27/05/2019

தெரிந்தவரின் மனைவி சொன்னாராம்






தெரிந்தவரின் மனைவி சொன்னாராம். இவரென்ன தமிழிலேயே எழுதுகிறார். இவரும் உங்களைப்போல் தமிழ் மீடியம் படித்தவரா (பள்ளியில்) என்று. இந்த பதில் சற்றே என்னை யோசிக்க வைத்தது?! இங்கே அவர் என்னையும் அவரையும் சற்று மட்டப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியது. எது எப்படியோ?

நான் பழைய ராஜமாணிக்கமாக இருந்தால் கட்டாயம் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால், தற்போது உண்மையில் தமிழ் மரபு படிக்கும் மாணவன் என்பதால் எனக்குத் துளியும் வருத்தமில்லை என்பதை அவர் அறிந்திருக்க நியாமில்லைதான்.
இங்கே சில விடயங்களைப் பகிர விரும்புகிறேன்.

1. முதலில் ஆங்கிலத்தை உயர்வாகவும் தமிழைத் தாழ்வாகவும் நினைக்கும் அடிமை மனோபாவம் ஏன் இன்னும் குறையவில்லை என்று தெரியவில்லை. (இவர்கள் அரபி, பிரான்சு, ஜெர்மனிக்காரர்களைப் பார்த்துத் திருந்த வேண்டும்)

2. அடுத்த உண்மை, ஒரு மொழியில் பேசுவது என்பது வேறு. புலமைத்துவம் பெறுவது என்பது வேறு. அது புரியாமல் பேசுவதே தவறு. (தமிழைப் படித்தால் தெரியும் அதன் அழகும் ஆழமும். நான் தமிழில் இன்னும் 0.0001% தான் படித்துள்ளேன். என் தாய்மொழியையே இன்னும் நான் படிக்கவில்லை)

3. மேலும், நமக்கு நம் மொழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது கிடைக்கும் ஆனந்தம் மற்ற மொழிகளில் கிடைப்பதில்லை என்பதும் உண்மை. (ஒரு வெண்பா எழுதிப்பாருங்கள். கிடைக்கும் ஆனந்தம் தெரியும்)

4. தமிழ் மீடியத்தைத் தாழ்வாக நினையாதீர். காரணம் தமிழ்மீடியம் வழி படித்தவர்களே நிறைய சாதனை படைப்பதைக் கண்கூடாகக் கண்டவன் நான். ஆங்கில இலக்கணத்தைச் சரியாகப் படித்தவர்கள் தமிழ்மீடியம் வழி வந்தவர்களே. அது மட்டுமல்ல, புரிந்தே படிப்பார்கள் அல்லது புரிந்தால்தான் படிப்பார்கள். (என் நண்பன் சிவா 300 ஆசிரியர்களுக்கு ஆங்கில இலக்கண வகுப்பு எடுப்பான். நானும் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வெளிநாட்டில்தான் ஒருங்கிணைப்பாளர் பணி செய்கிறேன்)

5. தற்போது ஆங்கில வழியில் படிக்கும் இளைஞர்களுக்கு பெரும்பாலும் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் சரி வரத் தெரியாது என்பதே உண்மை. (இதில் வெகு சில சென்னை, கோவை போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் விதிவிலக்கு)

இதில் சொல்ல வருவது என்னவென்றால். அன்றைய தமிழ் மீடியத்தில் படித்தவர்களே அனைத்து சாதனையாளர்களும். அவர்களைக் குறைத்து எடை போடாதீர். தயவுசெய்து, புரிந்து படியுங்கள். எங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

மேலும், தமிழ் அவமானமல்ல எங்கள் அடையாளம்.

இவன் அன்புத் தமிழன்!

✍️செ. இராசா

No comments: