12/03/2018

85 -வது வார கவிச்சரம்---பண்டைய கால பெண்டிர்


🙏தமிழ்த்தாய் வணக்கம்🙏
**********^**************
மூத்த மொழிகளிலே
முதல் மொழியாம்
தமிழ் மொழியை
தலைகுனிந்து வணங்குகின்றேன்
தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே...🙏

🙏கவிச்சரத் தலைமை வணக்கம்🙏
********************************
பொறிஞராய் தேர்ச்சிபெற்று
அறிஞராய் பவனிவந்து
கவிஞராய் மிளிர்கின்ற
கவிச்சரத் தலைமையினை
மீனா திருப்பதி அக்காவை
கரமுயரத்தி வணங்குகின்றேன்
காலமெல்லாம் வாழ்ந்திடவே.....🙏

🙏அவை வணக்கம்🙏
**********************
ஆன்றோரும் சான்றோரும்
கற்போரும் கற்பிப்போரும்
தமிழாலே சங்கமித்த
தமிழ்ப்பட்டறை அவையினைநான்
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்....
தமிழோடு வாழ்ந்திடவே....🙏

பண்டைய கால பெண்டிர்
***********************
மாட்சிமை பொருந்திய மாந்தர்களின்
சாட்சியாய் வாழ்ந்த பெண்ணினத்தை
போற்றியே நானும் வணங்குகின்றேன்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சீதையும் திரௌபதியும்
***********************
மண்ணில் தோன்றிய சீதையும்
நெருப்பில் உதித்த திரௌபதியும்
பாரதம் போற்றிடும் காவியங்களின்
பாத்திரப் படைப்பின் நாயகிகள்!
--------------------------------------
வில்லினை உடைக்கும் போட்டியிலே
வீரத்தைக் காட்டிய இராமனையே
வெற்றியின் பரிசாய் மாலையிட்டு
சூரியகுலம் புகுந்தாள் சீதையம்மா!

வில்வித்தை சுயம்வரப் போட்டியிலே
வீரன் விஜயனை மாலையிட்டு
விதியால் ஐவரை மணந்திடவே
சந்திரகுலம் புகுந்தாள் திரௌபதித்தாய்!
----------------------------------
பதியுடன் கழித்த வனவாசம்
பதிமூன்று ஆண்டுகள் முடிந்தவுடன்
சிறையினில் கழிந்தது ஓராண்டு!
சிறியோன் இராவணன் செயலாலே!

ஐவருடன் ஒருவராய் வனவாசம்
பனிரெண்டு ஆண்டுகள் முடிந்தவுடன்
மறைந்து வாழ்ந்தது ஓராண்டு!
சதிகார சகுனியின் செயலாலே!
--------------------------------------
இலட்சுமணக் கோட்டைத் தாண்டியதால்
இலக்கை அடைந்தான் இராவணனே!
இச்செயல் வினையின் விளைவாக
இழந்தாள் இன்பம் ஜானகியே!

தடுக்கி விழுந்த துரியோதனனை
விடுக்கென உதவிட நினையாமல்
படக்கென சிரித்திட்ட செயலாலே
பட்டாள் துயரம் பாஞ்சாலி!
-------------------------------------
பிறன் மனையாளை கரம்பிடித்து
பிடித்தே இழுத்த பாவிகளில்
பத்துத் தலையோனும் மடிந்தானே!
புத்திகுறை தம்பியும் மடிந்தானே!
--------------------------------------
இராம இராஜ்ஜிய பேரரசி
இராம நீதியின் பெயராலே
கானகம் சென்றாள் துயரோடு!
கடேசியில் புதைந்தால் மண்ணோடு!

பாண்டவர் வெற்றியை பெற்றாலும்
பாஞ்சாலி பிள்ளைகள் அழிவாலே
வாடியே விழுந்தாள் தானாக!
வாழ்வும் கழிந்தது நெருப்பாக!
--------------------------------------
இதிகாசப் புராணங்கள் இரண்டிலுமே
இன்னல்கள் இருவரும் அடைந்தாலும்
இரும்பாய் இதயம் கொண்டதாலே
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்!

நன்றி நவில்தல்
***************
பெரியோர் நிறைந்த சபையினிலே
எளியோன் எமக்கும் வாய்ப்பளித்த
நல்லோர் சபைக்கு நன்றி பல.....
நன்றி... நன்றி... நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments: