09/05/2019

குகன்




குகன்
*******

அறிமுகம்
***********
அகமெல்லாம் அன்பு கொண்டு
#குகன்_செய்த_பக்தி கண்டு
இராமனே வியந்து நின்ற
இராமாயணக் காட்சியினை
அடிகளில் சுருக்கிடவே
அடிபொடி நான் முயலுகின்றேன்!
அன்னைபோல் பொறுத்தருள
அனைவரையும் வேண்டுகின்றேன்!

துறவத் தொடக்கம்
*******************
நாட்டினைத் துறந்துவிட்டு
காட்டினைப் புக எண்ணி
இராமசீதை இலக்குவனார்
இராவிலே நகருகின்றார்!

பற்றினைத் துறந்துவிட்ட
பற்றில்லா முனிவரெலாம்
பற்றில்லான் பாதங்களை
பற்றிடவே எண்ணியங்கே
விருந்திற்கு வரச்சொல்லி
விருப்பத்தைத் தெரிவிக்க
விருந்தோம்பும் குடிலுக்கு
விரும்பியே குடிபுகுந்தார்!

துடித்த குகன்
*************
அயோத்தியின் சேதியெல்லாம்
அகத்தீயாய் பரவிடவே
கங்கையை ஆளுகின்ற
குகனையும் பற்றிடவே
படகின் துடுப்பினைப்போல்
படபடப்பில் துடித்துவிட்டான்!

அடுப்புக் கரியெல்லாம்
அங்கமாய் எழுந்ததுபோல்
அழகுக் கரிநிறத்தான்
அண்ணலைக் காணவேண்டி
முனிவர் குடில் நோக்கி
முனைப்போடு ஓடுகின்றான்!

இலக்குவன் சந்திப்பு
*******************
புழுதிப் படையொன்று
சலசலப்பாய் வருகுதென்றே
இதயத்தில் இடிபோல
இலக்குவன் துடித்துவிட்டான்!

கண்ணின் இமைபோல
அண்ணனின் அன்புத் தம்பி
அன்பினர் கூட்டமென
அம்பினை தள்ளி வைத்தான்!

ஆயுதம் அனைத்தையும்
அப்படியே போட்டுவிட்டு
வந்த சுற்றத்தை
அங்கேயே நிறுத்திவிட்டு
குகன் மட்டும் தனியாக
குலராமன் குடில் சென்றான்!

இலக்குவன் எழில் கண்டு
இராமனென எண்ணிக்கொண்டு
புன்முறுவல் பூவோடு
இன்முகத்தில் குகன் செல்ல
“வருகவருக” என்றே
வந்தவனை வரவேற்று
அண்ணனின் அனுமதியை
பண்போடு வேண்டுகின்றான்!

வந்தது யாரென்றே
வாய் மணக்கக் கூறுகையில்
தாயிலும் சிறந்தவனாம்
தயாவான நல்லுருவாம்
குகனின் பெருமை கூறி
குடிலுக்குள் கூட்டிவந்தான்!

குகனின் பக்தி
**************
கேட்டே மகிழ்ந்த குகன்
பார்த்த ராமன் கண்டு
கண்களில் நீர் பெருக
அன்பினைப் பொழிந்துவிட்டான்!

வாயில் வார்த்தையின்றி
வாயடைத்துப் போன குகன்
தரையில் சிரம் தாழ்த்தி
தலைமகனின் தாள் வீழ்ந்தான்!

குகனின் அன்புப் பரிசு
*********************
மலைத்தேனில் ஊறவைத்த
விலைமீனின் குடமொன்றை
ரகுராமின் பசிதீர்க்க
நகுவாயில் குகன் தந்தான்!

மெய்யன்பு கண்ட அண்ணல்
மெய்சிலிர்த்துப் போய் நிற்க
பொய்யிலா காட்சி கண்டோர்
பொய்யோடு மெய் மறந்தார்!

பன்றிக்கறி படையலிட்ட
கண்ணப்பன் அன்பைப்போல்
ஆற்றுமீன் கொண்டுவந்த
நாவாயோன் அன்பு கண்டு
நான்காம் தம்பியாக
நாயகன் ஏற்றுக் கொண்டார்!

✍️செ. இராசா

No comments: