பேசும் இடத்திலெல்லாம் பேசுகின்ற போதில்தான்
பேசும் உலகமிங்கே.. பேசு!
(1)
பேசும் தருணத்தில் பேசாமல் வீற்றிருப்போர்
பேசுபொருள் ஆவதில்லை..பேசு!
(2)
பேசும் முறையறிந்து பேசுகின்ற மாந்தரையே
பேச விரும்பிடுவர்...பேசு!
(3)
பேசும் கலையறியார் பேசுவதைக் கேட்பது
பேசி வதைசெய்யும் பேச்சு!.
(4)
பேசுவோர் பேச்சைப் பொறுமையாய் உள்வாங்கிப்
பேச எடுபடும்நற் பேச்சு!
(5)
பேசுகின்ற பேச்சைப் பிழையின்றிப் பேசவழி
பேசும்முன் யோசித்துப் பேசு!
(6)
பேசிக் கனலூட்டிப் பின்நாளில் வெல்வதுபோல்
பேசும் பயிற்சியுடன் பேசு!
(7)
பேசும் மொழியில் பிறமொழி சேராமல்
பேசினால் அஃதேநல் பேச்சு
(8)
பேசியே ஏமாற்றும் பேர்களைக் கண்டறிய
பேசத்தான் வேண்டுமிங்குப் பேசு!
(9)
பேசிடும் போதெல்லாம் பேரதிர்வு தோன்றுமெனில்
பேசுவதில் வல்லவன்நீ! பேசு!
(10)
செ. இராசா
12/02/2024
பேசு பத்து ------- குறள் வெண்பாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment