கொட்டாவி விட்டாலும்
குறுங்கவி என்பீர்!

வியாபாரிபோல் பார்க்காதீர்
என்ன லாபமென்று
எப்போதும் கேட்பீர்!

விஞ்ஞானிபோல் பார்க்காதீர்
பகுத்தறியும் ஞானமென்று
பார்த்துக் கொண்டே......இருப்பீர்!

வாசகன்போல் பாருங்கள்
வாசிக்கும் வரி பொறு(ரு)த்து
வாழ்த்திடும் வள்ளலாவீர்!

✍️செ. இராசா

11/02/2020

மூன்றாம் அடியில்
முக்தி அடைகிறது
ஹைக்கூ
சுட்டும் பிழையால் சுடுகிற நெஞ்சமாய்ப்
பட்டுத் துடிக்குதென் பாடு

10/02/2020

#நினைவெல்லாம்_நீ


உளி விழியால் சமர்செய்தாய்
மொழி விழியால் சம்மதித்தேன்

குறுங் கவியாய்ப் புன்னகைத்தாய்
புதுக் கவியாய் மனமுற்றேன்

உன் நெஞ்சில் நீ நினைத்தாய்
என் நெஞ்சில் நானறிந்தேன்

சொல்லிடவே எத்தனித்தாய்
சொல்லும்முன் நான் சொன்னேன்;

“நினைவெல்லாம் இருந்துவிட்டு
நிழலாகிப் போனாலும்
நிஜமாக வந்திடுவாய்...
நீ நின்று வாழ்த்திடுவாய்..”
இதுதானே..என்றுரைத்தேன்!

அப்போதும் புன்னகைத்தாய்..
ஆழ்மன வலியோடு...

✍️செ. இராசா

#நினைவெல்லாம்_நீ

09/02/2020

இளைஞர் படை
எழுச்சியோடு நிற்கிறது//
நடிகனின் செல்பிக்குள்

மாற்றார்க்குக் கிட்டலையே வாய்ப்பு

ஏதோவோர் வேலையிலே
.........எப்படியோ ஏறிவிட்டுக்
காதோரம் கோளோதிக்
.........கால்பற்றி மேல்நின்று
வேற்றாரை ஏற்றாது
.........வேரூன்றி நிற்போரால்
மாற்றார்க்குக் கிட்டலையே வாய்ப்பு

08/02/2020

வாசக நெஞ்சமே வாழ்த்து!

யாசகம் கேட்பதை யார்தான் விரும்புவர்
வாசக நெஞ்சமே வாழ்த்து!
✍️

கசப்பு



 கசப்பு என்றால்
அவ்வளவு வெறுப்பா?!

உண்மை கசக்குமென
உரைக்கின்றீரே...
இன்று கசப்பதெல்லாம்
நாளை உண்மையாகுமா?!

கசப்பதெல்லாம்
இனிக்குமென்கிறீரே...
இன்று இனிப்பதெல்லாம்
நாளை கசக்குமா?!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்
இனிப்பெல்லாம்
இனிப்பும் அல்ல..
கசப்பெல்லாம்
கசப்பும் அல்ல..

தேன் இனித்தாலும்
தொண்டைக்குக்கீழ் கசப்பாகும்
நெல்லிக்காய் இனிக்காவிட்டாலும்
தொண்டைநீரில் இனிப்பாகும்

இன்றைய சர்க்கரை விரும்பிகள்
நாளைய சர்க்கரை நோயாளி
அட.. பொறுங்கள்
இப்படி யார் சொன்னார்கள்?
இருக்கவே முடியாது
பாகற்காய் மட்டும் பங்காளியானால்...

அவ்வளவு ஏன்?!

கொடுங்கோல் டெங்குமுதல்
கொலைகார கொரோனா வரை
நோய்களைக் கொல்கின்ற
நிவாரண ஆயுதமாய்;
அரசாங்கம் விரும்புகின்ற
அவசர ஆயுதமாய்;
நிலவிடும் எங்கள்
நிலவேம்புக் கசாயத்தை
நெஞ்சிலே நினைத்துக்
கொஞ்சிட வேண்டாமா?!!
கசப்பெல்லாம் வரமென்று
கவியேற்ற வேண்டாமா?!!

ஆம்...
கசப்பு வரமாகும்!
கசப்பு(ம்) கவியாகும்!

கசப்பை ருசியுங்கள்
நிசங்கள் கசக்காது...!!!

✍️செ. இராசா

04/02/2020

கவிதை என்பது?



கவிதை என்பது
காமம்போல்...
இயல்பின் ஊற்றில்
இன்பம் பிறப்பதால்

கவிதை என்பது
பக்திபோல்...
அகத்தின் கிளர்ச்சியில்
ஆனந்தம் வருவதால்

கவிதை என்பது
தியானம்போல்...
ஒன்றி இருக்கையில்
தன்னை மறப்பதால்

கவிதை என்பது
காதலிபோல்..
இருக்கையில் ஊடி
பிரிகையில் உணர்வதால்

கவிதை என்பது
நண்பனைப்போல்...
இன்னல் வருகையில்
கண்ணீர் துடைப்பதால்

கவிதை என்பது
அன்னையைப் போல்..
அஃறிணைப் பொருளையும்
அன்பால் அணைப்பதால்

கவிதை என்பது
தந்தையைப்போல்
தவறு செய்கையில்
தட்டிக் கேட்பதால்

கவிதை என்பது
மனைவியைப் போல்
என்ன விந்தையென
இன்னும் கேட்பதால்

கவிதை என்பது
குழந்தையைப் போல்
தத்தம் கவிகளே
அதிகம் இனிப்பதால்

கவிதை என்பது
அரசனைப் போல்
வருமானம் இல்லாதும்
வரிகள் கேட்பதால்...

கவிதை என்பது
கவிதையைப்போல்
கவியின் கருவே
கவியாய்ப் பிறப்பதால்...

✍️செ. இராசா

PC: Karthik Sethupathy தம்பி நன்றி நன்றி

(இங்கே உள்ள புகைப்படம் கத்தாரில் வில்லாஜியா என்ற பல்பொருள் அங்காடிகள் வளாகத்தில் எடுக்கப்பட்டது. தாங்கள் காண்கின்ற மேகம் மற்றும் ஆறு எல்லாம் செயற்கையானது)

03/02/2020

இறைநாடு (குறளின் குரல்)


எழுசீர் விருத்தம்
***********************
எதையும் பற்றும் எண்ணம் இன்றி
........ஈரம் உள்ள நாடு!
சிதைக்கும் கெட்டச் சிந்தை இன்றித்
........தீரம் கொண்ட நாடு
புதைக்கும் அற்பப் போட்டி இன்றிப்
.......போர்கள் செய்யா நாடு!
வதைக்கும் இன்னல் வாழ்க்கை இன்றி
......வாழும் நல்லோர் நாடு!

அகதிகள் நம்மை அண்டும் போதில்
......அன்பாய் ஏற்கும் நாடு!
சகதிகள் அள்ளிச் சாற்றும் போதும்
......சண்டை செய்யா நாடு!
சகுனிகள் வேலை செய்யும் போதில்
.....சாட்டை தூக்கும் நாடு!
தகுதிகள் இன்றித் தாக்கும் போதோ
.....தீயாய்ப் பாயும் நாடு!

வருவோர் இன்னும் வந்தார் என்றால்
....வசதியாய் வாழும் நாடு!
வருவோர் போதும் வேண்டாம் என்றால்
......வறுமையாய் வாழும் நாடு!
இருப்போர் வாழ்வில் இன்னல் என்றால்
......இரப்பவர் வாழும் நாடு!
இருப்போர் எல்லாம் இன்பம் என்றால்
......இறைவனே வாழும் நாடு!

செ. இராசா
****************************************************
குறள் எண்: 733

"பொருட்பால் - அரணியல்"

குறள்:

"பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு."

சாலமன் பாப்பையா உரை:
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

02/02/2020

அஃறிணையின் சிறப்பைப்
பகுத்தறிய மறுக்கிறது
போலி உயர்திணைகள்

01/02/2020

#ஞானத்தென்றல் விருது வாங்கிய எங்கள் குரு திரு. முத்துஐயா (Sudalai Muthu) அவர்களுக்கு பலவிகற்ப பஃறொடை வெண்பாவில் வாழ்த்து


அறிவியல் பார்வையில்
................ஆன்மீக ஞானம்!
பொறியியல் பார்வையில்
.................பௌதீக ஞானம் !
மகரிஷி பார்வையில்
.................மார்க்கத்தின் ஞானம்!
அகமுகப் பார்வையில்
.................ஆராயும் ஞானம்!
கவிஞனின் பார்வையில்
..................கற்பனை ஞானம்!
பவித்திரப் பார்வையில்
..................பஞ்சாங்க ஞானம்!
மருத்துவப் பார்வையில்
..................மாகுரு ஞானம்!

ஒருங்கே இணைந்த
.................உயர்ந்த குருவாம்
திருமகன் முத்தையா
................சீர்மை புகழ்ந்து
விருப்புடன் தந்தார் விருது!!!

“ஞானத்தென்றல்”விருது

✍️செ. இராசா

எழுமின் - (தமிழ்த் தொழிலதிபர்கள் கூட்டமைப்பின் குடும்ப விழா)



சமீப காலமாக கத்தாரில் தமிழ் சார்ந்த அமைப்புகளின் கூட்டங்கள் மிக அதிக அளவில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அடையவைக்கிறது. அந்த வரிசையில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தொழிலதிபர்கள் குடும்ப விழா மிகவும் விசேஷமானது.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்று நினைப்பது புரிகிறது. மிகவும் சாதாரண நிலையில் இருந்து தன் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் பல கிளைகளுடன் ஆலமரமாய் பரவ விட்டு இன்று சமூகத்தில் பல தொழில் முனைவோர்க்குத் தூணாக நிற்கும் நண்பர் திரு #சக்திவேல் அவர்களின் அழைப்பின் பேரில் நானும் குடும்பத்துடன் சென்றிருந்தேன். (சமீப காலமாக அனைத்துத் தமிழ் அமைப்புகளுக்கும் அவர் அளித்து வரும் கொடை ஆதரவு மிகவும் பாராட்டுதலுக்குரியது).

நேற்றைய நிகழ்வு பற்றிய சில துளிகள்.
************************************************
1. நிகழ்வு முழுமையும் தமிழில் நடந்தது. முதலாளிகள் மாநாடு தமிழிலா? ஆம் முழுக்க முழுக்கத் தமிழில் நடந்தது.

2. அருட்தந்தை #ஜெகத்கஸ்பரின் பேச்சில் அரங்கமே அதிர்ந்தது. திருக்குறள் அறம் பற்றியும் தமிழின் பெருமையையும் சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்தது.

3. உலகின் பணக்கார நாட்டு வங்கியின் CEO , #சீதாராமன் ஐயா அவர்களின் பேச்சு மற்றும் பட்டிமன்ற நடுவராக பணியாற்றிய விதமும் மிக அருமையாக இருந்தது..

4. கத்தார் மனவளக்கலைப் பேராசிரியர், பொறியாளர், சித்த மருத்துவர், ஜோதிட ஆதித்யா................என் ஆன்மீக குரு திரு முத்து ஐயா அவர்களுக்கு "#ஞானத்தென்றல்" விருது வழங்கப்பட்டது.

5. உதவிப் பொறியாளராக இருந்து மிகவும் உயர்ந்த இடமான L&T நிறுவனத்தின் கத்தார் நாட்டுத் தலைமைப் பதவி வகிக்கும் திரு. #ஆண்டனி_தனபாலன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

6. மாமாங்கம் என்கிற கலைப்பள்ளியின் நடன ஆசிரியர் மற்றும் நண்பருமான திரு .#சூசன் அவர்களுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

7. பறை முதல் பரதம் வரை அனைத்து கலை நிகழ்ச்சிகளும் தமிழ் தமிழ் என்று களைகட்டியது. குறிப்பாக நண்பர் #விஜயக்குமார் அவர்களின் மகன் மற்றும் மகள் பேசிய பேச்சில் அரங்கமே அதிர்ந்தது.

8. ஓமான் நாட்டைச்சேர்ந்த அரபியின் தமிழ்ப் பேச்சு அனைவரையும் வியக்க வைத்தது.

9. மொத்தத்தில் தமிழ் விருந்தோடு கிடைத்த இறுதி விருந்தும் இளநீரும் அனைவரின் இதயத்தையும் செல்களையும் முழுவதும் நிறைத்தது.

வாழ்க தமிழ்
வாழ்க வள்ளுவம்
வாழ்க வளமுடன்

நன்றி நன்றி