ஒரு_நீண்ட_அத்தியாயம்_முடிவுக்கு_வருகிறது
கத்தாரில்_நான்
ஏற்கனவே அஸ்ஸாமில்_நான்
என்ற ஒரு நூல் வெளியீடு செய்திருந்தேன். அதில் என் பள்ளி மற்றும் கல்லூரி
பருவம்தொட்டு சென்னை மற்றும் அஸ்ஸாமில் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட
சுவாரஸ்யமான விடயங்களை தொகுத்து வழங்கி இருந்தேன். அதில் நான் கத்தார் வந்த
வருடமான 2006 வரைக்கும் பதிவாகி இருந்தது. அதனை முகநூலில் தொடராக
எழுதியபோதே அனைவரும் அடுத்தென்ன அடுத்தென்ன என்று ஆர்வமாக கேட்டார்கள்.
சரி..... விட்ட இடத்திலிருந்து அடுத்த கட்டுரைகளை ஆரம்பிக்கலாமா என்று
யோசிக்கின்ற கட்டம் வந்துவிட்டதாகவே உணர்கிறேன்.
முதல் நூலில் முதல் 25 வருட சுவாரஸ்யமாக அனுபவங்களை தொகுத்திருந்தேன். இப்போது, கத்தாரில்_நான்
என்ற பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடங்கலாமா என்று யோசிக்கிறேன்.
பொதுவாக, இடம் பெயர்தல் ஆனபிறகுதான் இருந்த இடத்தைப்பற்றி சுதந்திரமாக எழுத
முடியும் என்பது திண்ணம். ஏறக்குறைய, அதற்கான சூழல் வந்துவிட்டதாகவே
உணர்கிறேன். ஆம், இந்த வருடத்தோடு பிள்ளைகளின் படிப்பை மனதில் கொண்டும்,
ஸ்திரமற்ற பணியை மனதில் கொண்டும் இடம் பெயர்தலை நோக்கி உந்தப்பட்டுள்ளேன்
என்றே சொல்லலாம்.
அடுத்து எனக்கான அத்தியாயம் என்பது உள்நாட்டிலா?
வெளி நாட்டிலா? இதே நிறுவனத்திலா? அடுத்த நிறுவனத்திலா?....இப்படி எதுவும்
தெரியாமல், பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி எடுக்கும் சில அவசர முடிவுகள்
என்பது கசப்பாக இருந்தாலும் காலத்தின் கைகளில் அதைக் கொடுத்து விட்டு
இடம்பெயர்தல் என்னும் முடிவை எடுக்கத்தான் வேண்டியுள்ளது. காரணம், உலக
அளவிலான பொருளாதாரப் போட்டியில், வேலை எடுக்கும் ஒப்பந்தக்காரர்களின் விலை
குறைந்து கொண்டே போவதால், பெரிய சிறிய என அனைத்து நிறுவனங்களுமே
தடுமாறுகின்றன. ஆள் குறைப்பு, சலுகைக் குறைப்பு, ஊதியக் குறைப்பு, தற்காலிக
அல்லது நீண்ட கால கட்டாய விடுப்பு......என எல்லாமும் மாறிக்கொண்டே
வருகிறது.
இப்பேர்பட்ட உலகத்தில் நாமும் நம் பிள்ளைகளை அவர்களின் தொடர் ஓட்டத்திற்கு தயார் படுத்த வேண்டாமா? (என்ன செய்வது பிறந்து விட்டோமே?)
2006இல்
ஒரு வருடம் இருந்தால் போதும் என்று கத்தார் வந்த எனக்கு, இன்றுவரை
உணவளித்து, அப்பாவின் கடனடைத்து, திருமணம் செய்வித்து, இரண்டு
பிள்ளைகளையும் இங்கேயே பிரசவிக்க வைத்து, இரண்டு வீடுகள் கட்ட வைத்து, இது
நாள் வரையிலும் எமக்கும் எம்மைச் சார்ந்த அனைவருக்கும் வாழ்வளித்த மற்றும்
வாழ்வளித்துக் கொண்டிருக்கும் கத்தார் நாட்டிற்கு எம் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக்கொண்டு இங்கே ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை எழுத
ஆயத்தமாகிறேன்...பார்ப்போம்!
இறைவன் அருள் புரிந்தால் தொடரும்.....
செ. இராசா
No comments:
Post a Comment