07/02/2024

கடன் பத்து ---- குறள் வெண்பாக்கள்



கொடுத்த கடனிருக்கக் கூச்சமே இன்றி
அடுத்த கடன்கேட்பர் ஆங்கு!
(1)

சித்திரை வந்தவுடன் செய்திடுவேன் என்றுரைத்து
நித்திரைக்குப் போவர் விரைந்து!
(2)

குலசாமி சாட்சியென கூறியபின் கூட
அலட்சியமே செய்வார் அறிந்து!
(3)

தந்தாலே கர்ணன் தராவிடில் கஞ்சனென
நிந்திப்போர் நட்பை விடு!
(4)

பணத்தேவை வந்தால் பணிந்துருகும் பேர்பின்
பணம்கேட்டால் போவர் பறந்து!
(5)

இதோஇதோ வென்றே இழுத்தடிக்கும் பேரை
உதாரணமாய் எண்ணி உணர்!
(6)

உதவி புரிவோரும் உண்மையில் இந்நாள்
எதற்கென்று யோசிப்பர் இங்கு?
(7)

சுயநலம் கொண்டவரே சுற்றமென சூழ்ந்தால்
இயல்பறிந்(து) ஆற்றல் இனிது
(8)

பட்டது போதுமென பக்குவாய்ப் போனாலும்
இட்டம்போல் பேசிடுவர் இங்கு!
(9)

பலன்கருதி மட்டும் பழகுகின்ற நட்பை
விலைகொடுத் தேனும் விடு!
(10)

✍️செ. இராசா

No comments: