#கோபம்
கோபத்தின் உச்சத்தில் கொட்டுகின்ற வார்த்தைகள்
தூபமாய் சூழும் தொடர்ந்து
(1)
ஆத்திரத்தில் செய்கின்ற அத்தனை செய்கையும்
நேத்திரத்தை மூடும்; நினை!
(2)
மற்றவர்கள் செய்யும் மடத்தனச் செய்கைக்குக்
தற்கொலையா தீர்வு? தவிர்!
(3)
கோபமும் தீயும் குணத்தால் உறவைப்போல்
ஆபத்தாய் மாறலாம் ஆய்!
(4)
இதயத்தின் வேகம் இதமின்றி ஓடி
சிதைந்துவிடச் செய்யும் சினம்
(5)
சினமென்னும் தீயை சிதைத்திட வேண்டின்
மனதிற்குள் அன்புநீர் ஊற்று
(6)
சாதுவே கோபமுற்றால் சாமான்யன் என்னாவான்?!
தீதுதரும் கோபம் தவிர்!
(7)
கள்ளைப்போல் கோபமும் கைகால் தடுமாற
உள்ளிருந்தே வைக்கும் உணர்!
(8)
கோபமெனும் நஞ்சைக் குறைவாகக் கொண்டாலும்
ஆபத்தாய் மாறும் அது!
(9)
வெகுளியை விட்டால் விரையமாய்ப் போய்நற்
தகுதியின்றிப் போகும் தவம்!
(10)
செ. இராசா
13/04/2023
கோபம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment