ஒரு மரம் மட்டுமா போதிமரம்?!!!
அனைத்து மரங்களுமே போதிமரம்..
ஆம்.....
முன்பும் போதித்தது
இன்றும் போதிக்கின்றது
இனியும் போதிக்கும்
ஆமாம் என்ன போதித்தது?
வெட்டினாலும் தாங்குகின்ற
பொறுமையைப் போதித்தது!
வெட்ட வெட்ட தளிர்க்கின்ற
தன்னம்பிக்கையைப் போதித்தது!
மழைதரும் காரணியாய்
செய்நன்றி போதித்தது!
வளைத்தாலும் வளையாத
நேர்மையைப் போதித்தது!
இலையுதிர் காலத்தில்
நிலையாமை போதித்தது!
இறந்தாலும் வாழ்கின்ற
புகழுடைமை போதித்தது !
தன்வேரில் நீருறிஞ்சி
நுனிவரைக்கும் எடுத்துச்சென்று
தன்னையே நிமிர்த்துகின்ற
அறிவினைப் போதித்தது!
அடிவேரில் கிளைபரப்பி
பெருங்காற்றில் தலையாட்டி
அழிவினைத் தாங்குகின்ற
ஆற்றலைப் போதித்தது!
எவ்வுயிரும் இளைப்பாறும்
பல்லுயிர்ப் புகலிடமாய்
என்றென்றும் தருகின்ற
ஈகையைப் போதித்தது!
ஒரு மரம் மட்டுமா போதிமரம்...
அனைத்து மரங்களுமே போதிமரம்..
இனிய உலக வன தின வாழ்த்துகள்...
இனிய உலகக் கவிதை தின வாழ்த்துகள்
--செ. இராசா---
1 comment:
அருமை அண்ணா
Post a Comment