அந்தப் படம்
எப்போது ஒளிபரப்பானாலும்
அத்தனை சந்தோஷமாம்
அவன் அம்மாவிற்கு...
காரணம் அந்தப் படமல்ல
தான் பிழைக்கும் நாட்டிற்குத்
தன்னையும் அழைத்துச்சென்று
தன் பிள்ளை பெண்டோடு
திரையரங்கும் கூட்டிச்சென்று
பச்சப் புள்ளையைப்போல்
ஐஸ்கிரீமும் வாங்கித்தந்த
அந்த அழகிய நினைவுகள் தானாம்...
ஆம்..
நினைவுகளைச் சேகரியுங்கள்!
செ. இராசா
31/08/2023
நினைவுகளைச் சேகரியுங்கள்
30/08/2023
27/08/2023
குரு & சீடன்
குரு
செல்களுக்குள் உட்புகுந்த
.....சிற்றின்ப ஆசையினை
அல்லலென எண்ணி
......அகற்றிடுவீர்- இல்லையெனில்
தொல்லை பலதருமே
.....தொற்றுபோல் பற்றிடுமே
சொல்லாத் துயர்தருமே
......சூழ்ந்து!
சீடன்
சிற்றின்பம் தப்பென்று
......செப்புகின்ற நற்குருவே
சிற்றின்பம் தப்பென்றால்
..... செய்ததுயார்?- குற்றமுற
ஆப்பிளைத் தின்றதுதான்
......ஆதாமின் பாவமெனில்
ஆப்பிள்;ஏன் சைத்தான்;ஏன்
......அங்கு?!
குரு
ஆண்டவரின் செய்கையில்
.....ஆயிரம் அர்த்தமுண்டு
தீண்டாதீர் என்றபின்னும் ....
......தீண்டியதார்?- வேண்டியதார்?
அத்தனைக்கும் காரணமாம்
......ஆசையெனும் சைத்தானை
சித்தத்தில் நீக்குவதே
......தீர்வு!
சீடன்
என்னதான் உள்ளதென
......எல்லோரும் எண்ணுவதில்
என்ன பிழையுண்டோ
.......யாமறியோம்- என்றாலும்
சிற்றின்பம் தாண்டாமல்
.......சேர்ந்திடுமா பேரின்பம்
குற்றமென்ன எம்கூற்றில்
.......கூறு!
குரு
ஒன்றிலும் ஒன்றாமல்
......ஒவ்வொன்றாய் தாண்டிடும்முன்
ஒன்றிலே பற்றியதில்
......ஓர்ந்திருந்தால்- நன்கறிவாய்
ஒன்றிற்கு மேலறிய
......ஓர்பிறவி பத்தாது
நன்கறிந்தோர் சொல்கேட்டால்
......நன்று!
செ. இராசா
26/08/2023
சந்திராயனை அனுப்பி...
சந்திராயனை அனுப்பிச்
சந்திரனை ஆய்வுசெய்யும்
அதே வேளையில்தான்
இங்கே..
விழுப்புரத்திற்கு ஆளனுப்பி
வீரமுத்தாரை ஆய்வுசெய்கிறார்கள்
சாதிய முத்திரை வழங்க....
வேதனையுடன்
25/08/2023
23/08/2023
சந்திராயன்-3 --- வெற்றி வெற்றி
வெற்றி வெற்றி வெற்றியென்று சொல்லடா- இது
வீர வெற்றி வெற்றியென்று சொல்லடா!
திட்ட மிட்ட வெற்றியின்று பாரடா- இதைத்
திட்டம் தீட்டித் தந்ததாரு கூறடா?!
(வேறு)
இந்தியன்னா சும்மா இல்லை கெத்து தானுங்கோ-நான்
இல்லையின்னு சொல்றவன்லாம் ஒதுங்கி நில்லுங்கோ
வீரமுத்து வேலு என்றால் யாரு சொல்லுங்கோ- தமிழ்
வீரத்தோட தலைநிமிர வச்ச பேருங்கோ
சந்திராயன் ரெண்டுகூட தோல்வி இல்லீங்கோ- இப்பச்
சந்திராயன் மூனுகூட ஹல்லோ சொல்லுதுங்கோ...
பாட்டிவடை சுட்டகதை படிச்சி ருப்பீங்கோ-இனி
பார்ட்டிவைக்க மூனுக்கொரு டிக்கெட் போடுங்கோ!
செ. இராசா
அழுக்கு
அழுக்கு
அழுக்கை
அழுக்குதானே என்று
அலட்சியப்படுத்தாதீர்..
தூசியும் அழுக்கும் சேர்ந்ததே
சுற்றிவரும் கோள்கள்...
அழுக்கை
இழுக்கென்று கூறி
அறைகூவல்விடாதீர்...
ஈருடலின் அழுக்குகள் சேர்ந்ததே
உலவுகின்ற உயிர்கள்...
பார்வதியின் அழுக்கில்தான்
பிள்ளையாரின் அவதாரமென்பது வெறும் கதையல்ல...
அது உண்மையை உணர்த்தும் தத்துவம்...
இந்திரனின் அழுக்கால்தான்
அகலிகையின் அவலமென்பது
வெறும் புராணமல்ல..
அது இன்றுவரைத் தொடரும் பேரவலம்....
ஆம்..
பிண்டமும் அழுக்கு
அண்டமும் அழுக்கு
நீயும் அழுக்கு
நானும் அழுக்கு
உயிரிருக்கும் வரைதான்
உடலுக்கு மரியாதை...
உயிர் பிரிந்தால்
உடலும் அழுக்கே...
அகத்தின் அழகு மட்டுமல்ல
அகத்தின் அழுக்கும்
முகத்தில் தெரியும்
முகத்தில் மட்டுமல்ல
எழுத்திலும் தெரியும்....
சில அழுக்குகள் ஆபத்தானவை
உடனே நீக்கிவிடவேண்டும்...
இல்லையேல்
பற்றிப் படிந்து
புற்றுநோய்க்கு வழிவகுக்கும்...
சில அழுக்குகள் நீக்கமுடியாதவை
அனுபவித்துதான் ஆக வேண்டும்..
இல்லையேல்...
கர்மவினை போல்
வேறுவழியில் வலிகொடுக்கும்...
அழுத்த அழுக்கை
அழுது தீருங்கள்...
பழுத்த அழுக்கை
விலகி வாருங்கள்...
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..
எல்லா அழுக்கும் அழுக்கல்ல உள்ளத்தின்
பொல்லா அழுக்கே அழுக்கு!
செ. இராசா



