13/01/2020

எதற்காக நீ எரித்தாய்?!



எதற்காக நீ எரித்தாய்?!
💐💐💐💐💐💐💐💐

மாதவியின் மோகத்தில்
பாதகம் செய்துவிட்டு
சாதகப் பறவைபோல்
சாகசம் புரிந்தவனை;

குடியுரிமை இல்லாது
குடிதாண்டிப் போய்விட்டு
எல்லாம் முடிந்தவுடன்
இல்லானாய் வந்தவனை;

கட்டிய மனைவியை
கண்ணீரில் நனையவிட்டுக்
கூத்துப் பெண்ணோடு
குத்தாட்டம் போட்டவனை;

வேலி தாண்டியங்கு
வெள்ளோட்டம் செய்துவிட்டு
நாடி தளர்ந்தவுடன்
நாடியே வந்தவனை;

என்ன எதுவென்று
எதையுமே கேட்காமல்
மன்னனின் நீதிக்கா
மதுரையை நீ எரித்தாய்?!

💐💐💐💐💐💐💐💐💐
சொந்த நாடான
சோழநாட்டை விட்டுவிட்டு
வந்த நாட்டிலே
வழக்காட வந்தாயே..

கடவுச் சீட்டெங்கே
கடந்திங்கு வந்ததற்கு?!
உரிம அட்டையெங்கே
உரையாட வந்ததற்கு?!

என்றெல்லாம் கேட்காமல்
உன்குரல் கேட்டானே...
அன்னாரின் நாட்டினையா
கண்ணகி நீ எரித்தாய்?!

💐💐💐💐💐💐💐💐💐💐💐

விதியின் வினையாலும்
சதியின் துணையாலும்
ஏதோ நடந்ததென்று
ஏதேதோ சொல்லாது

சத்தியம் தவறாத
உத்தமப் பாண்டியனாய்
உண்மை உணர்ந்ததுமே
உயிரை விடுத்தானே...
அம்மன்னன் ஊரினையா
அம்மணி நீ எரித்தாய்?!

என்ன நீதி இது?!
எனக்கிது புரியவில்லை!!!

✍️செ. இராசா

(கண்ணகிபற்றி எழுதச் சொல்லித் தூண்டிய தம்பி Karthik Sethupathy க்கு நன்றி!!)

கடவுச்சீட்டு- பாஸ்போர்ட்-Passport

No comments: