07/11/2023

குறளுரையாடல் --- அந்தாதி உரையாடல்

 


பேரன்பால் வந்த பெருமைக் குறள்வெண்பா
நீரன்பால் காணும் நிறைந்து! 

ஒற்றைப்படை தம்பி 

இரட்டைப்படை அண்ணா

பேரன்புத் தம்பி பிரியமுடன் வேண்டுகிறேன்
நீரன்பு தாரும் நிறைத்து!
(1)

நிறைந்த மனதோடு நிற்கின்ற நீரே
குறைவில்லா பேரன்பின் குன்று!
(2)

குன்றாத நற்றமிழாற் கூடிக் குலவிடுவோம்
வென்றாள வேண்டும் விசும்பு!
(3)

விசும்பை அடையத்தான் வேண்டுகிறார்; யார்க்கும்
பொசுக்கென்று கிட்டிடுமோ பொன்!
(4)

பொன்கிட்டும் போதும் பொருள்கிட்டும் போதிலும்பா
முன்கிட்டு மாறு முனை!
(5)

முனையொடிந்த கத்தியினால் மோதுவதும் தப்பு
தனைமறந்(து) ஆடுவதும் தப்பு!
(6)

தப்புத் தவிர்த்துயரத் தாம்கற்போம் இன்னும்யாம்
இப்புவியில் வாழ்வோம் இனிது!
(7)

இனிது நடந்தேற ஏகனை வேண்ட
பனிபோல் விலகும் பயம்!
(8)

பயம்விடுத்துக் கற்போம் பலவகைநற் பாக்கள்
சுயம்விடுத்தால் ஏது சுகம்?
(9)

சுகமாக உள்ளதென சும்மா இருந்தால்
அகத்தினுள் போகும் அழுக்கு!
(10)

அழுக்கை அகற்றும் அறிவை வளர்ப்போம்
இழுக்கைத் தவிர்க்கும் இது!
(11)

இதுதான் சரியென எண்ணிடும் போக்கால்
எதுதான் சரியோ இயம்பு?
(12)

இயம்பும் எவையும் எழிலாய் இருத்திச்
சுயம்பாய் ஒளிர்வோம் சுடர்!
(13)

சுடரொளி பட்டவுடன் சுற்றத்தைக் காட்டி
இடம்விட்டு நீங்கும் இருள்!
(14)

இருள்நீக்கி எங்கள் இயலாக்கி நிற்போம்
அருள்தூக்கி ஈவான் அவன்!
(15)

அவனருள் இல்லாமல் ஆவதுதான் என்ன?!
அவனை அவனால் அறி!
(16)

அறியத் தருவதுவும் அண்ணல் செயலே
நெறியைப் புரிந்தால் நிறைவு!
(17)

நிறைவான வாழ்க்கை நிறைகாண கிட்டும்
குறைகண்டால் போகும் குறைந்து!
(18)

குறைந்து துயர்போகக் கூடும் மகிழ்ச்சி
நிறைந்து நிலம்வாழ்க நீர்! -
(19)

நீரன்பைக் காட்டுவதில் வீமனையும் விஞ்சியநல்
பேரன்பால் தாமுனக்குப் பேர்!
(20)

✍️தம்பி வைர.வசீகரன் உடன்
அண்ணா

No comments: