29/04/2023

பறையும் எதிர்ப்பும்




என்னதான் நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி #பறை என்று பறை சாற்றினாலும், அனைத்துத் தமிழ் கலாச்சார நிகழ்வுகளிலும் அதைத் தொடர்ந்து வாசித்தாலும் இன்னும் பறைமேல் உள்ள எதிர்மறைக் கருத்துகள் மறைந்தபாடில்லை என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் உறவுகளே....

தற்சமயம் #பறையை சாவுக்கு வாசிப்பதில்லை என்றே சபதம் எடுத்துத்தான் அனைவரிடத்திலும் சொல்லிக் கொடுக்கின்றார்கள் என்றாலும் அக்கருவியையும் அந்த இசையையும் தவறாகக் கருதும் மனப்போக்கு இன்னும் இருப்பதை மாற்றும் விதமாகத்தான் நான் அதைப் முடிந்தவரை பயன்படுத்த முயல்கிறேன் உறவுகளே....

#தப்பு #கொட்டு என்று எதிர்மறைச் சொற்களால் அழைக்கப்படும் இப்பறையானது மாட்டுத்தோலால் செய்யப்பட்டுள்ளது என்று வாதம் வைக்கும் அன்புச் சகோதரர்களே, மத்தளம், மிருதங்கம், தபேலா......எல்லாம் மனிதரின் தோலிலா செய்யப்படுகிறது? அதுவும் மாட்டுத்தோலில்தான் செய்யப்படுகிறது. பிறகு அவைகள்மட்டும் எப்படி கோவிலுக்குள் செல்கிறது?! (யோசியுங்கள்)

அட... எனக்கு நேற்று ஒரு நண்பர் நரம்புக் கருவி பற்றி பாடம் எடுக்கிறார் பாருங்கள்.... அப்பப்பா வியந்து போனேன் போங்க. அதெல்லாம் ஏன்?...பறையைத் தூக்கி வைத்துவிட்டு அதைப்போய் படிக்கவாம். உறவுகளில்கூட சிலர் இதை இன்னும் அமங்கலக் கருவியாகப் பார்ப்பதையும் அறிவேன். ஆகா.... இதெல்லாம் எப்படி இவ்வளவு ஆழமாகப் பதிந்தது?!!

ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்கிறேன் உறவுகளே... கத்தாரில் ஓர் தமிழ் நிகழ்வின்போது பறை வாசித்துக் கொண்டிருந்தார்கள்‌. அச்சமயம் ஊரில் இருந்துவந்த ஒரு பையனை அந்நிகழ்விற்கு அழைத்துச் சென்றிருந்தேன். பறையிசை கேட்ட அந்த நிமிடமே அவன் உள்ளே வரத்தயங்கினான். என்னவென்று விசாரித்தபோது, அது என்னவோ ஒரு அருவருப்பாக உள்ளதென்றான். புரிகிறதா?!..

ஆதித்தமிழன் வாசித்த பறையை ஒரு சாதியக் கருவியாக மாற்றியதால் ஏற்பட்ட விளைவும் அதன் தாக்கமும் இன்னமும் மாறவில்லை என்பதை நாம் எப்போது உணரப்போகின்றோம்?!

நான் பறையிசை பற்றி எழுதிய ஓர் பாடலில் பறையின் வகைகளை இப்படி அடுக்கியிருப்பேன்...

குறிஞ்சிப்பறை முல்லைப்பறை
மருதப்பறை நெய்தல்பறை பாலைப்பறை
அரிப்பறை ஆறெறிப்பறை
வெற்றிப்பறை வெறியாட்டுப்பறை
வெருப்பறை வெட்டியான்பறை
குரும்பறை குறவைப்பறை
கோட்பறை கொடுகொட்டிப்பறை
சாப்பறை சாக்காட்டுப்பறை
தலைப்பறை தமுக்குப்பறை
தொண்டகப்பறை சூசிகப்பறை
பம்பைப்பறை பன்றிப்பறை

திடும் திண்டிமம் தண்ணம் தம்பட்டம்
தக்கை தப்பட்டை திமிலை படலை
முரசம் நசாளம் பண்டார மேளம்
தக்களி மத்தளி கரடிகை தாளம் காகளம் வீராணம்‌........

இத்தனை வகைப் பறைகள் ஏன் வாசித்தனர் என்று தெரியுமா?!... அதற்குப் பின்னணியில் உள்ள ஜீவகாருண்யம்/ இசை ரகசியங்கள்/ மருத்துவ குறிப்புகளைப் படித்துப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள்....நாம் இழந்த பறையிசையை இன்னும் ஒதுக்கி வைக்க வேண்டுமா இல்லை ஒவ்வொரு வீட்டிலும் வைத்துப் போற்ற வேண்டுமா என்று.....

இப்படிக்கு,

✍️செ. இராசா

No comments: