31/08/2018

மாலை மயக்கம் (குறளின் குரலில்)


அதிகாலை வேளையிலே அறம்பாடி
அதற்கடுத்த பகற்பொழுதில் பொருளீட்டி
அந்திசாமம் வந்ததுமே மயங்குகின்ற
அற்பமான குடிமகன்போல் வாழுகின்றேன்

பிரிவென்ற சொல்கூட சுடுமென்று
பிரிவென்றே சொல்லாத உன்னவளைப்
பிரிந்துநீ தொலைதூரம் சென்றதினால்
பிரியாத நின்நினைவால் வாடுகின்றேன்

ஒருநாளும் தவறாத கதிரவனாய்
ஒருநாளும் மறவாத உன்னவளை
சிலநாளே தோன்றுகின்ற முழுநிலவாய்
சிலநாளே ஒளிதரநீ நினைத்தாயோ?!

நீர்


நெருப்பும் காற்றும்
கரம் கோர்த்துப் பிறந்த
காதல் குழந்தைதானே நீர்

எரிக்கும் ஹைட்ரஜனும்
ஏகாந்த ஆக்ஸிஜனும்
இரண்டோடு ஒன்றாய்
இணையும்போது சுரந்த
இனிய திரவம்தானே நீர்...

புவித்தாய் போர்த்திய
நீலச் சேலைதானே நீர்
அன்னை பூமியின்
அடிமன ஆதாரம்தானே நீர்...

வேரில் நீரில்லேல்
பாரில் பசுமையேது?!
பாரில் நீரில்லேல்
ஊரில் உயிர்களேது?!

நீர் விதையின்
நில விருட்சங்கள்தானே
நீயும் நானும்

நீர் உடைக்கும்
நீர்க்குடத்தில்தானே
வரவும் செலவும்

இராமேசுவரமோ
ஜெருசேலமோ
பாவங்களைக் கழுவும்
புண்ணிய தீர்த்தம் நீர்தானே

அக்காலமோ இக்காலமோ
எக்காலமும் ஊறும்
மக்காவின் தீர்த்தமும் நீர்தானே

படைத்தவன் படைப்பறிய
பாயிரம் பாடித்தந்த
பகலவன் சொன்னதுவும் நீர்தானே

நீர் ஓர் அற்புதமே.,,

நீரில் நீந்துகின்ற
நீலத்திமிங்கலமும்
நீரில் ஊருகின்ற
நிந்தன் உயிரணுவும்
நீரில் நீச்சலடிக்க
யாரிடம் கற்றன?!!

நீரிடமே கற்றனவோ...?!!

உப்பைக் கீழ்விட்டு
உயிர்ப்பை மேலெழுப்பி
கருப்பாய் நிறம்மாறி
கவிதையாய்க் கசிந்துருகி
மண்ணில் முத்தமிடும்
விண்ணின் வித்தகத்தை
வியந்தே பார்த்தால்- நீர்
விந்தை புரியாதோ?!!

நீரில்லையேல் நீயேது நானேது
நீரில்லையேல் உலகேது உயிர்களேது

நீர்......என்றும் ஓர் அதிசயமே
நீர்......என்றும் ஓர் அற்புதமே

✍️செ. இராசமாணிக்கம்

30/08/2018

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா!
*************************************


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழ் தந்த உறவுகளில்
தமக்கையாய் வந்தவரே.....
தம்பி தம்பி என்று சொல்லி
அன்பு மழை பொழிபவரே...

கொங்குநாடு பெற்றடுத்த
வேங்கையினத் தமிழ்மகளே...
முட்டிமோதி வென்றுகாட்டி
வெற்றிக்களம் காண்பவரே...

இந்த நாளில் இனிய நாளில்
இந்த தம்பி வாழ்த்துகிறேன்!
இந்த நாளின் இன்பம்போல
எந்த நாளும் வாழ்ந்திடுவீர்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!

என்றும் அன்புடன்,

✍️............ தம்பி

29/08/2018

குறுங்கவிதைகள்----புத்தகம்+தேனீர்

குறுங்கவிதைகள்
*****************


(1)
படிக்க படிக்க
வேகமாய்ச் செல்கிறது
கோப்பைத் தேனீர்

(2)
ரசித்து ருசித்ததில்
சீக்கிரம் முடிந்தது
புத்தக விரிகள்

(3)
பருகப் பருக
புதிய சுவை தருகிறது
நல்ல புத்தகம்

(4)
உள்ளே செல்ல செல்ல
உற்சாகம் தருகிறது
நல்ல வரிகள்

(5)
கடலளவுப் பிரச்சனையும்
காணாமல் போகிறது
ப(கு)டிக்கின்ற தருணம்

28/08/2018

நூல் கருத்துரை-----வேர்களின் குறுக்கு வெட்டுத்தோற்றம்


நூல் கருத்துரை
***************
கவிதை நூல்: வேர்களின் குறுக்கு வெட்டுத்தோற்றம்
நூலாசிரியர்: கரூர்பூபகிதன்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

என்னைத்தேடுகிறேன்
என்ற முதல் கவிதையிலேயே
உன்னைக் கண்டுகொண்டேன் தம்பி

எதையும் “பற்றி” இருக்கமுடியாது
என்று பற்றிய விடயங்களைப்
பட்டியலிட்டவிதமே
படிக்க தூண்டுகிறது
புத்தகம் முழுமையும்....

பற்றியதை விடாதவன் அஞ்ஞானி
பற்றியதை விடுபவன் ஞானி
பற்றியதால் வெடிப்பவன் மூடன்
பற்றியதை வடிப்பவன் கவிஞன்

பெரும் வாழ்வு என்றக் கவிதையில்
பெரும் ஞானம் தெரிகிறது....

சில்லறைக் காசுகளின் மரியாதை
சிலரின் சொற்களுக்கு இல்லை என
சில்லறை மனிதர் பற்றி எழுதிய
சிற்சில வரிகளில் அமைந்த
சிறப்பான கவிதைக்கு
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...

அடுத்தடுத்த கவிதைகளில்
அவரின் கருணை வரிகள்
பைத்தியமென அழைப்போரை
வைத்தியம் பார்க்க வைக்கிறது
ஐந்தறிவின் மீதும்
ஆறறிவின் கருணை பாய்கிறது

வக்கற்றவர்கள்
வாக்காளர்களே என
வசைபாடும் சமூகக்கவிதையில்
வரி குறைவு
வலி அதிகம்

எத்தனையோ கவிதைகள்
என்னைக் கட்டிப்போட்டாலும்
ஏனோ சில கவிதைகள்
என் மர மண்டைக்குத்தான்
ஏறவில்லை என்றால் அது
எழுதியவர் குறையல்ல...
எழுத்தை வாசித்த இந்த
எளியவனின் குறையே...

பூவரச இலை பீப்பீ
நுங்கு சக்கர வண்டி
தென்னங்கீற்று காத்தாடி....இப்படி
நாம் வாழ்ந்த காலத்தைச் சொல்லி
இப்போதுள்ள நிலை சொன்ன கவிதை
எப்போதும் யோசிக்க வைக்கும் கவிதை

மரங்கள் மனிதர்
கவிதை கடவுள்
பிணம் சாத்தான்
என்று அனைத்து தலைப்பிலும் கவிதைகள் செல்கிறது...

அதிலும் அந்த
“நாவின் ருசி” என்ற
ஒரு கவிதை போதும்
அவரின் கவித்திறமைக்கு
அட அட அட......
அவர் வரிகள் இதோ

“முதலில் பிரஜையென வளர்த்தீர்கள்
கணவனாய் போற்றினீர்கள்
தகப்பனாய் மகிழ்ந்தீர்கள்
நண்பனாய் கொண்டாடினீர்கள்
எதிரியாய்க்கூட தூற்றினீர்கள்

எல்லாமுமாகியிருந்த அவன்
சகித்திராத குடிகாரனாகிவிட்டான்
இப்போது

சந்தர்ப்பங்களுக்குள்
ருசியறிய அலைகிறது
கூர் தீட்டப்பட்ட நம் நாக்குகள்

ஏசுதலுக்கும் பேசுதலுக்கும் கூடவே”

உண்மை...உண்மை
உன்னை நீ திருத்தாமல்
உலகை நீ திருத்துவாயோ என்று
உரைக்கிறது என்னுள்ளே...
உறைகிறது மனம் கவிக்குள்ளே...

கிராம தேவதை கவிதைகளில்
கிராம வாடை மட்டுமல்ல
நீல் ஆம்ஸ்ட்ராங்கும்
ஆர்க்கிமிடிசும் வரும்போது
அறிவியல் வேர்களின்
அழகிய குறுக்கு வெட்டுத்தோற்றம்
அகத்தில் அப்படியே காட்சியானது....

நான் யார்? என்ற கவிதையில்
நான் ஞானத்தைத் தேடினேன்
ஆனால் கவிதையின் முடிவில்
அப்படியே கரைந்து விட்டேன்
ஆம்.......
அனைவருக்குள்ளும் இருக்கும்
அன்போடு கலந்த ஆற்றாமையே
அக்கவிதை பறைசாற்றுகிறது...

எங்க ஊருக்கு வராதீங்கன்னு சொல்லீட்டு
எப்படி வாழ்றோம்னு பார்க்க
வாங்கன்னு சொல்றது
அவருக்கே உரிய தனிச்சிறப்பு

கடேசியாக ஒன்று....
“வாழ்வனைத்தும் கவிதையெனில்...” என்ற வரிகொண்ட தலைப்பிடாக் கவிதைபோல்
அவர் எழுதிய அனைத்தும்
அற்புதக் கவிதைகளே எனச்சொல்லி
அகமகிழ்வோடு முடிக்கின்றேன்....

இது தமிழில் தலைசிறந்த கவிதை நூல்
இது தம்பி கரூராரின் அற்புத நூல்
இது மிகையல்ல.... உண்மை என்று கூறி
அகத்தில் மகிழ்வோடு
அன்போடு விடைபெறுகின்றேன்

இப்படிக்கு

செ. இராசமாணிக்கம்
அம்மன் பட்டி
(இ)கத்தார்

27/08/2018

நல்லதாய்க் காண்போம் (குறளின் குரலில்)


நூறு சதம் நல்லவன் என்றும்
நூறு சதம் கெட்டவன் என்றும்
ஊரில் உலகில் காணும் உறவில்
யாரும் இல்லீங்கோ....

குறையே இல்லாக் குணவான் என்றும்
குணமே இல்லாக் குறையோன் என்றும்
இங்கே நாமும் காணும் உறவில்
இருந்தால் சொல்லுங்கோ...

நன்மை தீமை ஆய்ந்து அறிந்து
உண்மை அதனில் தெரிந்து தெளிந்து
சரியாய்க் கணிக்கும் மனிதர் வாழ்வே
சிறப்பாய் இருக்குங்கோ...

✍️செ. இராசமாணிக்கம்

சில நினைவுகள்


நினைவுப் பெட்டிக்குள்
நிறையவே முத்துகள்!
நன்னெஞ்சில் அவைதானே
நமக்கான சொத்துகள் !

காலத்தின் விளையாட்டில்
காண்கின்ற காணொளிகள்!
வேண்டுகின்ற வேலைகளில்
வந்துவிழும் அதிசயங்கள்!

போகத்தின் மோகத்தில்
வேகத்தில் வருவதுபோல்
சோகத்தில் வந்திறங்கி
சொர்க்கமாக்கும் நினைவலைகள்!

ஒன்றல்ல இரண்டல்ல
ஒருகோடி மணித்துளிகள்!
சிந்தித்தால் அவைமாறும்
சிறப்பான கவித்துளிகள்!

25/08/2018

#காவிரிக்_கரையினிலே--119வது களஞ்சியம் கவிதைப் போட்டி-மூன்றாமிடம்


119வது களஞ்சியம் கவிதைப் போட்டி
************************************
கிடைத்த இடம்: மூன்றாமிடம்
நடுவர்_________: திரைப்படப் பாடலாசிரியர், திரு. நிகரன் அவர்கள்
அமைப்பு_______: தமிழ்ப்பட்டறை
(8 இலக்கியப் பேரவைகள் உள்ளது)
தலைவர்_______: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

#காவிரிக்_கரையினிலே
தாவிவந்த பூங்கொடியே...
ஆடிவரும் உன்னழகு
ஆச்சரியம் தருகுதடி

தேனே...தெள்ளமுதே
தேடிவந்த காவிரியே
துள்ளிவரும் உன்னழகு
துயரங்களைப் போக்குதடி

மானே....மரகதமே
மலைக்குடகு திரவியமே
அசைந்துவரும் உன்னழகில்
அங்கமெல்லாம் நனையுதடி

கண்ணே... கனியமுதே
கன்னடத்துப் பைங்கிளியே
அணைமீறும் உன்னழகை
அணைத்திடவே ஆசையடி

அன்பே... அற்புதமே
அர்த்தமுள்ள காவியமே
நீர்கொஞ்சும் உன்னழகே
நினைவெல்லாம் நிற்குதடி

✍️செ. இராசா


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2127826534202918/