30/03/2018

தாயில் சிறந்தத் தத்துவனே



திருவாசகத் தேன் சொரிந்த
திருப்பெருந்துறை ஊரினிலே
அருவமாய் அவனிருக்கும்
அற்புதத்தை யாதுரைப்பேன்?!

அரனுடைய கோவில்களில்
அதிசயக் கோவிலென்றால்
ஆத்மநாதர் வீற்றிருக்கும்
ஆவுடையார் கோவிலாகும்!

யோகசக்தி வடிவான
யோகாம்பாள் துணையோடு
இறையருளைப் பொழிகின்ற
இறைவனின் கோவிலாகும்!

சிந்தனையை சிலிர்க்க வைக்கும்
சிற்பக்கலை சிலைகளாக
ஆலயம் முழுவதுமே
அங்கேங்கே இருந்தாலும்
ஆத்மாவாய் வீற்றிருக்கும்
சிவனுக்கும் சிலையில்லை!
சக்திக்கும் சிலையில்லை!
இருவருக்கும் காட்டுகின்ற
இறைதீபம் அங்கு இல்லை!
கொடிக்கம்பம் பலிபீடம்
கோவிலிலே காணவில்லை!

மனிதனாய் பிறந்திருந்து
புனிதனாய் மாறிநின்று
திருமொழியாம் தமிழாலே
திருவாசகத் தேனளித்த
மாணிக்கவாசகரே
மரியாதை நேசரிங்கே...

ஆயிரம் வருடங்களாய்
ஆகிநின்ற போதிலும்
அவர்செய்த திருநூலும்
அவர்பெருமை சொல்கிறது...
அழகான பொக்கிஷமாய்
அதுவும் அங்கே இருக்கிறது....

மூலிகை ஓவியங்களோ
மூத்த கதை சொல்கிறது...
கற்சிலைச் சிற்பங்களோ
காவியங்கள் சொல்கிறது...

கல்லில் செய்த சங்கிலியோ
கண்கொள்ளாக் காட்சியாக
அந்தரத்தில் தொங்குவது
ஒரு பானை சோற்றிர்க்கு
ஒரு பருக்கைச் சோறாகும்...

அருவுருவ சிவலிங்கம்
அரனுடைய வடிவமெனில்
அருவம் அ(இ)ல்லா ஆத்மாவும்
ஆண்டவனின் வடிவமாகும்..

தாயில் சிறந்தத் தத்துவனின்
கோயில் சென்று வணங்கிடவே
நாயடியேன் வேண்டுகின்றேன்!
நாயகனைப் போற்றுகின்றேன்!

——செ. இராசா——-

(என்னை இக்கோவிலுக்கு கூட்டிச்சென்று காண்பித்த அன்புத்தம்பி திருR Thanga Pandiananக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்)

No comments: