31/05/2019

#நாயர்_கடைச்_சாயா-


#நாயர்_கடைச்_சாயா- இது
நாயர் கடைச் சாயா!
பாய்லர் வச்சுப் போடும்- நம்ம
ராயல் கடைச் சாயா!

தள்ளு முள்ளு கூட்டம்- இங்க
அள்ளு விடுது பாரு!
ஆத்தி ஆத்தி வீசி- நாயர்
ஆத்தும் அழகு பாரு!

உள்ளி வடை எல்லாம்- இங்க
கில்லியாட்டம் ஓடும்!
முட்டை பஜ்ஜி வந்தால்- உடன்
தட்டை விட்டே ஓடும்!

சேட்டன்கிட்ட நாமும்- கொஞ்சம்
பாடம் படிக்க வேணும்!
வாட்டமின்றி வாழ- நாமக்
கூடிப் பிழைக்க வேணும்!

✍️செ.இராசா

பொய்



உண்மையைத் திரிப்பது பொய்
உள்ளதை மறைப்பது பொய்
கற்பனையில் கதைப்பது பொய்
சொற்களில் வதைப்பது பொய்

இங்கே
சில பொய்கள் நல்லது
சில பொய்கள் கெட்டது

சில பொய்கள் தேவை
சில பொய்கள் போதை

ஆம்..
வராத நிலவை
வா..வா..என்று அழைத்து
அம்மா ஊட்டிய
அன்பைப்போல்

காணாத ஒன்றை
கடவுள் என்று காண்பித்து
அப்பா காட்டிய
அறநெறிபோல்

நன்றாகப் படித்தால்
நாட்டையே ஆளலாம் என்று
ஆசிரியர் தூண்டிய
ஆர்வத்தைப்போல்

சில பொய்கள்
சிந்தைப் பயிர் வளர்க்கும்
இயற்கை உரங்கள்- அவை
பக்க விளைவு இல்லா
பயன்பாட்டு மந்திரங்கள்

சில பொய்கள்
நிலத்தையே தரிசாக்கும்
இரசாயண உரங்கள்- அவை
பக்கா விளைவு தந்து
பதராக்கும் சொற் கொல்லிகள்

தாம்பத்ய பாலத்தை
தகர்த்துவிடும் வெடிகுண்டுகள்
பொய்கள்

நட்பின் வேர்களை
நசுக்கிவிடும் நச்சுக்கொல்லிகள்
பொய்கள்

உறவின் முகங்களை
உருக்குலைக்கும் திராவகங்கள்
பொய்கள்

அரசியல் வாதிகளின்
அடையாளக் கருவூலங்கள்
பொய்கள்

பகுத்தறியா கூட்டத்தின்
பச்சைய செறீவூட்டங்கள்
பொய்கள்

அயோக்கியக் காமுகரின்
ஆதார் அடையாளங்கள்
பொய்கள்

இங்கே..
அரிச்சந்திர வாழ்வு
அசாத்தியம்தான்...

ஆனால்..
வள்ளுவரின் வாய்மை
வாய்ப்புள்ளதுதானே..

தெரியாத பாடலைத்
தெரியுமென்று சொன்ன
கவியரசரின் கன்னிப் பொய்
புவியைப் புரட்டிப் போட்டதே..

பிறந்த குழந்தையைத்
தெரியாதென்றே சொன்ன
கலைஞரின் கன்னிப் பொய்
தமிழிசைக்கு வேட்டு வைத்ததே

என்ன உளறுகிறாய்?!
பொய்யை நியாயப்படுத்தாதே
மெய்யே சரி..

எனில்
இருந்த முகிலனைத் தேடுங்கள்
இல்லாத நேசமணியை விட்டு விடுங்கள்...

✍️செ. இராசா

tagTag PhotopinAdd Location

30/05/2019

#மாதக்_கடைசி_புலம்பல்


ஒவ்வொரு முறையும்
உன் இருப்பை நன்றாக உணர்கிறேன்
ஆனால்..
நீ இல்லாத அந்த நாட்களில் மட்டும்

ஒவ்வொரு முறையும்
உன்னைக் கவனமாகக் கையாள்கிறேன்
ஆனால்
நீ இருக்கும் ஆரம்ப நாட்களில் மட்டும்..

ஒவ்வொரு முறையும்
உன்னை பிடித்துவைக்கவே முயல்கிறேன்
ஆனால்
நீ தான் எப்போதும் பிடிகொடுப்பதே இல்லை..

இப்போதும் காத்திருக்கிறேன்..
எப்போது வருவாய் என் வங்கிக்கு?!

#மாதக்_கடைசி_புலம்பல்

28/05/2019

கள்ளில் விழுந்ததே கண்!


வெள்ளை நிறமுள்ள வெள்ளந்தி பெண்ணொன்று
கள்ளச் சிரிப்போடு கைவீசித்- துள்ளிவர
அள்ளி அணைத்திடவே ஆசையுறும் ஆண்மகனாய்
கள்ளில் விழுந்ததே கண்!

✍️செ. இராசா

(கள் நண்பர் சிங்கம் ராஜ் சிங்கம் உடையது
சொல் அடியேனுடையது😊😊😊)

வந்திடுமா வெற்றியெனும் வாய்ப்பு!



அந்தரத்தில் தொங்குதென அன்னாந்து பார்த்தாக்க
வந்திடுமா வெற்றியெனும் வாய்ப்பு

27/05/2019

தெரிந்தவரின் மனைவி சொன்னாராம்






தெரிந்தவரின் மனைவி சொன்னாராம். இவரென்ன தமிழிலேயே எழுதுகிறார். இவரும் உங்களைப்போல் தமிழ் மீடியம் படித்தவரா (பள்ளியில்) என்று. இந்த பதில் சற்றே என்னை யோசிக்க வைத்தது?! இங்கே அவர் என்னையும் அவரையும் சற்று மட்டப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியது. எது எப்படியோ?

நான் பழைய ராஜமாணிக்கமாக இருந்தால் கட்டாயம் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால், தற்போது உண்மையில் தமிழ் மரபு படிக்கும் மாணவன் என்பதால் எனக்குத் துளியும் வருத்தமில்லை என்பதை அவர் அறிந்திருக்க நியாமில்லைதான்.
இங்கே சில விடயங்களைப் பகிர விரும்புகிறேன்.

1. முதலில் ஆங்கிலத்தை உயர்வாகவும் தமிழைத் தாழ்வாகவும் நினைக்கும் அடிமை மனோபாவம் ஏன் இன்னும் குறையவில்லை என்று தெரியவில்லை. (இவர்கள் அரபி, பிரான்சு, ஜெர்மனிக்காரர்களைப் பார்த்துத் திருந்த வேண்டும்)

2. அடுத்த உண்மை, ஒரு மொழியில் பேசுவது என்பது வேறு. புலமைத்துவம் பெறுவது என்பது வேறு. அது புரியாமல் பேசுவதே தவறு. (தமிழைப் படித்தால் தெரியும் அதன் அழகும் ஆழமும். நான் தமிழில் இன்னும் 0.0001% தான் படித்துள்ளேன். என் தாய்மொழியையே இன்னும் நான் படிக்கவில்லை)

3. மேலும், நமக்கு நம் மொழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது கிடைக்கும் ஆனந்தம் மற்ற மொழிகளில் கிடைப்பதில்லை என்பதும் உண்மை. (ஒரு வெண்பா எழுதிப்பாருங்கள். கிடைக்கும் ஆனந்தம் தெரியும்)

4. தமிழ் மீடியத்தைத் தாழ்வாக நினையாதீர். காரணம் தமிழ்மீடியம் வழி படித்தவர்களே நிறைய சாதனை படைப்பதைக் கண்கூடாகக் கண்டவன் நான். ஆங்கில இலக்கணத்தைச் சரியாகப் படித்தவர்கள் தமிழ்மீடியம் வழி வந்தவர்களே. அது மட்டுமல்ல, புரிந்தே படிப்பார்கள் அல்லது புரிந்தால்தான் படிப்பார்கள். (என் நண்பன் சிவா 300 ஆசிரியர்களுக்கு ஆங்கில இலக்கண வகுப்பு எடுப்பான். நானும் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வெளிநாட்டில்தான் ஒருங்கிணைப்பாளர் பணி செய்கிறேன்)

5. தற்போது ஆங்கில வழியில் படிக்கும் இளைஞர்களுக்கு பெரும்பாலும் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் சரி வரத் தெரியாது என்பதே உண்மை. (இதில் வெகு சில சென்னை, கோவை போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் விதிவிலக்கு)

இதில் சொல்ல வருவது என்னவென்றால். அன்றைய தமிழ் மீடியத்தில் படித்தவர்களே அனைத்து சாதனையாளர்களும். அவர்களைக் குறைத்து எடை போடாதீர். தயவுசெய்து, புரிந்து படியுங்கள். எங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

மேலும், தமிழ் அவமானமல்ல எங்கள் அடையாளம்.

இவன் அன்புத் தமிழன்!

✍️செ. இராசா

விலக விலகவே சுடுகிறாய்



விலக விலகவே சுடுகிறாய்- நீ
விரும்பி வந்தால் குளிர்கிறாய்!

பழகப் பழகவே இனிக்கிறாய்- நீ
பழையதைப் பேசியே வதைக்கிறாய்!

கடைக்கு என்றால் துளிர்க்கிறாய்- நான்
தடையொன்று போட்டால் வெடிக்கிறாய்!

அம்மா என்றால் சிரிக்கிறாய்- என்
அம்மா என்றால் முறைக்கிறாய்!

சும்மா சும்மா நகைக்கிறாய்- ஏன்?!
சும்மா சொன்னால் பகைக்கிறாய்!

✍️செ. இராசா

#சும்மா

#கரப்பான்_பூச்சி




இருட்டை மட்டுமே
விரும்பும் நீ
இங்கே அப்பாவியாம்....

ஒன்றும் செய்யாமலே
ஓடவிடும் நீ
இங்கே அப்பாவியாம்...

அனைத்து மகளிரையும்
அலறவிடும் நீ
இங்கே அப்பாவியாம்...

கற்றை மீசையின்றி
ஒற்றை மீசையிலே
அடக்குகிற நீயா அப்பாவி..
அடப்பாவி

நாங்களே அப்பாவி...

#கரப்பான்_பூச்சி

✍️செ. இராசா

தீ


அழுத்தக் காற்றில்
அவதரித்த குழந்தை நீ

பஞ்ச பூதத்தில்
பரிணமித்த தத்துவம் நீ

உயிர்களை
உயிர்ப்பிக்கும் உஷ்ணம் நீ

பசியினைப்
பற்ற வைக்கும் தணல் நீ

புசித்ததை
மசியவைக்கும் கனல் நீ

மசிந்ததை
குருதியாக்கும் வெப்பம் நீ

இங்கே..
நீ இல்லாமல் எதுவுமில்லை...

ஆம்..
அணு அடுப்புகள்
அனைத்தும் எரித்த நெருப்புதானே
சூரியக் குடும்பங்கள்

சூரியக் குடும்பங்கள்
சேர்த்த குடியிருப்புதானே
இந்த பால்வீதி?!

பால்வீதியில் மிதக்கும்
தீப் பந்தங்கள் தானே
இந்தப் பிரபஞ்சம்?!

புவியின் மேனியை
பருதியின் கரங்கள்
பற்றாது போகுமானால்
மழை மேகம்
மசக்கை கொள்ளுமா?!
இல்லை
நீர்க் குழந்தை
நிலம் பார்க்குமா?!

நீரின்றி அமையாதாம் உலகு
தீயே..
நீரின்றி அமையுமா உலகு?!

ஆயினும்...
ஒரு சந்தேகம்

முக்கண்ணாய் இருந்து
முக்தி தரும் நீ
ஏழையின் குடிசையை
எரிப்பது ஏன்?!

அன்னை சீதையை
அரவணைத்த நீ
அணுவின் உலையாகி
ஆபத்தாவது ஏன்?!

பாஞ்சாலி தேவியை
பிரசவித்த நீ
சமத்துவ நீதியை
பிரசவிக்காதது ஏன்?

இங்கே

இன்னும்
அதிகாரத் தீ
அடங்கவில்லையே?

இன்னும்
சாதியத் தீ
சாகவில்லையே?

தீயே
பொறுத்தது போதும்
போகித் தீ மூட்டு

பொறுத்தது போதும்
போதித்து காட்டு

✍️செ. இராசா

பிற்சேர்க்கை:

காணொளிக்கு

https://www.facebook.com/1529793087155445/posts/1552844551516965?s=100000445910230&v=e&sfns=mo

26/05/2019

#காதல்_சாலை



மே மாதம் வெளிவந்துள்ள தமிழருவியில் அடியேன் எழுதிய கவிதையும் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனமார்ந்த நன்றி திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்கள்
மனமார்ந்த நன்றி திருமதி. முல்லை நாச்சியார் அக்கா அவர்கள்
#காதல்_சாலை
தமிழருவி மின்னிதழ் படிக்க
////
https://www.facebook.com/groups/703559956713451/permalink/714667462269367?sfns=mo

25/05/2019

பணியாரமா இந்த கோள்கள்?!





பிரபஞ்சமென்கிற
பெரிய தட்டில்
ஊற்றிய பணியாரமா
இந்த கோள்கள்?!

வாடா போடா எனும்போது

எத்தனை தூரம் சென்றாலும்
எத்தனை காலம் கடந்தாலும்
வாடா போடா எனும்போது
வாடாமல் சிலிர்ப்பதே நன்நட்பூ!

#பள்ளி_மாணவன்

படி படி என்றே
படுத்தாத அம்மா
வெடி வெடி என்றே
வெடிக்காத அப்பா

முகநூல் பார்க்கையிலே
முறைக்காத அக்கா
வாட்சப் நோண்டையிலே
வையாத அண்ணா

வொர்க்சீட் தந்தே
வதைக்காத மிஸ்..
நீட்டு கேட்டு என்றே
வாட்டாத சிஸ்டம்..

இதற்கிடையில் நான்..
எப்படி? என எண்ணும்போதே
தலையில் விழுந்தது தண்ணீர்.....
“எழுந்திருடா மணியாச்சு”
என்ற அம்மாவின் அதட்டலோடு
#பள்ளி_மாணவன்

24/05/2019

ஆண்லைன் வர்த்தகமே....நீ அயோக்கிய வர்த்தகமே




அன்று எனக்குத் தெரியாது
உன் வசீகர வலை
என்னையும் வீழ்த்துமென...

படம் மாற்றி ஏமாற்றும்- சில
பெண்பார்க்கும் படலம்போல்
படம் காட்டி ஏமாற்றும்
ஆண்லைன் வர்த்தகமே..நீ
அயோக்கிய வர்த்தகமே

✍️செ. இராசா

(Mobile stand & Accessories)

போதும் சாமியோவ்




போதும் போதும் சாமியோவ்..
போகட்டும் விடுங்க சாமியோவ்..
பழையது போகட்டும் சாமியோவ்
புதியது பூக்கட்டும் சாமியோவ்

எதிர்க்கட்சி எல்லாம் சாமியோவ்
எதிரிகள் இல்லீங்க சாமியோவ்
வெற்றியும் தோல்வியும் சாமியோவ்
பற்றிட வேண்டாம் சாமியோவ்

சாதியை விடுங்க சாமியோவ்
சாதனை செய்யுங்க சாமியோவ்
மதவெறி விடுங்க சாமியோவ்
மனிதனாய் மாறுங்க சாமியோவ்

போதும் சாமியோவ்

✍️செ. இராசா

குறள்......தமிழினம்

தமிழினம் என்றும் தனித்துவமாய் இங்கே
தனியாய்த் தெரியுது பார்!

23/05/2019

அனைத்து இடமும் சொர்க்கமே




நட்சத்திர உணவகமாய் இருந்தால் என்ன?
நட்சத்திரம் பார்த்த புல்வெளியாய் இருந்தால் என்ன?
அன்பு இருந்தால்
அனைத்து இடமும் சொர்க்கமே...

அப்படி அமைந்த
இரண்டு இஃப்தார் விருந்துகள்...

நன்றி உறவுகளே..

22/05/2019

“சினமற்ற மனிதன் பிணத்திற்கு சமம்”

“சினமில்லா குணம்” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதைக்கு நண்பர் சிங்கம் ராஜ் சிங்கம்அவர்கள் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்கள், அதாவது;
“சினமற்ற மனிதன் பிணத்திற்கு சமம்” என்று,
அதற்கு நான் அளித்த பதில் பின்னூட்டம்;

நல்லது நண்பரே...
சினம் கத்தியைப்போல் இருக்கட்டும்
ஆனால்
கொலைகாரன் கையில் இருக்கும் கத்தியாய் அல்லாமல்
மருத்துவரின் கையில் இருக்கும் கத்தியாய் இருக்கட்டும்
சினம் தீயைப்போல் இருக்கட்டும்
ஆனால்
குடிசையைக் கொளுத்தும் தீயாய் அல்லாமல்
கலங்கரையில் ஒளிரும் தீபமாய் இருக்கட்டும்
சினம் தீவிரமாய் இருக்கட்டும்
ஆனால்
தீவிரவாதியின் வெறியாய் அல்லாமல்
புலிகளின் ஒழுக்க நெறியாய் இருக்கட்டும்
அப்படி இருந்தால் சினம் சரியே
சரிதானே...!!!

✍️செ. இராசா

21/05/2019

கருத்துக் கணிப்பே “கரு”


கருத்துக் கணிப்பின் கணக்கீட்டில் தத்தம்
கருத்தைத் திணிப்பதைக் காண்!

எத்தனை இங்கே எதிர்ப்பிருந்தும் மோடியின்
வித்தையில் வென்றார் விருது!

எத்தனை இங்கே இடமிருந்தும் ராகுலின்
புத்தியால் வீழ்ந்தது கை!

கூவத்தூர் நாடக குத்தாட்டம் தேர்தலில்
கூவம்போல் நாறுது பார்!

சூரிய சூட்சம சூத்திரத்தில் கிட்டிய
பாரிய வெற்றியைப் பார்!

(முடிவுகள் எப்படி என்று பார்க்கலாம். காத்திருப்போம் மே23 வரை)

20/05/2019

#சினமில்லா_குணம்



புல் தின்னும் புலி என்று
புவி உலகில் உண்டா?- இல்லை
பால் ஒதுக்கும் பூனையென்று
பாரினிலே உண்டா?!

அசைவத்தை உண்கின்ற
ஆவினங்கள் உண்டா?!- இல்லை
சைவத்தை வெறுக்கின்ற
சிவகணங்கள் உண்டா?!

இனத்தினை பெருக்காத
இனமென்று உண்டா?!- இல்லை
குணத்திலே சினமில்லான்
குன்றியது உண்டா?

#சினமில்லா_குணம்

✍️செ. இராசா

19/05/2019

#தேநீர்_தியானம்_7



உன்னைக் கைப்பற்றும்
ஒவ்வொரு நொடியும்
நீ
உன் உஷ்ணத்தை
என் விரல்வழியே பாய்ச்சுகிறாய்

உன்னை உள்வாங்கும்
ஒவ்வொரு நொடியும்
நான்
என்னை மறக்கும் தியானத்தை
எளிதாகக் கற்றுத்தருகிறாய்

உன்னை விலகப்போகும்
ஒவ்வொரு நொடியும்
நீ
அடுத்த சந்திப்பிற்கும்
அச்சாரமிட்டே செல்கிறாய்

உண்மையில் நீ நல்ல தேனீரே..

#தேனீர்_கவிதை

அன்பைப் பொழி ஆறுதல் மொழி



அன்பைப் பொழி
ஆறுதல் மொழி
இன்பம் அளி
ஈவது வழி

உன்னுள் ஒளி
ஊழில் தெளி
எதிர்ப்பைக் கழி
ஏகாந்தம் வழி

ஐயம் ஒழி
ஒன்றில் தெளி
ஓங்கி ஒலி
ஔவை மொழி
அஃதே வழி

✍️செ. இராசா
உள்ளீடு இன்றி
வெளியீடு இல்லை

18/05/2019

குறள்.....வென்றாயா சொல்


எம்மை அழிக்கின்ற எண்ணத்தில் வந்தவனே
உண்மையில் வென்றாயா சொல்?!

✍️செ.இராசா

#மே18

(நம் வெற்றிக்கு புறநானூற்றுப் பாடலே சான்று)

வெளிநாடு-1


வெளிநாடு போனாக்க
வெளிச்சம் வருமென்று
கற்பனை ராசாவாய்
கனவிலே வீடு கட்டி
அதிலே குடியேற
அயல்நாடு முயன்றாலோ
அசலும் போலியுமாய்
ஆயிரம் ஏஜண்டுகள்

நாணய ஏஜெண்டிடம்
நாணயத்தைக் கொட்டிவிட்டு
வேலையை எதிர்பார்த்து
வெறியோடு சென்றாலோ
வந்த வேலை ஒன்றாக
தந்த வேலை வேறாக
மாதங்கள் போனாலும்
ஊதியங்கள் கிட்டாது

இரண்டு வருடங்களை
எப்படியோ கடந்தவுடன்
வரவே மாட்டேன்னு
வார்த்தைகளைக் கொட்டிவிட்டு
செத்துப் பிழைச்ச காசில்
செண்டுகளப் பூசிக்கிட்டு
சந்திக்கும் அனைவருக்கும்
சாக்லெட்டில் வாயடைத்தால்
இரண்டு மாசத்தில்
எல்லாமே தீர்ந்துபோக
கடவுச்சீட்டோடு
அடகுக்கடை போயிவந்தால்
தெரிஞ்ச உறவெல்லாம்
தெரியாமப் பேசுவாக;

உனக்கென்ன மகராசன்
நினைச்சாப் பொயிடுவன்னு

✍️செ. இராசா

17/05/2019

பொறியாளரின் ஆட்டோ




இயந்திரவியல் அறிவோடு
வேகமாய்ப் பறக்கிறது
பொறியாளரின் ஆட்டோ

விளையாடும் மழலைகள்




விளையாடும் மழலைகள்
விளையாடும் போதில்
விளையாட்டை எப்போதும்
வெறுப்பதே இல்லை

வினையாடும் வாழ்க்கையோ
உனையாட்டும் போதில்
வினையாட்டும் விளையாட்டை
வெறுப்பது ஏனோ?

✍️செ.இராசா

#நீர்க்குமிழி_உணர்த்தும்_உண்மை



காற்றும் நீரும் கலவி செய்திட
காற்றினைச் சுமந்து உருவம் வந்திட
காற்றிலே மிதந்து காலம் கழிந்திட
காற்றிலே சேரும் தருணம் வந்திட
காற்றோடு கரைந்தது குமிழி!

16/05/2019

ஊதா சட்டை



ஊதா சட்டை- இது
ஊதி ஊதியே வளரும் சட்டை
நல்ல படைப்பை கெடுக்கும் சட்டை
எல்லோர் வாயிலும் இருக்கும் சட்டை
வாங்கிய காசுக்கு கூவும் சட்டை
வாந்தி எடுத்ததை திங்கும் சட்டை
.......
இதுக்குமேல உனக்கு மரியாதை இல்லை...

அதர்வாவின் 100 படம் அருமை மக்களே....

இவரின் கேவலமான விமர்சனத்தை நம்ப வேண்டாம்.
இவரைத் தவிர்த்தாலே போதும்

(நான் மனைவி சொன்னதால் விமர்சனம் பார்த்தேன்)

குறள்....வண்டு

மலர்களைக் கொய்கிற மங்கையைக் கண்டு
மலரென மொய்த்ததாம் வண்டு

குறள்.....உள்ளே உறைகிற




உள்ளே உறைகிற உண்மையைக் கண்டபின்
உள்ளம் வெறுக்குமா சொல்

எங்கிலும் இங்கே இறையாய்த் தெளிந்தபின்
வெஞ்சினம் ஏனோ விளம்பு
அடைமொழிக்குள்
அடைபடாதீர்

14/05/2019

#எப்ப_வருவாயோ.....விரைவில்

பூக்கள் பூக்கும்வரை
...........பொறுத்திருங்கள்
காய்கள் கனியும்வரை
............காத்திருங்கள்
விதைகள் உயிர்க்கும்வரை
............உறங்கவிடுங்கள்
வித்தைகள் வெடிக்கும்வரை
.............விழித்தேயிருங்கள்

ஆம்.......விரைவில்.....வெடிக்கக் காத்திருக்கிறது

#எப்ப_வருவாயோ” கிராமியப் பாடல்

பாடகி: அலீனா மேரி ஜொஸி
இசை: காலின் தாமஸ்
வரிகள்: செ. இராசா
வெளியீடு: கவிராகம் வீடியோஸ்
தயாரிப்பு: டிரீம் ஸ்டூடியோ

13/05/2019

நான் என்னுடன்

அறம்பற்றி சொல்லப் போகிறேன்
🗣அதற்குத்தான் அறநூல்கள் இருக்கிறதே?

உணர்ச்சியை கொட்டப் போகிறேன்
🗣சமயநூல்களில் நிறைய கொட்டிவிட்டார்களே!!

கற்பனையில் கலக்கப் போகிறேன்
🗣கம்பனிடன் கடன் வாங்கியா?

வரிகளை சுருக்கப் போகிறேன்
🗣வள்ளுவனை உள் வாங்கியா?

ஒரே அடியில் சொல்லப்போகிறேன்
🗣ஔவை செய்து விட்டாளே?!!

பாடலில் புரட்சி செய்வேன்
🗣பாரதியார் என்ன செய்தாராம்?

கவிதையை திரையில் ஏற்றுவேன்
🗣கவியரசர் ஏற்றிவிட்டாரே?

வடிவங்களை மாற்றிச் செய்வேன்
🗣விக்டர்தாசர் மாற்றிவிட்டாரே?

எதையாவது கிறுக்கப் போகிறேன்
🗣அதைத்தானே செய்கிறாய்?!

அமைதியாய் இருக்கப்போகிறேன்
🗣ஆகா...நீ நல்ல கவிஞனய்யா

✍️செ. இராசா

இமைக்கா நொடிகளையும்


மலரும் புன்னகையில்- எனை
மயக்கும் மல்லிகையே- நீ
உதிர்க்கா வார்த்தையையும்- என்
உதிரம் சொல்லுதடி!

கண்ணில் கவியெழுதி- என்
நெஞ்சில் பதிந்தவளே- நீ
நினைக்கா வரிகளையும்- என்
நெஞ்சம் படிக்குதடி!

இமையில் தாளமிட்டு- எனை
இசைக்கும் மெல்லிசையே- உன்
இமைக்கா நொடிகளையும்- என்
இதயம் உணருதடி!

✍️செ. இராசா

12/05/2019

செவிலியர் தின வாழ்த்துகள்



வெட்டுக் காயங்கள்
சொட்டும் ரத்தங்கள்
கோர உருவங்கள்
கொதிக்கும் ரணங்கள்
அழுகின்ற குரல்கள்
அழுகிய நாற்றங்கள்
மிரட்டும் உறவுகள்
குறட்டை சப்தங்கள்
மரண ஓலங்கள்
மர்ம கணக்குகள்
எரிச்சல் பார்வைகள்
எச்சரிக்கை சமிக்ஞைகள்

இவை அனைத்தையும் கடந்துதான்
இங்கே எப்போதும் பூக்கிறது
இந்த செவிலியரின் புன்னகை

செவிலியர் தின வாழ்த்துகள்

✍️செ. இராசா

பிற்சேர்க்கை
*************

செவிலிய விவிலியத்தை
செய்ததொரு அன்னை!

அன்பின் சபைகூட்டி
அணைத்ததொரு அன்னை!

உன்னை என்னையுமே
ஈன்றதொரு அன்னை!

அன்பை(யும்) எதிர்பாரா
அன்புருவே அன்னை!

✍️செ. இராசா

தாய்மை- தாய்மெய்

உன்மெய்யில் உண்மையாய் ஒன்றிய
தன்மையாய்
உன்னுள் உறைபவள் தாய்!
(தாய்மை- தாய்மெய்)

11/05/2019

கதவைத் திற காற்று வரும்



கதவைத் திற காற்று வரும்
கண்களைத் திற காட்சி வரும்
மனதைத் திற மகிழ்ச்சி வரும்
மதியைத் திற ஞானம் வரும்
உன்னைத் திற உயர்வு வரும்
உலகைத் திற கவிதை வரும்

✍️செ. இராசா

#அடைக்கோழியின்_அடடே_கேள்வி



முக்கிமுக்கி முட்டையிட்டு
மொத்தமாக சேர்த்துவச்சு
முட்டிபோட்டு உட்கார்ந்து
கொக்கரித்து திரிகிறது நாங்க...

கொண்டையில பூவுவச்சு
கொண்டாட்டம் போட்டுக்கிட்டு
பெட்டைகளை தேடிக்கிட்டு
கொக்கரக்கோ கூவுறது நீங்க..

மக்கா நியாமா?!!

#அடைக்கோழியின்_அடடே_கேள்வி

#ஆம்_நான்_பணம்_பேசுகிறேன்




ஆசையின் வேகத்தில் கைப்பற்றி
ஐயிரு விரல்களில் விளையாடி
எண்ணி எண்ணியே மகிழ்வுற்று
எண்ணிய வேகத்தில் இடம்மாற்றி
அகத்தில் பதுக்கிய திமிரோடு- நீ
அலைந்து திரிவது யாராலே?!

இருக்கும் பொழுதில் அலட்சியமாய்
இல்லாப் பொழுதில் பைத்தியமாய்
எளிதில் கெடுக்கிற திராவகமாய்
எங்கும் பறக்கிற புள்ளினமாய்
மதுவில் மூழ்கிய வண்டினமாய்- நீ
மதியின்றிப் போவது யாராலே?

வருகிற பொழுதில் இன்முகமாய்
வராத பொழுதில் துன்முகமாய்
தேவைக்கு ஏங்கிடும் காவிரியாய்
தேர்தலில் அடிக்கிற கஜாவாய்
கருப்பு வெள்ளைக் காகிதமாய்- உனைக்
கலங்க வைப்பவன் நான் தானே!!!

#ஆம்_நான்_பணம்_பேசுகிறேன்

10/05/2019

குறள்...இலைகள்

இலைகள் துளிர்த்தே எழுந்திட வேண்டின்
தலையிலேத் தண்ணீர் தெளி

குறள்....வைக்கோலும்

வைக்கோலும் இல்லாது வைப்பாரும் இல்லாது
கைப்பையைத் திங்குதே மாடு

படம்: Nanjil Sunil தம்பி
குழம்பிப்போன மனதிற்கு
குளம்பி (coffee) மருந்தாகுமா?!

09/05/2019

குகன்




குகன்
*******

அறிமுகம்
***********
அகமெல்லாம் அன்பு கொண்டு
#குகன்_செய்த_பக்தி கண்டு
இராமனே வியந்து நின்ற
இராமாயணக் காட்சியினை
அடிகளில் சுருக்கிடவே
அடிபொடி நான் முயலுகின்றேன்!
அன்னைபோல் பொறுத்தருள
அனைவரையும் வேண்டுகின்றேன்!

துறவத் தொடக்கம்
*******************
நாட்டினைத் துறந்துவிட்டு
காட்டினைப் புக எண்ணி
இராமசீதை இலக்குவனார்
இராவிலே நகருகின்றார்!

பற்றினைத் துறந்துவிட்ட
பற்றில்லா முனிவரெலாம்
பற்றில்லான் பாதங்களை
பற்றிடவே எண்ணியங்கே
விருந்திற்கு வரச்சொல்லி
விருப்பத்தைத் தெரிவிக்க
விருந்தோம்பும் குடிலுக்கு
விரும்பியே குடிபுகுந்தார்!

துடித்த குகன்
*************
அயோத்தியின் சேதியெல்லாம்
அகத்தீயாய் பரவிடவே
கங்கையை ஆளுகின்ற
குகனையும் பற்றிடவே
படகின் துடுப்பினைப்போல்
படபடப்பில் துடித்துவிட்டான்!

அடுப்புக் கரியெல்லாம்
அங்கமாய் எழுந்ததுபோல்
அழகுக் கரிநிறத்தான்
அண்ணலைக் காணவேண்டி
முனிவர் குடில் நோக்கி
முனைப்போடு ஓடுகின்றான்!

இலக்குவன் சந்திப்பு
*******************
புழுதிப் படையொன்று
சலசலப்பாய் வருகுதென்றே
இதயத்தில் இடிபோல
இலக்குவன் துடித்துவிட்டான்!

கண்ணின் இமைபோல
அண்ணனின் அன்புத் தம்பி
அன்பினர் கூட்டமென
அம்பினை தள்ளி வைத்தான்!

ஆயுதம் அனைத்தையும்
அப்படியே போட்டுவிட்டு
வந்த சுற்றத்தை
அங்கேயே நிறுத்திவிட்டு
குகன் மட்டும் தனியாக
குலராமன் குடில் சென்றான்!

இலக்குவன் எழில் கண்டு
இராமனென எண்ணிக்கொண்டு
புன்முறுவல் பூவோடு
இன்முகத்தில் குகன் செல்ல
“வருகவருக” என்றே
வந்தவனை வரவேற்று
அண்ணனின் அனுமதியை
பண்போடு வேண்டுகின்றான்!

வந்தது யாரென்றே
வாய் மணக்கக் கூறுகையில்
தாயிலும் சிறந்தவனாம்
தயாவான நல்லுருவாம்
குகனின் பெருமை கூறி
குடிலுக்குள் கூட்டிவந்தான்!

குகனின் பக்தி
**************
கேட்டே மகிழ்ந்த குகன்
பார்த்த ராமன் கண்டு
கண்களில் நீர் பெருக
அன்பினைப் பொழிந்துவிட்டான்!

வாயில் வார்த்தையின்றி
வாயடைத்துப் போன குகன்
தரையில் சிரம் தாழ்த்தி
தலைமகனின் தாள் வீழ்ந்தான்!

குகனின் அன்புப் பரிசு
*********************
மலைத்தேனில் ஊறவைத்த
விலைமீனின் குடமொன்றை
ரகுராமின் பசிதீர்க்க
நகுவாயில் குகன் தந்தான்!

மெய்யன்பு கண்ட அண்ணல்
மெய்சிலிர்த்துப் போய் நிற்க
பொய்யிலா காட்சி கண்டோர்
பொய்யோடு மெய் மறந்தார்!

பன்றிக்கறி படையலிட்ட
கண்ணப்பன் அன்பைப்போல்
ஆற்றுமீன் கொண்டுவந்த
நாவாயோன் அன்பு கண்டு
நான்காம் தம்பியாக
நாயகன் ஏற்றுக் கொண்டார்!

✍️செ. இராசா

08/05/2019

#எங்கே_இருந்தாய்_மகனே?






#எங்கே_இருந்தாய்_மகனே?-நீ
எங்கே இருந்தாயோ?!
எந்தன் வழியாய் வருமுன்னே- நீ
எங்கே இருந்தோயோ?!

எந்தையின் குருதியில் என்னைப்போல்-நீ
உந்தையின் குருதியில் ஒளிந்தாயோ?
தந்தையின் கடத்தல் ஓட்டத்திலே- நீ
மந்தையில் முந்தியே வந்தாயோ?

சிந்தையில் உன்னை நினைத்தாலே- நீ
விந்தையின் வடிவாய்த் தோன்றுதடா?!
தந்தையின் தொடராய் வந்தவனே- நீ
பந்தயக் குதிரை இல்லையடா?!

✍️செ. இராசா

07/05/2019

பழந்தரும் சிறுவன் நான்!



பழம்பெருங் கவிஞனில்லை- அன்புப்
பழந்தரும் சிறுவன் நான்!
பலம்காட்டும் வீரனில்லை- அன்புப்
பாலம்கட்டும் பொறிஞன் நான்!

வேழம்போல் உருவமில்லை- அன்பில்
வேழமே சிறிய வில்லை!
ஆழம்போல் ஞானமில்லை- அன்பின்
ஆழமே அகில எல்லை!

அதிகாரம் எனக்கில்லை- அன்பில்
அதி-காரம் தேவையில்லை- துளி
அகங்காரம் எனக்கில்லை- அன்பில்
அகம்-காரம் ஆவதில்லை!

✍️செ. இராசா

06/05/2019

ஏய் கடலே... ஏன் கொந்தளிக்கிறாய்?!



ய் கடலே...
ஏன் கொந்தளிக்கிறாய்?!
சந்திரன் சங்கடம் தருகிறானா?! இல்லை
சூரியன் சூடாக்குகிறானா?!
சொல்...
எதனால் கொந்தளிக்கிறாய்?!

படகுக் கத்திகள்
உடலைக் கிழிக்கிறதா?! இல்லை
நெகிழிப் பைகள்
நெஞ்சை அடைக்கிறதா?
சொல்...
எதனால் கொந்தளிக்கிறாய்?!

தொழிற்சாலை மூத்திரங்கள்
தொந்தரவு செய்கிறதா?! இல்லை
சாதிக்கொலை சம்பவங்கள்
சவக்காடு செய்கிறதா?
சொல்...
எதனால் கொந்தளிக்கிறாய்?!

ஆமாம்..
உன் கோப மேனியில் என்ன கொப்பளம்?
உன் நீல மேனியில் என்ன நுரை?!
உன் மூச்சுக்காற்றில் என்ன முனகல்?!
ஓ...
அந்தியில்தான் நீ(யும்) அலைவாயோ?!!

✍️செ. இராசா

#தவம்_பழகு






இன்னல் தருகிற உயிர்களுக்கும்
இன்னா தராதத் தவம் பழகு!
எள்ளி நகைக்கிற எதிரியையும்
அள்ளி அணைத்திட தவம் பழகு!

எண்ணிய தெல்லாம் ஈடேற்றும்
எண்ண உரமிடத் தவம் பழகு!
பண்ணிய தெல்லாம் வேரறுக்கும்
பண்பினைத் தருகிறத் தவம் பழகு!

மண்ணுயி ரெல்லாம் நேசிக்கத்
தன்னுயி ரறிகிறத் தவம் பழகு!
எல்லா வளமும் வந்தடைய
வள்ளுவம் காட்டிய தவம் பழகு!

04/05/2019

#முதியோர்_இல்லத்தில்_இருந்து_ஒரு_குரல்



வெக்கைச் சூட்டணைக்க
வெந்தையத்த போட்டுக்குடி
சிறுநீரு கடுத்தாக்க
இளநீரு வாங்கிக்குடி
தலையில் எண்ணை வச்சு
தலைமகனே நீயும் குளி

இன்னும் குறையாட்டி
இங்க கொஞ்சம் வா மகனே
ஆத்தால ஒரு எட்டு
பாத்துவிட்டு போ மகனே
சூரணம் செஞ்சுதரும்
சூத்திரத்த சொல்லித்தாரேன்

#முதியோர்_இல்லத்தில்_இருந்து_ஒரு_குரல்

03/05/2019

நீரின்றி வாழ்வேனா சொல்?--குறள்




நீரின்றி வாழாத நெற்பயிரைப் போல்நானும்
நீரின்றி வாழ்வேனா சொல்?

பற்றினை விட்டிடாப் பக்கிரி போல்நானும்
பற்றாது நிற்பேனோ சொல்?

பொய்யிலே வாழும் புலவனைப் போல்நானும்
பொய்யினைச் சொல்வேனா சொல்?!

வழிதவறிப் போகின்ற வாத்தினைப்
போல்நான்
குழியிலே வீழ்வேனா சொல்?!

✍️செ. இராசா

#மலையாளப்_பெண்பூவே



தனனானே தன்னானே
தனனானே தன்னானே
தனனானே தன்னா நன்ன நானே நானே
தனனானே நன்னா நன்ன நானே

#மலையாளப்_பெண்பூவே
விளையாடும் கண்மானே
உனைக்கான ஓடி வந்தேன் மானே நானும்
உனக்காக ஒடி வந்தேன் மானே

அழகான மீசையிலே
குரும்பான பார்வையிலே
எனைக்கான ஓடி வந்த மாமா நீயும்
எதற்காக ஓடி வந்தாய் மாமா

அடியாத்தி செண்பகமே
பிடிக்காதா?! என்முகமே
விழியாலே என்னைக் கொன்ற மானே உன்னால்
பழியாடாய் ஆகிப்போனேன் நானே

விடிவெள்ளிப் பேச்சாலே
வெடிக்காதே என்மாமா
தமிழாலே என்னை வென்ற மாமா உன்னால்
தனித்தீவாய் நானுமானேன் மாமா

✍️செ. இராசா

மரபை புதுக்கவிதை வடிவத்தில் சந்த நயத்தில் எழுதிய முயற்சி--குறள்



கடலில் கரைந்துள்ள கல்லுப்பாய் எந்தன்
உடலில் கரைந்தாயே நீ!

கவியில் கலந்துள்ள கற்பனையாய் எந்தன்
உயிரில் கலந்தாயே நீ!

மலரில் உறைந்துள்ள மாமணமாய் எந்தன்
உலகில் உறைந்தாயே நீ!

மதுவில் ஒளிந்துள்ள மாவிடமாய் இன்றென்
மதியை ஒளித்தாயே ஏன்?!

✍️செ. இராசா

(மரபை புதுக்கவிதை வடிவத்தில் சந்த நயத்தில் எழுதிய முயற்சி. இந்தப் படம் பார்த்ததால் தோன்றிய கவிதை இது)

#நான்கு_குறள்_வெண்பாக்கள்

02/05/2019

குறள்--தற்பெருமை

தற்பெருமை கொள்கின்ற தற்குறியாய் நில்லாமல்
கற்பதிலே ஆர்வத்தைக் காட்டு
✍️
தண்ணீரில் குளிப்பது
மீன்களுக்குத் தெரியாது

மீன்களின் மூக்கிற்கு...



மீன்களின் மூக்கிற்கு
.....ஜலதோசம் வருவதில்லை

மான்களின் கால்களுக்கு
.....ரீபாக்‌ஷூ தேவையில்லை

கழுகின் கண்களுக்கு
....காட்சியிலே பிழையில்லை

இலட்சிய மனிதனுக்கு
....கிட்டாதது எதுவுமில்லை

^^*****************************

✍️செ. இராசா

கவிஞனின் கற்பனைக்கு
....எப்போதும் எல்லையில்லை