உங்களிடம் ஒருவர் ஓடோடிவந்து
நான் உங்கள் விசிறி என்றால்
உண்மையில் எப்படி இருக்கும்?
குளுகுளு என்றிருக்காதா?
அதனால்தான் என்னவோ
விசிறி என்ற பெயரை
இரசிகனுக்கும் வைத்தார்கள்போல...
யோசித்துப் பாருங்கள்...
இந்த விசிறி இல்லாத இடம்
ஏதேனும் உண்டா?
விமானமோ ஹெலிகாப்டரோ...
கப்பலோ கணினியோ..
ஏசியோ... ஃபிரிட்ஜோ..
விசிறியின் பங்களிப்பு
வியக்க வைக்கிறதல்லவா?!
உண்மையில்
இந்த விசிறி என்ற சொல்
சங்க இலக்கியத்தில்
நேரடியாக இல்லைதான்
ஆனால்
பாவிக்கப்பட்ட சான்றுகள்
பலவாறு உள்ளனவே....
நெடுநல்வாடையில் ஓர் இடம்;
கவின் பெறப் புனைந்த
சேங்கழ் வட்டம் என்கின்ற விசிறி
சிலந்தி கட்டிக் கிடந்ததாம்....
அதேபோல் புறநானூற்றில் ஓர் இடம்;
மோசிகீரனார் என்னும் ஏழைப்புலவனுக்கு
சேரமான் பெருஞ்சேரல் விசிறி விட்டானாம்
அதுவும் எப்படி?
"தண்ணென வீசியோயே" என்றால்
குளிர்தர வீசினாயோ என்கின்றான்...
இப்படி வீசும் விசிறிகள்தான்
எத்தனை வகைகள்?
பனையோலை விசிறி
தென்னை மட்டை விசிறி
மடக்கு விசிறி
மயில் விசிறியென இருந்து
பிளாஸ்டிக் விசிறி
மின் விசிறியென
விசிறிகள்தான் எத்தனை எத்தனை.?!
ஒன்று தெரியுமா உங்களுக்கு...?!
சொளகை விசிறியாக்கி தூற்றியது
நாம் மட்டும் இல்லை....
இயேசுவும்தான்....
ஆம்...
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது
பதரை விளக்கி களஞ்சியம் சேர்ப்பார் என்று
இயேசுவைக் கைகாட்டினாரே
திருமுழுக்கு யோவான்...
எனில் இந்த விசிறியின் முக்கியத்துவம் பாரிர்.
ராஜாக்கள் காலம் முதல்
ஆங்கிலேயர் காலம் வரை
இந்த விசிறியை சாமரம்போட்டு விசிறத்தான்
எத்தனை எத்தனை ஆட்கள்?!
அட..
ஆண்டவர்க்கு மட்டுமா விசிறிகள்?!
ஆண்டவர்க்கே விசிறிகள் உண்டே...
விஞ்ஞான வரவால்
மின்விசிறி வந்ததும்
அடிமைமுறை பங்கா வாலாக்கள்
முற்றிலும் ஒழுந்தது மகிழ்ச்சிதான்
ஆனால்....
விசிறிகளும் விடைபெற்றுப் போனதே...!!!
தயவுகூர்ந்து...
குளிரூட்டி அறை விடுத்து
கொஞ்சம் வெளியே வாருங்கள்...
அடடே....
நமக்காகவே விசிறிவிட
இதோ சில மரங்கள் இன்னும்....
செ. இராசா
17/01/2023
விசிறி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment