31/08/2018

நீர்


நெருப்பும் காற்றும்
கரம் கோர்த்துப் பிறந்த
காதல் குழந்தைதானே நீர்

எரிக்கும் ஹைட்ரஜனும்
ஏகாந்த ஆக்ஸிஜனும்
இரண்டோடு ஒன்றாய்
இணையும்போது சுரந்த
இனிய திரவம்தானே நீர்...

புவித்தாய் போர்த்திய
நீலச் சேலைதானே நீர்
அன்னை பூமியின்
அடிமன ஆதாரம்தானே நீர்...

வேரில் நீரில்லேல்
பாரில் பசுமையேது?!
பாரில் நீரில்லேல்
ஊரில் உயிர்களேது?!

நீர் விதையின்
நில விருட்சங்கள்தானே
நீயும் நானும்

நீர் உடைக்கும்
நீர்க்குடத்தில்தானே
வரவும் செலவும்

இராமேசுவரமோ
ஜெருசேலமோ
பாவங்களைக் கழுவும்
புண்ணிய தீர்த்தம் நீர்தானே

அக்காலமோ இக்காலமோ
எக்காலமும் ஊறும்
மக்காவின் தீர்த்தமும் நீர்தானே

படைத்தவன் படைப்பறிய
பாயிரம் பாடித்தந்த
பகலவன் சொன்னதுவும் நீர்தானே

நீர் ஓர் அற்புதமே.,,

நீரில் நீந்துகின்ற
நீலத்திமிங்கலமும்
நீரில் ஊருகின்ற
நிந்தன் உயிரணுவும்
நீரில் நீச்சலடிக்க
யாரிடம் கற்றன?!!

நீரிடமே கற்றனவோ...?!!

உப்பைக் கீழ்விட்டு
உயிர்ப்பை மேலெழுப்பி
கருப்பாய் நிறம்மாறி
கவிதையாய்க் கசிந்துருகி
மண்ணில் முத்தமிடும்
விண்ணின் வித்தகத்தை
வியந்தே பார்த்தால்- நீர்
விந்தை புரியாதோ?!!

நீரில்லையேல் நீயேது நானேது
நீரில்லையேல் உலகேது உயிர்களேது

நீர்......என்றும் ஓர் அதிசயமே
நீர்......என்றும் ஓர் அற்புதமே

✍️செ. இராசமாணிக்கம்

No comments: