நல்லிணக்கம் உண்டேல் நமைவெல்ல யாருண்டோ?
சொல்லி அடித்திடலாம் சூழ்ந்து
(1)
இணக்கமுடன் வாழ இடர்:இடரிப் போகும்
கணம்கணம் வாழ்ந்து கட!
(2)
உடலோ டுயிரென ஒற்றுமையாய்ப் போனால்
கடலும் கடுகளவே காண்!
(3)
தன்னோடு தானே தனியாக நிற்பவர்கள்
என்றைக்கும் போகார் இணைந்து
(4)
உடலுயிர் உள்ளமெலாம் ஓர்கோட்டில் வந்தால்
கடந்திடலாம் இவ்வாழ்வைக் கண்டு
(5)
தெளிவான ஒத்திசைவில் தேனீக்கள் ஆனால்
எளிதாகக் கிட்டும் இலக்கு
(6)
குடும்ப உறவுக்குள் கூடும் இணக்கம்
அடுத்துவெளி போனால் அழகு
(7)
இணக்கமுடன் செய்கின்ற எச்செயலும் வாழ்வில்
வணக்கமிட வைக்கும் மகிழ்ந்து
(8)
சுற்றமும் நட்புமாய் சூழ்ந்திருக்க வாழ்பவர்கள்
பெற்றவரம் நல்லிணக்கப் பேறு
(9)
எல்லா உறவும் உறவல்ல எப்பிணக்கும்
இல்லா உறவே உறவு
(10)
செ. இராசா