#ஔவைத்_திங்கள்_21
#குறுகத்_தரித்த_குறள்
குறும்பா எழுதியதாய்க் கொக்கரிக்கும் முன்னர்
குறள்பா பயின்றாயா கூறு.
(1)
இரண்டே அடியில் எழுசீரில் வைத்த
தரமும் திறமும்தான் சான்று.
(2)
சொல்லுஞ்சொல் வெல்ல சுருக்கமாய்ச் சொல்லென்று
சொல்லாமல் சொல்லுமோர் நூல்
(3)
அறப்படி ஏறி அதன்படி வாழ்ந்தால்
முறைப்படி கிட்டும் முதல்
(4)
கற்க கசடற கற்பவை யாதென்றால்
கற்றவை எல்லாம் கடுகு
(5)
முப்பாலில் வைத்த முதலாம்பால் நன்கறிந்தால்
தப்பாமல் வாழலாம் தான்
(6)
குறுஞ்செய்தி போலக் குறைவாகச் சொல்லிப்
பெறும்குறள் செய்தி பெரிது
(7)
உள்ளதெல்லாம் கற்க ஒருபிறவி போதாது
வள்ளுவம்தான் மாற்று வழி
(8.)
காதல் கவியையும் கச்சிதமாய்க் கட்டியதால்
காதலர்க்கும் கூட்டும் களிப்பு
(9)
படிக்கப் படிக்கப் பலன்தரும் நூலை
படித்தபடி ஏறு படி
(10)
செ. இராசா
19/12/2022
ஔவைத் திங்கள் - 21 (குறுகத் தரித்த குறள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment