31/12/2022

நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா? (ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரி)

 


(அந்தக் காலத்தில டாட்டா பிர்லா மாதிரி உள்ள பணக்காரங்களும், சாதியில் உயர்ந்த சாதின்னு சொல்றவுங்களுந்தான் படிக்க முடிஞ்சது. அதை மாத்துறதுக்குத்தான் திமுக உருவானது. அப்படி மாறி வந்த வரலாற்றை ஒரு சாதாரண தொண்டனின் மனநிலையில் பாடப்பட்ட பாடல் இது)
 
மெட்டு: ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரி
 
பல்லவி
 
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா....
நான் டாடா பிர்லாவோட ஆளாயா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
 
சரணம்-1
 
அண்ணாவால் அன்றைக்கு எல்லோரும் ஒன்றாக
கழகம் பிறந்திடுச்சே
அச்சாரம் போட்டாரு ஈவெரா பெரியாரு
அவரு நம்மூரு'"சே"
பிடிச்ச முயலுக்கு
மூனுகாலு என்பதுபோல்
மனித உறவுக்குள்
சாதிசொல்லி தீ வைக்க
நீரென திராவிட முன்னேற்றக் கழகம்
தீமையைப் பொசுக்கி சரித்திரம்படைச்சது..
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா
 
சரணம்-2 
 
நான் போறேன் முன்னால
நீ வாயா பின்னால
மெரினா கடற்கரைக்கு....
சொல்லாம சொன்னாரோ அண்ணாவும் அந்நாளில்
கலைஞர் ஐயாவுக்கு....
அடிச்ச அடியெல்லாம்
சிக்சரென செதருச்சு....
சிங்க நடைகண்டு
டெல்லிகூட பதறுச்சு....
எழுதும் வேகத்தில் எதிரிகள் அலற
வாழ்ந்தவரை அவர வெல்ல முடியல...
 
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
ஹா ஆஅ ஆஅ
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
 
✍️செ. இராசா

தலைவரோட குணம் பாருங்கள் (இறைவனிடம் கையேந்துங்கள்)

 


தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
எவரிடமும் கேட்டுப் பாருங்கள்
அவர் சொன்னசொல்லைத் தவறுவதில்லை
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
சொல்லை வீசி ஆளும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத தலைமை ஆனவன்...
இன்னல் பட்டு அழும் முன்னே அங்குநிற்பவன்
ஏழைகளை வறியவரை பார்க்கின்றவன்...
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
திராவிடத்தை காப்பதற்குத் தன்னைத்தந்தவன்
ஆசை மாயை கொண்டவரைத் தள்ளிவைப்பவன்
பாசிசத்தை ஒன்றுமின்றி வேரறுப்பவன்
பாவிகளை உண்மையினால் மாய்க்கின்றவன்...
தொல்லைதரும் கயவர்கண்டு அசராதீர்கள்
அண்ணாதந்த பேரியக்கம் நம்பி நில்லுங்கள்
கலைஞர்போட்ட பாதையினைப் பற்றிச் செல்லுங்கள்
அன்புகாட்டும் தளபதியைப் நம்பிச் செல்லுங்கள்
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
தப்பு செய்ய நினைப்பவர்க்கு நஞ்சானவன்
கேடான மனிதருக்குத் தீயானவன்
சாடும் எதிரி திருந்திவிட்டால் தாயானவன்
நேர்மையோடு யாவரையும் நடத்துகின்றவன்
வலைவிரிக்கும் சிலர் வலையில் விழுகாதவன்
தலைவனாகி கோட்டை ஏறி ஆட்சி செய்வன்
உடன்பிறப்பாய் நம்மையெண்ணி ஓடி வருபவன்
கடமை எண்ணிக் கலைஞர் தந்த மஹா வல்லவன்.....
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
✍️செ. இராசா



29/12/2022

சுட்டுவச்ச மீனென்றால்

 


சுட்டுவச்ச மீனென்றால் சும்மா விடுவேனா?
பட்டுனு கிள்ளிப் படக்குனு- பிட்டெடுத்து
குப்பூசக்* கொண்டுவந்து கூட்டணி வச்சபடி
அப்படியே தள்ளுவேன் அஞ்சு!
 
(குப்பூஸ்- அரேபிய ரொட்டி) 
 
BARBEQ FISH 🐠

28/12/2022

காஃபியை அனுபவிச்சு குடிக்கிறவந்தான்..

 


ஊற்றுகின்ற சப்தத்தை
.... உள்வாங்கிக் கொண்டபடி
காற்று மணம்பரப்ப
....கைகளால்- ஏற்றியதன்
சூட்டை அனுபவித்தே
....சுர்ரென்(று) உறிஞ்சுகின்ற
காட்சியில் ஐம்புலனும்
...காண்!
 
✍️செ. இராசா
 
(காஃபியை அனுபவிச்சு குடிக்கிறவந்தான் இப்படிலாம் யோசிக்க முடியும். நான் கீழே உள்ள விளம்பரத்தைச் சொன்னேன்)

26/12/2022

பற்றிடப் பற்றிட....

பற்றிடப் பற்றிடப் பற்றிடும் பற்றினைப்
பற்றுடன் பார்த்திடப் பற்றிடும்- பற்றுன்னை
பற்றிடும் பற்றுமே பற்றின்றிப் பார்த்திடின்
பற்றுமோ? பற்றாது பற்று

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா

 


தமிழாளுமை தனில்யாரென
.....தமிழ்த்தாயவள் வினவ
தமிழாண்டவர் மகன்நானென
......தளராதிவன் வருவான்!
உமியாகவே உழல்வோர்சிலர்
.....உனையாரென வினவ
தமிழாகவே இருந்தாலுமே
....தயவோடிவன் வருவான்!

கவியாளுமை புரிவோரிலே
.....கடல்யாரென வினவ
கவியாகவே கருவாகியே
.....கலையாகவே வருவான்!
புவிமீதிலே புகழ்நோக்கியே
....புனைவோர்பலர் இருக்க
தவிப்போர்குரல் மொழியாகவே
....தனியாகவே வருவான்!

உரியோரிலே உறவானவர்
.....உடன்யாரென நினைக்க
உரித்தாகவே உயிராகவே
.....உடனோடியே வருவான்!
தெரியாமலே அலைமோதியே
....திசைதேடியே திரிய
குருவாகவே விரைவாகவே
...குறைபோக்கிட வருவான்!

✍️
அண்ணாவின் அடிப்பொடி,
செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா....


ஊக்கமும் ஆக்கமும் ---- ஔவைத் திங்கள்- 22

 #ஊக்கமும்_ஆக்கமும்
#ஔவைத்_திங்கள்_22

ஊக்கமாய்ப் பேசுகின்ற ஒவ்வொரு சொற்களும்
ஆக்கத்தின் வித்தாகும் அங்கு
(1)

நல்லுரம் தந்தபயிர் நன்றாய் விளைவதுபோல்
நல்லூக்கம் செய்விக்கும் நன்று
(2)

ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ஊக்குவிப்போர் தேக்குவிப்பார்
ஊக்கமிகு வாலிசொல் ஓர்ப்பு
(3)

பொன்பொருள் வேண்டாம் புதியவர் மேலெழும்ப
நன்வார்த்தை போதும் நவில்
(4)

தன்னலம் பாராமல் தட்டிக் கொடுப்பவரை
நன்றியுடன் போற்றுமாம் நட்பு
(5)

கலைஞனைத் தூக்கிவிடும் கைதட்டல் ஒன்றே
விலையேதும் இல்லா விருது
(6)

படைப்பவனை ஊக்குவிக்கும் பாராட்டில் தானே
படைப்புகள் தோன்றும் பல
(7)

உன்னால் முடியுமென்ற உள்ளார்ந்த ஊக்கம்தான்
உன்னை உயர்த்தும் உணர்
(8.)

ஆக்கம் குறைந்துவிட்டால் அஃதொன்றும் தப்பில்லை
ஊக்கம் குறையாமல் ஓடு
(9)

உளமார்ந்த நட்பான ஊக்கத்தைக் கொண்டு
வளமான நல்வாழ்வு வாழ்
(10)

✍️செ. இராசா

வாயை அடக்காமல்

 

வாயை அடக்காமல்
.....வச்சுள்ளே தள்ளுபவர்
நோயாளி ஆனபின்
.....நோகின்றார்- நாயைப்போல்
அங்கிங் கெனாதபடி
......ஆனவரை ஓடிவிட்டு
தங்கிடுவார் பாவம்
.......தனித்து!
 
✍️செ. இராசா

25/12/2022

தேவன் வந்தாரே பாடல்

#பல்லவி

தேவன் வந்தாரே.
தேடி வந்தாரே....
ஏகன் வந்தாரே
இறங்கி வந்தாரே...

பாவம் கண்டாரே
பாரம் கண்டாரே
பாசம் கொண்டாரே
பறந்து வந்தாரே....

அன்னை எங்கள் மேரிக்கவர் பிள்ளையானாரே
தந்தை ஏழைத் தச்சருக்கும் தனயன் ஆனாரே
பாவங்களை வேரறுக்க பறந்து வந்தாரே
பாமரர்கள் துன்பம்போக்க பிறந்து வந்தாரே

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas

#சரணம்-1

வானமுள்ள காலம்வரை
ஞாலமுள்ள காலம்வரை
ஞானம்தரும் வள்ளளென
வந்த இறைவா....
ஏழையுள்ள காலம்வரை
ஏழ்மையுள்ள நாட்கள்வரை
ஏற்றுமொளி தீபமென
வாரும் இறைவா...

நேசம்கொண்ட மாந்தருக்கு நீங்கள் தானே
.......நீங்கள்தானே....காக்கும் தேவன்.‌
யாரும் இல்லா மாந்தருக்கும் நீங்கள் தானே
.......நீங்கள்தானே தாங்கும் தோழன்...

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas

✍️செ. இராசா

முழுப் பாடலையும் காண கீழே சொடுக்கவும்;

https://youtube.com/watch?v=zpVuugFTmOI&feature=shares

23/12/2022

பழக்கத்துக் கோசரம் பார்க்குறேன் இல்லை

  


(ஒரே படம்தான் வெவ்வேறு காலகட்டங்களில்
மூன்று கவிதைகளைப் பிரசவித்துள்ளது)

தொப்புள் கொடியிலே தூளிகட்டி
தொங்கியே வாழ்ந்த காலத்தைப்போல்
தோரணக் கொடியிலே காகிதமாய்
தொங்கிட வைத்தல் சரிதானா?!!

(டேய் அப்பா... இறக்கிவிடுறா.... முள்ளு குத்துது)

23.12.2018

எப்பப்பா ஏற்றினாய் எப்பநீ சொல்லப்பா
அப்பப்பா அப்பப்பா அப்பாநீ- தப்பப்பா
முள்ளுப்பா முள்ளுப்பா முட்டுதே பாரப்பா
தள்ளுப்பா வேணாம்பா தப்பு!

03.08.2019

பழக்கத்துக் கோசரம் பார்க்குறேன் இல்லை
பழத்துலயா ஏத்துற பாடு- கிழபோல்டு
கீழ இறங்குனேன் கீச்சிறுவேன் பார்த்துக்க
வீழநான் மாட்டேன்டா வெல்ரு!

23.12.2022

✍️செ. இராசா

விக்ரமராஜா ஐயா பாடல்-2 ------ நாகூர் ஹனிபா குரலில்

 



பல்லவி

எத்தனை பேர்களின் சார்பாக
அண்ணாச்சி முன்னே நிற்கின்றார்...
அத்தனை வணிகரின் குரலாக
அண்ணாச்சி அன்றோ முழங்குகின்றார்..

அனைவரும் சரிசமம் தானே
அண்ணாச்சி பார்வையிலே...
ஏழையும் பொழக்கனும்தானே
ஐயாவின் கொள்கையிலே...

நல்லதைக் கொடுக்கனும்
.......அல்லதை ஒதுக்கனும்
நுகர்வதும் நம்மவர் தாங்களே....
அயலவர் ஒதுங்கனும்
.......கயவர்கள் திருந்தனும்
தமிழறம் காப்பவர் நாங்களே...

முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும் 

அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்
 

சரணம்-1

பாரததேசம் பயனுறவேண்டி
பகிர்ந்திட வருவதும் நாங்களே..
மாநிலமெங்கும் பலதடைதாண்டி
வரிகளைத் தருவதும் நாங்களே...

எம்மால் வளர்ச்சி கிடைக்கயிலும்
எமக்கோ வளர்ச்சி கிடைக்கவில்ல
எதனால் தளர்ச்சி அடைகிறோம்?
அதனை உடைக்க முயல்கிறோம்
தலைவர் துணையில் வெல்லுவோம்...
தலைவர் துணையில் வெல்லுவோம்...

முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும் 

அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்
 

சரணம்-2

வாடிக்கையாளர் மகிழ்ந்திட வேண்டி
விலைகளைக் குறைப்பதும் நாங்களே
கோரிக்கையாக அரசிடம் வேண்டி
சலுகையைக் கேட்பதும் நாங்களே...

நாங்கள் அள்ளிக் கொடுக்கயிலும்
நமக்கோ அதுவும் கிடைக்கவில்லை..
பதுக்கல் எதுவும் நடந்தாலும்
அதையும் அடனே தடுக்கின்றோம்...
தலைவர் வழியில் செல்லுவோம்..
தர்மம் நின்றிட வெல்லுவோம்...

முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும் 

அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்

பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும்
வணிகர்கள் கொடியிங்கு பறக்கட்டும்
பிறக்கட்டும் பிறக்கட்டும் பிறக்கட்டும்
நமக்கினி காலம் பிறக்கட்டும்

✍️செ. இராசா

நிக்காஹ் வாழ்த்துப் பாடல்

 




*நிக்காஹ் வாழ்த்துப் பாடல்*
*ஷாகுல் ஹமீது + அஃப்ரோஸ் பானு*
 
பல்லவி
 
ஆண்-1
 
பாசம் நேசம் மிக வாழ்வீரே...
பாவம் நீங்கும் நல்லருள் கிட்டும் துஆக்களாலே...
 
ஆண்-2
 
நபியின் வழியின் படி செல்வீரே...
நாளும் நாளும் நல்லறம் கிட்டும் துஆக்களாலே
 
ஆண்-1 &2:
 
பரக்கத்து செய்வான் அல்லாஹ்
படைத்தவன் அன்றோ அல்லாஹ்
தரத்தரத் தருவான் அல்லாஹ்
தடுப்பவன் யாரோ யல்லாஹ்.....(2)
 
சரணம்-1
 
ஆண்:
 
யாரையும் என்றும் புண்படப் பேசார் அதுதானெங்கள் ஷாகுல்..
சீண்டிடப் பார்க்கும் சிலரையும் கூட
சிரித்தேகடப்பார் ஷாகுல்..
 
பெண்:
 
யாரையும் வீணாய்க் கண்டிட மாட்டாள்
அதுதானெங்கள் அஃப்ரோஸ்....
சீண்டிட எண்ணும் சிலரையும் கூட
சிந்திக்கவைப்பாள் அஃப்ரோஸ்....
 
ஆண்:
 
நல்ல வழியில் நலமுடன் செல்ல நினைப்பவனெங்கள் ஷாகுல்...
செல்லும் முறையில் நேர்மை இருக்க
நினைப்பவனெங்கள் ஷாகுல்...
 
பெண்:
 
அண்ணல் வழியில் அறமுடன் செல்ல
துணையெனவருவாள் அஃப்ரோஸ்....
இல்லம் முழுதும் இறையருள் பெருக
இணையெனவருவாள் அஃப்ரோஸ்....
 
இருவரும்:
 
நன்மறை காட்டும் வழியினிலே
நல்லறம் சிறக்க வாழ்த்திடுவோம்....(2)
 
சரணம்-2
 
ஆண்:
 
உதவிகள் வேண்டி உரைத்திடும் முன்னே உதவிடும் குணவான் ஷாகுல்
உடன்வரும் பெண்ணை உயர்வாய் எண்ணி உயிரென மதிப்பான் ஷாகுல்
 
பெண்:
 
உறவென நாடி வருபவர் கண்டே உதவிட இணைவாள் அஃப்ரோஸ்
உளமுடன் என்றும் கணவரை எண்ணி கடமையில் வருவாள் அஃப்ரோஸ்
 
ஆண்:
 
அகத்தை நோக்கி ஆழம் சென்றால் புரியும் ஷாகுலின் பாசம்
அருகினில் இன்னும் நெருங்கிடும் போதே தெரியும் ஷாகுலின் நேசம்
 
பெண்:
முகத்தை மூடி பார்க்கிற போதும் தெரியும் உண்மையின் வாசம்
சகத்தில் எங்கோ இருக்கிற போதும் கவிக்கும் காதலர் தேசம்..
 
இருவரும்:
 
நன்மறை காட்டும் வழியினிலே
நல்லறம் சிறக்க வாழ்த்திடுவோம்...(2)
 
✍️செ. இராசா

21/12/2022

மெஸ்ஸினா மெர்ஸலு ........மேன்

 


என்னப்பா எம்பாப்பே...
........எப்பூடி (ங்)கொய்யால
சொன்னேன்ல அப்போதே...
.......சோக்காநான்- உன்னான்ட
மெஸ்ஸின்னு சொன்னாக்க
.......மெர்ஸின்னு (Mercy) நின்சியா
மெஸ்ஸினா மெர்ஸலு
........மேன்
 
✍️செ. இராசா
 

20/12/2022

திருப்புமுனை

  


#திருப்புமுனை

நெடுஞ்சாலைகள் எல்லாம்
நேர்கோட்டில் இருந்தாலும்
திருப்புமுனைகள் வந்தால்
திரும்பத்தான் வேண்டும்.....

என்னதான் முக்கிய நாயகரே
முன் வந்து நடித்தாலும்
கதையில் திருப்புமுனை இல்லேல்
யாரும் திரும்பிக்கூட பார்க்க மாட்டர்...

திருப்புமுனைகள்‌‌
திடுதப்பென்று வந்தால்
திடுக்கிட வேண்டாம்...
முடிந்த அத்தியாயத்தில் நின்று
மூச்சுவாங்கிக் கொள்ளுங்கள்
அடுத்த அத்தியாயத்திற்காய்
ஆயத்தமாய் நில்லுங்கள்...

திருப்பு முனைகள்
திருப்பி விடக்கூடியவை...
அவசரம் வேண்டாம்.....
ஒழுங்காய் மடைமாற்றினால்
உச்சத்திற்கும் போகலாம்...

யோசித்துப் பாருங்கள்....

கல்லக்குடி போராட்டம்
கலைஞருக்குத் திருப்புமுனை...
திமுக வெளியேற்றம்
எம்ஜிஆருக்குத் திருப்புமுனை..
ராஜீவ் மரணம்
ஜெயலலிதாவுக்குத் திருப்புமுனை...
ஜெயலலிதா மரணம்
எடப்பாடிக்குத் திருப்புமுனை...

இங்கே....
சில திருப்புமுனைகள் சாதனையாகும்
மெஸ்ஸியின் வெற்றியைப்போல...
சில திருப்புமுனைகள் வேதனையாகும்
காமராஜரின் தோல்வியைப்போல...
சில திருப்புமுனைகள் ரோதனையாகும்
கோவிட் உயிரிழப்புபோல..
சில திருப்புமுனைகள் போதனையாகும்
சென்னைப் பெருவெள்ளம்போல...

திருப்புமுனை என்பது
காலம் பட்டை தீட்டும் உலைக்களம் மட்டுமல்ல
ஞாலம் தன்னைக் காட்டும் சமர்க்களமும்கூட..

அதில் வெற்றி தோல்வியல்ல சுவாரசியம்...
அந்தத் திருப்புமுனையே சுவாரசியம்...

வரட்டும் திருப்புமுனை‌கள்..
வரலாற்றில் கட்டாயம் இடமுண்டு...

✍️செ. இராசா

19/12/2022

 ஔவைத் திங்கள் - 21 (குறுகத் தரித்த குறள்)

 #ஔவைத்_திங்கள்_21
#குறுகத்_தரித்த_குறள்

குறும்பா எழுதியதாய்க் கொக்கரிக்கும் முன்னர்
குறள்பா பயின்றாயா கூறு.
(1)

இரண்டே அடியில் எழுசீரில் வைத்த
தரமும் திறமும்தான் சான்று.
(2)

சொல்லுஞ்சொல் வெல்ல சுருக்கமாய்ச் சொல்லென்று
சொல்லாமல் சொல்லுமோர் நூல்
(3)

அறப்படி ஏறி அதன்படி வாழ்ந்தால்
முறைப்படி கிட்டும் முதல்
(4)

கற்க கசடற கற்பவை யாதென்றால்
கற்றவை எல்லாம் கடுகு
(5)

முப்பாலில் வைத்த முதலாம்பால் நன்கறிந்தால்
தப்பாமல் வாழலாம் தான்
(6)

குறுஞ்செய்தி போலக் குறைவாகச் சொல்லிப்
பெறும்குறள் செய்தி பெரிது
(7)

உள்ளதெல்லாம் கற்க ஒருபிறவி போதாது
வள்ளுவம்தான் மாற்று வழி
(8.)

காதல் கவியையும் கச்சிதமாய்க் கட்டியதால்
காதலர்க்கும் கூட்டும் களிப்பு
(9)

படிக்கப் படிக்கப் பலன்தரும் நூலை
படித்தபடி ஏறு படி
(10)

✍️செ. இராசா

13/12/2022

கண்ணாலயே கவ்விடும் பெண்ணே

கண்ணாலயே கவ்விடும் பெண்ணே

உன்னாலயே உருகுறேன் நானே...

சொல்லாமலே சொல்லிடும் பெண்ணே

நில்லாமலே பறக்குறேன் தானே..

புனைப்பெயர் சூட்டிக் கொள்ளத்தான் வேண்டுமா...!?

 


எழுத்தாளர்கள், கவிஞர்கள் கண்டிப்பாக புனைப்பெயர் சூட்டிக் கொள்ளத்தான் வேண்டுமா...!?
 
படைப்பாளியைவிட
படைப்புதான் தெரிய வேண்டும்
என்று நினைத்த காலத்தில் பெயரை வெளிக்காட்டாமல் புனைப்பெயரில் எழுதினார்கள். (அப்படியிருந்தும் வாசகர்கள் எழுத்து நடையை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள் என்பது வேறு)
 
இப்போது தனக்குத்தானே சூட்டுவது புனைப்பெயரல்ல பட்டப்பெயர்கள்.... காரணம் பெயருக்கு முன்னால் இவர்களே போட்டுக்கொள்(ல்)வதால்.... கண்டிப்பாக இது அசிங்கம் மட்டுமல்ல அநாகரிகமும்கூட...
யாராவது தன்னைத் தானே Mr...... என்று சொல்லிக் கொள்வார்களா? அப்படித்தான் இந்தப் பட்டங்களும். ஆனால், இதையெல்லாம் சொன்னாலும் பலரும் ஏற்பதில்லை. அவர்களின் எழுத்தின் தரமும் ஏற்றம் பெறுவதில்லை.
என்ன சரிதானே உறவுகளே.....?!!
 
✍️செ. இராசா

12/12/2022

விளக்குமாறு

 


விளங்காத தம்பி ஒருவன்
விளக்குமாறு பற்றி
விளக்குமாறு கேட்டதால் இங்கே
விளக்க விழைகிறேன்...
விளங்கினால் சொல்லுங்கள்
விளங்காவிடில் தள்ளுங்கள்....
 
அழுக்கையும் குப்பையையும்
அள்ளிப் பெருக்கி
அசுத்தத்தை சுத்தமாக்கும்
அற்புத சாதனமே இந்த விளக்குமாறு!
 
என்னதான் ....
இயந்திரங்கள் வந்தாலும்
இங்கே...விளக்குமாறுபோல்
வேறு பொருள் கைகொடுப்பதில்லை...
 
தென்னை ஈச்சமெல்லாம் போய்
நெகிழி விளக்கமாறுகள் வந்தாலும்
விளக்கமாறே இல்லாமல்
வீடும் சுத்தமாவதில்லை‌‌
வீதியும் சுத்தமாவதில்லை‌‌...
 
எங்கள் இல்லத்தரசிகளின்
மூன்றாம் கையாக
இல்லை இல்லை....
எங்கள் இல்லத்தரசர்களின்
மூன்றாம் கையாக....
கூட்ட மட்டுமல்ல..
தாக்கவும் பயன்படுகிறது...
 
நறநறவென்று
பல்லைக் கடித்தவாறே....
விளக்குமாறு பிஞ்சு போகுமென்றால்; 
அது வெறும் வருத்ததில் வரும் வார்த்தையல்ல
அடித்தே பிஞ்சுபோகுமென்ற
இடக்கரடக்கல் வாக்கியமே அது...
 
இங்கே விளக்கமாறுகள் எல்லாம்
வீட்டைக் கூட்ட மட்டும் அல்ல...
சில சமயங்களில்
நாட்டையும் கூட்டத்தான்..
என்ன அதற்கு
நிறைய கெஜ்ரிவால்கள் வேண்டும்...
குஜிலி வால்கள் அல்ல..‌
 
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..
 
மூலைக் கழிவையும்
மூளைக் கழிவையும்
விளக்கமாற்றால்தான்
விலக்க முடியும்....
 
ஆம்‌...
விளக்க(மான)மாற்றால்தான்
விலக்க முடியும்....
விளங்கினால் சரி!
 
✍️செ. இராசா

துக்குத்துக்கு

 

உலகக்கோப்பையைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த பாடல் இது....கேட்ட தருணம் முதல் எம்மை ஏதோ செய்கின்றது. அதில் வரும் #துக்குத்துக்கு என்ற வார்த்தையைக் கேட்டபோது #காளமேகக்கவிஞர் பாடிய #தத்தித்தா வெண்பா தான் ஞாபகம் வந்தது......
 
அந்த #துக்குத்துக்கு பகுதிக்கு மட்டும் நான் எழுதிய வரிகள் கீழே.....
 
 
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலாட்டம்- அட
போறாடா அவ போறாடா..
சட்டுபுட்டு சட்டுபுட்டு புயலாட்டம்- அட
வாறாடா அவ வாறாடா..
துக்குதுக்கு துக்குதுக்கு உடலாட்டம்- தரும்
தூதோடா அது தூதோடா...?!
சிக்கிகிட்ட சிக்கிகிட்ட உயிரோட்டம்- இது
தானோடா இது தானோடா...?!
 
✍️செ. இராசா

சின்னஞ் சிறிய வயதில்

 


சின்னஞ் சிறிய வயதில் எம்மை அறியாமலேயே சில பாடல்களை எழுதிப் பாடியுள்ளேன். அது ஏனோ திடீரென்று ஞாபகம் வந்தது. அதையே இங்குப் பதிவு செய்கிறேன்.
 
எனக்கு நிறைய அத்தைகள் இருந்ததால், அத்தை மகள்களுக்கும் பஞ்சமில்லை. அப்படி ஒரு அத்தை மகளுக்காகப் பாடிய பாடல்தான் இது..... உண்மையில் இதை எழுதவெல்லாம் இல்லை. நானும் என் தம்பிகளும் சேர்ந்து பாடுவோம். உண்மையில் இதை யார் முதலில் பாடினர் என்ற ஞாபகம் கூட இல்லை. இருந்தாலும் நானே ஞாபகம் வைத்துள்ளதால் நானாகத் தான் இருப்பேன் என்கிற ரீதியில் உரிமை கோருகிறேன்...😅😅😅. இவ்வளவு பெரிதாக சொன்னாலும் பாடல் வெறும் நான்கு வரிகள்தாங்க.....இதுக்குத்தானா இவ்வளவு பில்டப்பு....ம்ம்..சரி பாட்டைப் பாருங்க.
 
ஜானகிக் குட்டி
சவுக்காரக் கட்டி
கோதுமை ரொட்டி
கொண்டுவாடி குட்டி 
 
*சவுக்காரக் கட்டி என்பது சோப்பு
 
பாட்டு அவ்வளவு தாங்க....அடச்சே வெறும் நான்கு வரிகள்தானா.... அவ்வளவுதான்!
 
இதேபோல் என் ஊரைப்பற்றி ஒரு பாடல் அப்போதே எழுதிப் பாடியுள்ளேன். இது சத்தியமா நானே எழுதுனதுதாங்க. எட்டாவது படிக்கும்போது வந்த விஜயலெக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் பாடலின் ராகமென்று நினைக்கிறேன். 
ஆம்...அதேதான்...
 
தானானே தானனே
தானானே தானனனே
தானானே தானனே
தானானே தானனனே
 
என் ஊரு அம்மன்பட்டி
அதுக்குப் பக்கம் நகரம்பட்டி
பக்கத்துல வீழனேரி
அதுக்குப்பக்கம் அழகாபுரி
 
நீயும் வந்து பாரு- எங்க
ஊரை சுத்திப்பாரு.‌.(2)
 
வடக்கால மாந்தோப்பு
தெக்கால தென்னைந்தோப்பு
எல்லாமே இருக்குதுங்க
எங்கவூர்ல தானுங்க
 
நீயும் வந்து பாரு- எங்க
ஊரை சுத்திப்பாரு.‌.(2)
 
மேலும் ஞாபகம் வந்தால் எழுதுகிறேன்....
 
✍️செ. இராசா

ஔவைத் திங்கள் - 20 ----------------- மூத்தோர் சொல் கேள்

வள்ளுவன் கம்பனென மாகவிகள் வார்த்ததெல்லாம்
தெள்ளுதமிழ் பாவடியும் தேன்
(1)
 
கற்றோரில் மூத்தோரைக் காண்கின்ற போதெல்லாம்
கற்பிக்கும் நூலகமாய்க் காண்
(2)
 
மூத்தோர்சொல் கேட்டபடி முன்னேறிச் செல்லுங்கால்
ஈர்த்தவண்ணம் கிட்டும் எளிது
(3)
 
வேம்பாய்க் கசந்தாலும் வெல்லும்சொல் சொல்பவரை
வீம்பாய் நினையாமை நன்று
(4)
 
பண்பில் உயர்ந்தவரைப் பக்கத்தில் வைத்திருந்தால்
எண்ணம்சொல் மாறும் இனிது
(5)
 
முன்பிறந்தோர் எல்லோரும் மூத்தோராய் ஆவதில்லை
தன்குணத்தால் மூத்தோரே சான்று
(6)
 
விட்டுக் கொடுக்கின்ற மேன்மை குணமொன்றே
சட்டென்று காட்டிவிடும் சான்று
(7)
 
மறைமொழி காட்டும் வழிபற்றிச் செல்லும்
நிறைகுண மாந்தர்பின் நில்
(8)
 
தப்பென்றால் தப்பில்லை தட்டிடலாம் அச்சொல்லைத்
தப்பாமல் கேளாமை தப்பு
(9)
 
பெரியவர்சொல் கேளாத பிள்ளையின் பிள்ளை
பெரிதானால் கேட்காது பின்
(10)
 
✍️செ. இராசா

11/12/2022

ஹல்லோ பேபி நீ எனக்கு வேணும்

 


ட்ரை டரையாப் பண்ணிப்
போராடுறேன் நானும்
புரியாமலே
ஏன் சதிராடுராய்
அடி நீர்மோதி நீர் விலகுமா‌...
 
பிழைபோன்ற கானல்
நாம் காணும் கண்ணில்
அதைப்போயி நீ நம்பினாயே...
இதைப்போல வாழ்வில் ஏராளமுண்டு
அதற்காக நாம் மாறலாமோ?!
 
(ஹல்லோ பேபி நீ எனக்கு வேணும்)
 
வெயில்காலம் போனால்
மழைகாலம் தோன்றும்
இது போலெண்ணி (நீ) நடப்பாயே....
நாம் வாழ்ந்த வாழ்வை
எவரோடும் குறைவாய்
நீயாக எண்ணிக் கொள்ளாதே....
 
(ஹல்லோ பேபி நீ எனக்கு வேணும்)
 
✍️செ. இராசா

அட்லிபோல்

 


அதேமாவில் சுட்டால்
......அதேதானா என்போர்
அதேகொஞ்சம் அட்லிபோல்
......ஆக்க- இதேதான்பார்
மாவிலே இல்லை
.......மகத்துவம் என்றைக்கும்
நாவிலே மட்டும்தான் நம்பு!
 
✍️செ. இராசா

09/12/2022

வாங்கும் வரைக்கும்

 

வாங்கும் வரைக்கும்
.....வரமென்று காத்திருப்போர்
வாங்கியபின் ஏனோ
.....மனதிற்குள்- ஏங்குகிறார்
கொஞ்சம் பொறுத்திருந்தால்
.....கூடுதல் அம்சமுள்ள
வஞ்சிபோல் வந்திருக்கு மாம்!
 
✍️செ‌ இராசா