25/08/2025

ஏங்க ஏங்கன்னே

 

ஏங்க ஏங்கன்னே
எங்கோ போய்ட்டான் - ஏங்க
நீங்கேங்க இங்கே நிக்கிறிங்கோ!
நீங்க நீங்கன்னா
நானும் தானுங்கோ- ஏங்க
நீங்கேங்க கோபப் படுறீங்கோ!

20/08/2025

நாயக் குளிப்பாட்டி

 

நாயக் குளிப்பாட்டி
......நல்லாவே பார்த்தாலும்
வாய அடக்காம
......வைப்பதுபோல்- சாயமுத்தை
நல்லமுத்தாய் பாவித்து
......வா..விருது உண்டென்றால்
சொல்லத்தான் செய்யும்
......தொடர்ந்து!

18/08/2025

பிறந்தநாள் வாழ்த்துகள்

 


ஆகஸ்டு 19ல் பிறந்தநாள் கொண்டாடும் மனைவிக்கு இப்புதிய பாடல் சமர்ப்பணம்.
அன்பான பத்ர காளி
வாலாட்னா மவனே காலி
என்னோட கண்ணில் ராணி
பெண்ணான ஹிட்லரோ நீ
என்னாசை ராட்சசி
தப்புன்னா நோ மெர்ஸி
முன்கோப மாடல் நீ
என்னோட சாயல் நீ
Love you.... Love You...I love you
You Know, I'm No without you
பூவா இருக்குற புயலா மாறுற
பொய்யக் கண்டதும் பொங்கி எழுகுற
அள்ளிக் கொடுக்குற அன்பை விதைக்கிற
தப்பைக் கண்டதும் தள்ளி வைக்கிற
பாரதி கனவுகண்ட பெண்ணே உந்தன் மகிமை
பாடலாப் பாடச்சொன்னா எனக்குத்தானே பெருமை...
லாட்டரி அடிச்சதுபோல் எல்லாம் எனக்கு இருக்கு
அடிநீ பேசலைன்னா பிடிக்குதடி கிறுக்கு
Love you.... Love You...I love you
You Know, I'm No without you

17/08/2025

கோலம்

 

1. *திருப்பாத கோலம்*
அருவ இறைவனின்
அருட் சுவடுகள்
2. *மணைப்பலகை*
மனைக்கைகள் தீட்டிய
மணைப்பலகை.
3. *வேல்*
ஆழ்ந்து - அகன்று - கூர்ந்து நிற்கும் அறிவின் அடையாளம்
வேல்
4. *விளக்கு*
அறியாமை இருள் விலக்கும்
அறிவின் ஒளி விளக்கு
5. *தாம்பூலம்*
அன்பின் வெளிப்பாடு தாம்பூலம்- அதை
உணர்த்தும் வரைகோடு மாக்கோலம்‌.
6. *பூச்செண்டு*
கோல மாக்கொண்டு செய்த
நீள பூச்செண்டு.
7. . *குருவிக்கூடு*
குருவிக் கூட்டில் மான்கள் வாழலாம்
உறவின் கூட்டில் உலகை ஆளலாம்.
8. *கத்தி*
சாணை பிடிக்கக் கூர்மையாகும்
கத்தி!
வானை பிடிக்கத் தேவையாகும்
புத்தி!
9. *கோபுர கலசம்*
கோபுரம் கோலமானால்
கோபாலபுரமும் கும்பிடுபோடும்
10. *சங்கிலி*
மஞ்சள் கவுறும்
தங்கச் சங்கிலியே
மச்சான் அவர் தந்தால்
11. *குட்டிச் சந்தனம்*
மணக்கும் சந்தனமே
மணக்க சம்மதமோ?!
12. *சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா*
விழிகளின் மோதலால்
பேரொளிப் பிரளயமாம்
ஓ.....இதுதான் காதலா?
13. *முடிவில்லாத் தொடர்*
பிரபஞ்சம்போல் முடிவிலி நீ
உன்னையே அறியா அறிவிலி நான்!
14. *ஆனந்தம்*
புறத்தால் வருவதல்ல
அகத்தால் வருவதே ஆனந்தம்
15. *தெப்பக்குளம்*
வரப்புயர நீருயரும்- வரும்
வரவுயர வாழ்வுயரும்!
16. *சூரிய மண்டலம்*
மையநோக்கு விசையிருந்தால் பால்வெளி
பையநோக்கும் விசையிருந்தால் பாழ்விழி
17. *ஐஸ்வர்யம்*
அள்ள அள்ளக் குறையாத
அட்சயப் பாத்திரமே
அன்பிற்கே சாத்தியமே!
18. *அக்னிக்குண்டம்*
ஆம்பலும் சாம்பல்தான்
அக்னியின் வாய்க்குள்ளே...
19. *கேடயம் காக்கும்*
நாக்கும் வாக்கும் மௌனித்தால்
காக்கும் அஃதோர் கேடயமே...
20. *அக்னி நட்சத்திரம்*
நிழலின் அருமை வெயிலால்
வெயிலின் அருமை எதனால்?!
21. *காத்தாடி*
இறக்கை இருந்தாலும்
பறக்க முடியவில்லை
காத்தாடி
22. *பொற்கொடி*
விற்கொடி சேரனுக்காம்
பொற்கொடி மாமனுக்கே...
23. *அணு*
எப்பொருள் எத்தன்மை தாயினும்
அப்பொருள் யாவும் அணு!
24. *மலர்ச்சோலை*
பூங்கா வனமிருந்தால் வண்டுவரும்
ஏங்கா மனமிருந்தால் எல்லாம் வரும்!
25. *மயிலிருகு*
அதெப்படி குட்டி போடும்?!!
அது ஆண் தோகையல்லவா...!!
26. *அலை*
வந்து வந்து போகிறது
கரையேற மனமின்றி...
27. *கோட்டை*
அண்ணனென்ன தம்பியென்ன
அதிகாரக் கோட்டை முன்னே..?!!
28. *மேகம்*
கருத்துவிட்டதாம்
கண்ணீர்பொழியும்
கார்முகில்!
29. *அலங்காரப் பந்தல்*
அழகைக் கூட்டும் அலங்காரம்
அதனைக் காட்டும் அருங்கோலம்
28. *பூங்குருவி*
குயிலப் புடிச்சுக் கோலம் வரைஞ்சு
கூவச் சொல்லுகிற உலகம்!
29. *கொடிமலர்*
கொடியில் பூத்த மலரை
தரையில் வார்த்ததாரோ?
30. *பூவிதழ்*
வண்டுகள் வந்திறங்கும் தளவாடம்
ஜந்துகள் மனதையது களவாடும்
31. *Welcome*
அகத்தின் உணர்வு
எழுத்தில் தெரியும்
32. *கிரீடம்*
தலைக் கவசம்
உயிர்க் கலசம்
33. *குத்துவிளக்கு*
ஒற்றைக் காலில் நின்றபடி
ஒளித்தவம் புரிகிறது
குத்துவிளக்கு
34. *ராஜரதம்*
மனக்குதிரை பூட்டி
யாரும் வலம்வரலாம்
ராஜாபோல்....
35. *தொங்கு விளக்கு*
ஒளியாடும் ஊஞ்சல்
36. *அரண்மனை*
தமிழில் சுந்தர் சி.க்கு பிடித்த வார்த்தை.
37. *இதய மலர்*
நான்கிதழ் கொண்ட
சிவப்பு மலர்....
38. *அலங்காரச் சட்டம்*
தச்சனின் மா கவிதை
39. *நட்பு*
இருந்தால் இனிப்பு
பிரிந்தால் கசப்பு
உணவிலிடும் உப்பு நட்பு
40. *ஒற்றுமை*
பலம் என்ற சொல்லின் மாற்றுச்சொல்
41. *நான்கு வாயில்*
திசைக்கொரு வரவேற்பு
42. *விநாயகர் மண்டபம்*
கணபதியின் கவியரங்க மேடை
43. *பறவை*
விசா தேவையில்லா
உலகப் பிரஜை
44. *வைரம்*
கரியும் வைரமாகும்
காத்திருந்தால்...
45. *ராஜம்*
அழகிய திருமகள்
46. *அமைதி கோட்டை*
ஆர்ப்பாட்டமில்லா கோட்டை
47. *மேஜிக்*
கண்கவர் வித்தை
48. *நெத்திச்சூடி*
வகுடில் ஆடும் தோரணம்
49. *நாட்டியம்*
பரதக் கலையின் உச்சம்
50. *கம்பீரம்*
தமிழ்ச் செருக்கு
51. *தும்பி*
உலங்கு வானூர்தியின்
உயிரியல் உவமை
52. *காளை*
ஏறு தழுவுதல்தான் எத்தனை அழகு
அடங்குவதும் காளை
அடக்குவதும் காளை...
53. *தீபாராதனை*
ஒளியை ஒளியால் காட்டும் உன்னதம்
54. *தேன்மலர்*
தேனீக்கள் தேடும் காதல் மலர்*
55. *மின்னல்*
மழை நாட்டியம் பார்க்க
ஒளியடிப்பது யாரோ?!
56. *சுருள்*
பால்வீதி வளையத்தைப்
பறைசாற்றும் ஓவியம்
57. *ஆலவட்டம்*
இறைவனுக்கே வியர்த்தால்
என்னதான் செய்வதோ?!!
58. *சந்திர மாலை*
நிலாவின் ஒளியில்
உலாவும் பொழுது
59. *சிம்மாசனம்*
அரசனின் உயரம்
அரியணை கூறும்
60. *விருந்து*
அன்பின் வெளிப்பாடு
விருந்தே வழிபாடு
61. *மலர்க்குடை*
குடைக்குள் மலருண்டு
மலரால் குடையுண்டோ???
62. *மங்கலம்*
மனமது செம்மையானால்
தொடுவதெல்லாம் மங்கலமே!
63. *வைரக் கம்மல்*
காதோரக் கவிதையா உன் கம்மல்?!
64. *வெண்சங்குத்தேர்*
வெண் சங்குத் தேர்- மனக்
கண்கொண்டு பார்- மனம்
உண்டென்றால் பார்!
65. *மலர் ஊஞ்சல்*
களைப்பைக் களைந்து
தலையை வருடும் மடி
மலர் ஊஞ்சல்.
66. *நவரத்தினம்*
ஒன்பதையும் தாங்கும்
ஓவியத் தங்கம்.
67. *மத்தாப்பூ*
மண்ணிலே பத்தவைக்க
விண்ணிலே விரியும் பூ
68. *சரவிளக்கு*
ஒற்றுமையை வலியுறுத்தும் ஒருவிளக்கு
ஒற்றை ஒளிபரப்பும் சரவிளக்கு!
69. *மகுடம்*
சூடுவதல்ல
சூட்டப்படுவது!

15/08/2025

விதை போடு

 

பலகாலமாய் பலபேர்களால்
......பறிபோனது நாடு!
பலபேருயிர் பறிபோகியும்
.......பதிவேற்றிடா ஏடு!
சிலபேர்களின் திறனால்பலர்
.......விழித்தாரதைப் பாடு!
பலபேர்க்கதை முடிந்தாலதை
.......பகிர்ந்தேவிதை போடு!

12/08/2025

ஏற்புடையோர் ஏற்றிவிட்டால்

 

ஏற்புடையோர் ஏற்றிவிட்டால்.
.......ஏறிடுவர் என்றறிவோர்
ஏற்றிவிட ஏற்பதில்லை
.......என்றாலும்- ஏற்றிடுமே
ஏற்பவரை என்றேனும்
.......இவ்வியற்கை என்றறிந்தோர்
ஏற்பீரோ இக்கூற்றை
.......இன்று!

வெற்றி விக்டர்தாஸ்

 

அற்புதம் கொண்ட
.......அரிமாவே! ஆத்மாவே!
கற்பனைக் கெட்டா
.......கவிக்கோவே!- சொற்கோவே
நற்றமிழ் கொட்டிடும்
.......நற்குருவே! சற்குருவே!
வெற்றிவிக்டர் தாஸ்தரு
......வே
வாழுமெங்கள் கம்பன்நீர்!
......வானளவு நண்பன்நீர்
ஆழிவிஞ்சும் அன்பன் நீர்!
......ஆளும்நீர்!- வாழி நீர்!
பொய்யில்லா கானல்நீர்!
......பொய்யென்றால் பொங்கும்நீர்!
மெய்யர்க்கோ என்றும்தேன்
.......நீர்

உடைத்தெறி

 

உடைத்தெறி தீதை உடைத்தறி பாதை
உடை;தரி நன்றாய் உணர்ந்து.

11/08/2025

ஓடிஓடி ஓடிஓடி ......உள்நுழைந்த வீரனே

 


ஓடிஓடி ஓடிஓடி
......உள்நுழைந்த வீரனே!
ஊடிஊடி அண்டமூடி
......உட்கலந்த தீரனே!
ஆடிஆடி ஆனதோடி
......ஐயிரண்டு திங்களே!
வாடிவாசல் நாடிநாடி
......வந்ததுந்தன் விந்தையே!

10/08/2025

புதிதாகவேப் பிறந்தோமென

 

புதிதாகவேப் பிறந்தோமென புயலாயெழு நாளும்!
விதியாயினும் வினையாயினும் விரைவாகவே மாறும்!
அதிகாரமாய்க் குரலேற்றியே அரங்கேறிடும் ஆட்டம்!
அதிவேகமாய் வெறுங்கானலாய் அடிவாங்கியே ஓடும்!
எதிராகவே புதிராகவே எதிர்ப்போர்சிலர் யாரும்
எதிர்தோன்றியே முறையாகவே இணைவாரதைப் பாரும்!
இதிகாசமாய் அதிவாசமாய் இனிதோழமை யாவும்
நதிபோலவே அழகாகவே நடைபோட்டிட வேணும்!

04/08/2025

ஜெயமோகன் அறம்

 

ஜெயமோகன் செய்த
.....சிறப்பான வற்றுள்
வியக்கும் அளவிற்கு
......நி(வி)ற்கும்- உயர்தரநூல்
ஐந்நூறு ரூபாய்
......அதிகம்தான் ஆயினும்
அந்நூல்பேர் என்ன?!
.......அறம்!