தவம் பழகு
**************
(குறள் அந்தாதி- அதாவது முதல் குறள் வெண்பாவின் இறுதிச் சீரானது அடுத்த குறள் வெண்பாவின் ஆரம்பச் சீராக இருக்கும்படி அமைத்தது)
உயிரும் மனமும் உடலும் இணங்கும்
பயிற்சியை நாளும் பழகு
(1)
பழக்கத்தில் ஒன்றினைப் பற்றினால் பின்பு
வழக்கத்தில் அஃதே வரும்
(2)
வருபவை எல்லாம் வருவது திண்ணம்
விருப்பு வெறுப்பை விலக்கு
(3)
விலக்கிய ஒன்றை விரும்பா தவரே
உலகில் பெறுவார் உயர்வு
(4)
உயர்ந்த மனதால் உலகினைக் கண்டால்
இயற்கையில் இல்லை இழுக்கு
(5)
இழுக்கிற மாடாய் இருக்கிற வாழ்க்கை
இழுக்கென நெஞ்சிலே ஏற்று
(6)
ஏற்றிடும் எண்ணம் எழிலாய் இருந்திட
ஆற்றல் பெறுமே அகம்
(7)
அகத்தவ ஆய்வில் அடிமனம் சென்று
தகர்த்திடா ஆசைத் தவறு
(8)
தவறை உணர்ந்துத் தவறைத் திருத்தத்
தவறாது செய்வாய்த் தவம்
(9)
தவமும் அறமும் சரியாய்ப் பயின்றால்
எவருமே ஆவர் இறை
(10)
இறைவன் இருப்பிடம் எங்கிலும் இல்லை
உறைவிடம் உந்தன் உயிர்
(11)
#வாழ்க_வளமுடன்
No comments:
Post a Comment