19/01/2020

எத்தனைப் பிரச்சினைகள்?



எத்தனைப் பிரச்சினைகள்?
எத்தனைப் பிரச்சினைகள்?
எனக்கு மட்டும் ஏன்
இத்தனைப் பிரச்சினைகள்?

புலம்பிய தருணத்தில்
புறப்பட்டதோர் வாகனம்
ஒளியின் வேகத்தில்
உயரமாய்ப் பறந்தது

கம்பனாய்த் தெரிந்ததெல்லாம்
ஹைக்கூவாய்த் தெரிந்தது
பாரதியாய்த் தெரிந்ததெல்லாம்
பார்...ரதியாய்த் தெரிந்தது

கிழிந்த மேகம்
கீழே கிடந்தது
நீல வானம்
மேலே வெளுத்தது

ஒளிர்ந்த நிலவோ
ஓரமாய் இருந்தது
குருட்டு இருளோக்
கொட்டிக் கிடந்தது

சூரியச் சூட்டில்
கோள்கள் காய்ந்தது
பால்வீதிக் காடே
பற்றி எரிந்தது

இன்னும் இன்னுமென
இன்னும் போனால்
எங்கும் எங்குமென
எல்லாம் சுழன்றது...

சுழன்ற வேகத்தில்
கழன்று விழுந்தது
சுமந்து சென்ற
சூனிய மாயை...

என்னங்க என்ற
என்னவள் குரலில்
விழுந்தது எல்லாம்
விழித்துக் கொண்டது!

✍️செ. இராசா

No comments: